×

நவகிரகங்களின் தோஷங்கள் நீங்கி எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றிபெற நவகிரக ஹோம பூஜை செய்யுங்கள்..

விண்ணில் சூரியன், சந்திரன் மற்றும் இன்ன பிற கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் பூமியின் மீதும், அதில் வாழும் உயிர்களின் மீதும் ஒரு வித தாக்கத்தை செலுத்தவே செய்கின்றன என்கிற உண்மையை நவீன விஞ்ஞானிகள் ஏற்றுக்கொள்ளவே செய்கின்றனர். இந்த உண்மையை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறிந்த நமது முன்னோர்கள் வானியல் சாஸ்திரம், ஜோதிடம் போன்ற கலைகளை உருவாக்கி கிரகங்கள், நட்சத்திரங்கள் பற்றி ஆராய்ந்தனர். மேற்கூறிய கிரகங்களின் நன்மையான பலன்களை பெற முன்னோர்கள் கடைபிடித்த விஞ்ஞான அடிப்படை கொண்ட ஒரு பூஜை முறை தான் நவகிரக ஹோமம் எனப்படும் ஹோம பூஜை முறை. இந்த “நவகிரக ஹோமம்” பற்றியும், அந்த ஹோமம் செய்வதால் நமக்கு உண்டாகும் நன்மைகள் குறித்தும் இங்கு அறிந்து கொள்ளலாம்.

விண்ணில் பல கிரகங்கள் இருந்தாலும் பூமிக்கு சற்று அருகாமையில் இருக்கும் கிரகங்களான சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், சுக்கிரன், சனி மற்றும் நிழல் கிரகங்களான ராகு  கேது ஆகிய நவகிரகங்கள் எனப்படும் ஒன்பது கிரகங்கள் மனிதர்களின் வாழ்வில் மிகுந்த ஆதிக்கம் செலுத்துவதை ஜோதிட, வானியல் சாஸ்திர நிபுணர்கள் கண்டறிந்தனர். இந்த நவகிரகங்கள் பூமிக்கு ஒவ்வொரு கோணத்தில் இருக்கும் நிலையே ஜாதகத்தில் கிரக பெயர்ச்சி எனப்படுகிறது. கிரகங்களின் நிலை பொறுத்து நன்மை மற்றும் தீமையான பலன்கள் நமக்கு உண்டாகின்றன. கிரகங்களின் பாதகமான தாக்கங்கள் நமக்கு ஏற்படாமல் இருக்க, குறிப்பிட்ட மந்திர பிரயோகம் மற்றும் அக்னி வேள்வி கொண்ட நவகிரக ஹோம பூஜை முறையை உண்டாக்கினார் நமது முன்னோர்கள். இந்த நவக்கிர ஹோமம் செய்யும் முறை பற்றி விரிவாக பார்ப்போம்.

நமது வீடுகளிலேயே நவகிரக ஹோமத்தை செய்யலாம் என்றாலும் நவகிரக ஹோமங்கள் பெரும்பாலும் நவகிரக சந்நிதி இருக்கும் கோயில்களில் அனுபவம் வாய்ந்த வேதியர்களை கொண்டு செய்வதன் மூலம் சிறப்பான பலன்களை பெற முடியும். நவகிரக ஹோமத்தை செய்வதற்கு உங்கள் ராசி, நட்சத்திரம் ஆகியவற்றிற்கு ஏற்ற சிறந்த முகூர்த்த தேதியை அனுபவம் வாய்ந்த ஜோதிடரிடம் கேட்டு, குறித்து கொள்ள வேண்டும். அப்படி குறிக்கபட்ட முகூர்த்த தேதியில் ஹோமங்கள் செய்வதில் அனுபவம் பெற்ற வேதியர்களை அணுகி, அவர்கள் கூறும் ஹோமத்திற்கு தேவையான பொருட்களை முன்னரே வாங்கி வைத்து கொள்ள வேண்டும்.

குறிக்கப்பட்ட நாளில், நல்ல முகூர்த்த நேரத்தில் வீட்டிலோ அல்லது கோயிலிலோ அக்னிகுண்டம் அமைத்து நவகிரகங்களுக்கான மந்திரங்கள் துதித்து, ஆஹுதிகளை ஹோம நெருப்பில் இட்டு ஹோமம் செய்யப்படும். இந்த ஹோமத்தில் நாம் நாம் நமது குடும்பத்துடன் பங்கு கொள்வது அவசியமாகும். நவகிரக ஹோமம் முடிந்த பின்பு அந்த ஹோமத்தை சிறப்பாக நடத்திய வேதியர்களுக்கு அரிசி, வஸ்திரம் ஆகியவற்றோடு தட்சிணை அளித்து அவர்களின் ஆசிகளை பெற வேண்டும். ஹோம பூஜை செய்யப்பட்ட பிறகு வேதியர்ளால் தரப்படும் ரட்சை எனப்படும் ஹோம பஸ்பம் மற்றும் குங்குமத்தை உங்கள் வீட்டின் பூஜை அறையில் வைத்து, அவற்றில் சிறிதளவு எடுத்து தினமும் நெற்றியில் திலகமிட்டு வருவதால் நவகிரக பகவான்கள் அருள் உங்களுக்கு கிட்டும்.

நவகிரஹ ஹோம பூஜை செய்து கொள்வதால் உங்களுக்கு நவகிரகங்களின் தோஷங்கள் நீங்கும். காரிய தடைகள் நீங்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றிபெறும். திருமண தடை, தாமதங்கள் நீங்கி விரைவில் திருமணம் நடக்கும். கல்வியில் பின் தங்கியிருக்கும் குழந்தைகள் கல்வி, கலைகளில் சிறப்பார்கள். நோய்கள் அண்டாத நீண்ட ஆயுள் உண்டாகும். தொழில், வியாபாரங்களில் இருந்த மந்த நிலை நீங்கி லாபங்கள் பெருகும். வீட்டில் வறுமை நிலை அண்டாமல் வளங்கள் பெருகும்.

Tags : Navagrahaka homa pooja ,attempts ,
× RELATED பூர்வீக நிலத்தை உறவினர்கள் அபேஸ்: டவர் மீது ஏறி டிரைவர் தற்கொலை முயற்சி