×

துரதிர்ஷ்டங்கள் நீங்கி யோகங்கள், அதிர்ஷ்டங்கள் ஏற்பட பிராம்மி தேவி வழிபாடு!!

நம்மில் பலர் மனிதர்களாக பிறந்தற்கு பதிலாக வேறு ஏதாவது உயிரினமாக பிறந்திருக்கலாம் என பல சமயங்களில் நினைத்திருப்போம். காரணம் ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகள் தினந்தோறும் வந்தபடியே இருக்கின்றன. இதில் சிலர் தாங்கள் பிறந்தது முதல் தற்போதைய தினம் வரை வாழ்வில் மகிழ்ச்சி என்பதை அறியாதவர்களாக, அதே நேரம் பல்வேறு வகையான கஷ்டங்களை அனுபவித்து வருபவர்களாகவும் இருக்கின்றனர். இப்படிப்பட்டவர்கள் தங்களின் துன்பங்கள் தீர கோயில்களுக்கு சென்று இறைவனை வழிபட்டாலும், சில தாந்த்ரீக பரிகாரங்களையும் அதனுடன் சேர்த்து செய்யும்போது கூடிய விரைவில் நல்ல பலன்களை கொடுக்கும். அப்படியான ஒரு அற்புத பரிகாரம் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

இன்று நமக்கு தெரிந்த நபர்களில் பலரும் தங்களின் வாழ்வில் ஏற்படுகின்ற பல கஷ்டங்களால் தங்களின் தலைவிதியை எண்ணி அடிக்கடி நொந்து கொள்வதை நாம் காணமுடியும். ஒரு நபர் பிறக்கின்ற நேரத்தில் சாதகமற்ற கிரக நிலைகளின் போது பிறந்தாலும், முன்வினை பயன்கள் காரணமாகவும் தற்காலத்தில் கஷ்டங்கள் நிறைந்த மன நிம்மதியற்ற வாழ்க்கை வாழும் ஒரு சூழல் ஏற்படுகிறது. மனிதர்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் கடவுளாக பிரம்மதேவர் கருதப்படுகிறார். அந்த பிரம்மதேவரின் அம்சம் கொண்ட சப்தகன்னியர்களில் ஒருவரான ஒரு பெண் தெய்வம் தான் பிராம்மி தேவி. இந்த பிராம்மி தேவி பிரம்ம தேவரின் அம்சமாக, அவரை போன்றே நான்கு தலைகளை கொண்டவராக இருக்கிறார்.

தாந்திரீக வழிபாட்டில் சப்தகன்னியர்கள் வழிபாடு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. வாழ்வில் சுகங்களை அருளுகின்ற தெய்வமான பிராம்மி தேவியை பூஜித்து தங்களுக்கு தேவையான பலன்களை தாந்த்ரீக முறைகளை பயில்பவர்கள் பெறுகின்றனர். அப்படியே பிராம்மி தேவியை வழிபட்டு பலன் அடைந்த தாந்திரீக ர்கள் கூறிய ஒரு பரிகாரத்தை பின்பற்றுவதால், நாமும் நம் தலைவிதி மாறுவதோடு வாழ்வில் அனைத்து நன்மைகளும் கிடைக்கப் பெறலாம்.

உங்கள் வீட்டின் பூஜை அறையில் அம்பாள் படத்திற்கு முன்பாக ஒரு சிறிய அளவு தாம்பாளத் தட்டில் மஞ்சள் தூள் கலந்த நீரை ஊற்றி, இரண்டு தீபங்களை ஏற்றி கிழக்குத் திசையை நோக்கி பார்த்தவாறு அந்த தட்டில் வைத்து, சிறிது கற்கண்டுகளை நைவேத்தியமாக வைத்து “ஓம் ப்ராம்மியே நமஹ” என்கிற மந்திரத்தை 108 முறை துதித்து வர வேண்டும். இந்த பரிகார வழிப்பாட்டை தினந்தோறும் பிரம்ம முகூர்த்த நேரமான அதிகாலை 4 மணி முதல் 6 மணிக்குள்ளாக செய்வதால் மட்டுமே எதிர்பார்த்த பலன்களை பெற முடியும்.

மேற்கூறிய முறையில் பிராம்மி தேவியை வழிபட்டு வருபவர்களுக்கு தங்கள் வாழ்வில் சிறிது, சிறிதாக நல்ல படியான மாற்றங்கள் ஏற்படுவதை காணமுடியும். மேலும் அவர்களின் வாழ்வில் துரதிர்ஷ்டங்கள் நீங்கி யோகங்கள், அதிர்ஷ்டங்கள் ஏற்படும். வறுமை நிலை நீங்கி செல்வங்கள் பெருகும். வாழ்க்கையில் இத்தனை ஆண்டு காலம் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்தவர்களுக்கு இனிவரும் காலங்களில் அனைத்தும் நன்மையாகவே அமையும்.

Tags :
× RELATED சித்ரா பெளர்ணமி சிறப்புகள்!