×

224 திருக்கோயில்களுக்குச் சொந்தமான ரூ.3000 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மீட்பு.: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி, 224 திருக்கோயில்களுக்குச் சொந்தமான ரூ.3000 கோடி மதிப்பிலான சொத்துக்கள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டு சுவாதீனம் பெறப்பட்டுள்ளது என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார். சென்னை, நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று (19.07.2022) இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தரமோகன் முன்னிலையில் அனைத்து மண்டல இணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் தனி வட்டாட்சியர்களுடன் திருக்கோயில் நிலங்கள் தொடர்பாக சீராய்வுக் கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்தில்  அமைச்சர் அவர்கள் பேசியதாவது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களுக்குச் சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. 07.05.2021 முதல் 15.07.2022 வரை 224 திருக்கோயில்களுக்குச் சொந்தமான 1906.39 ஏக்கர் நிலமும், 497 கிரவுண்டு 1064 சதுரஅடி மனைகளும், 53 கிரவுண்டு 1738 சதுரஅடி கட்டடமும், 36 கிரவுண்டு 1867 சதுரஅடி திருக்குளமும் திருக்கோயில்கள் வசம் சுவாதீனமாக பெறப்பட்டுள்ளது. இதுவரை மீட்கப்பட்ட சொத்தின் மதிப்பு சுமார் ரூ.3000.21 கோடி ஆகும். இதனை தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள திருக்கோயில் நிலங்களை கண்டறிந்து ஆக்கிரமிப்புதாரர்களிடமிருந்து மீட்டு திருக்கோயில் மற்றும் கட்டளைகளுக்குச் சொந்தமான நிலங்களை சுவாதீனம் பெறுவதற்கு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், திருக்கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களை அளவிடுதல், எல்லைக் கற்கள் நடுதல் பொறுத்தவரையில், உரிமம் பெற்ற நில அளவர்களைக் கொண்டு 08.09.2021 முதல் 15.07.2022 வரை 59,435.24 ஏக்கர் பரப்பளவுள்ள நிலங்கள் அளவீடு செய்யப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக அளவீடு செய்யப்பட்ட புலங்களை வரைவு செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது. இதுவரை 16,287 புலங்கள் அளவீடு செய்யப்பட்டதில் 12,417 புலங்கள் வரைவு செய்யப்பட்டுள்ளன. இதுவரையில் 229 கிராமங்களில் அளவீடு செய்யும் பணி முடிக்கப்பட்டுள்ளன. திருக்கோயில் நிலங்கள் அளவிடும் பணி 20 மண்டலங்களிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அனைத்து பணிகளையும் விரைந்து மேற்கொண்டு சொத்துக்களை மீட்டு திருக்கோயிலுக்கு வருவாயை அதிகப்படுத்தும் பணிகளில் அலுவலர்கள் முழுமூச்சாக  ஈடுபட வேண்டும் .அதேபோல குடமுழுக்கு நடைபெற வேண்டிய காலம் முடிவடைந்தும் மீண்டும் குடமுழுக்கு நடத்திட ஏற்பாடுகள் நடைபெறாத திருக்கோயில்கள் மற்றும் திருப்பணிகள் தொடங்கி நீண்ட காலமாக முடிவடையாமல் உள்ள திருக்கோயில்களின் விவரங்களை கணக்கெடுப்பு செய்து துரிதமாக பணிகளை மேற்கொள்ள மண்டல இணை ஆணையர்கள் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். நாம் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றினால்தான் திருக்கோயில்களின் சொத்துகள் பாதுகாக்கப்படுவதோடு வருவாயும் கிடைக்கும். அதற்கு ஏற்றார் போல உங்களது செயல்பாடுகள் இனி வரும் காலங்களிலும் அமைந்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என அமைச்சர் கூறியுள்ளார். இக்கூட்டத்தில் கூடுதல் ஆணையர்கள் ந.திருமகள், திருமதி சி.ஹரிப்ரியா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். …

The post 224 திருக்கோயில்களுக்குச் சொந்தமான ரூ.3000 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மீட்பு.: அமைச்சர் சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.

Tags : Tirukoils ,Minister ,Seagarbabu ,Chennai ,Tamil Nadu ,Chief Minister ,G.K. ,Stalin ,Sekarbabu ,Dinakaran ,
× RELATED அபராத தொகை இல்லாமல் மின் கட்டணம்...