சென்னை: தமிழ்நாடு திருநாள் விழா இன்று சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழறிஞர்களுக்கு விருதுகளும் மாணவர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டன. பேரறிஞர் அண்ணா அவர்கள் நம் மாநிலத்திற்குத் தமிழ்நாடு எனப் பெயர் சூட்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஜூலை 18ஆம் நாளைப் போற்றும் வண்ணம் தமிழ்நாடு திருநாள் என்ற பெயரில் மாபெரும் நிகழ்ச்சி சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.இவ்விழாவின் முதல் நிகழ்ச்சியாக மாநிலத் திட்டக் குழுவின் துணைத் தலைவர் முனைவர் ஜெ. ஜெயரஞ்சன் அவர்களின் தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் ’தமிழ்நாடு உருவான வரலாறு’ என்ற தலைப்பில் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்களும், ’மொழிவாரி மாகாணமும் தமிழ்நாட்டில் நடந்த போராட்டமும்’ என்ற தலைப்பில் திரு. ஆழி செந்தில்நாதன் அவர்களும், ’தமிழகத்துக்காக உயிர்கொடுத்த தியாகிகள்’ என்ற தலைப்பில் திரு. வாலாசா வல்லவன் அவர்களும் ’தாய்நாட்டுக்குப் பெயர் சூட்டிய தனயன்’ என்ற தலைப்பில் முனைவர் ம. இராசேந்திரன் அவர்களும் ’முத்தமிழறிஞர் கலைஞர் உருவாக்கிய நவீன தமிழ்நாடு’ என்ற தலைப்பில் மருத்துவர் நா. எழிலன் அவர்களும் கருத்துரையாற்றினர்.இவ்விழாவில், மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் திரு. துரைமுருகன் அவர்கள் 2021ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட புதிய விருதான இலக்கிய மாமணி விருது திரு.கோணங்கி அவர்களுக்கும், திரு. இரா. கலியபெருமாள் அவர்களுக்கும் அண்மையில் மறைந்த திரு. கு. சின்னப்ப பாரதி அவர்களின் சார்பாக அவரது குடும்பத்தினரிடமும் வழங்கினார். இலக்கிய மாமணி விருது பெற்ற விருதாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து ஐந்து இலட்சம் உரூபாய்கான காசோலையும் தங்கப் பதக்கமும் தகுதியுரையும் வழங்கப்பட்டன. மேலும், 2021ஆம் ஆண்டிற்கான தமிழ்த் தென்றல் திரு.வி.க.விருது திரு. கயல் (கோ) தினகரன் அவர்களுக்கும், கபிலர் விருது பாவலர் கருமலைத் தமிழாழன் (எ) கி. நரேந்திரன் அவர்களுக்கும், 2021 ஆம் ஆண்டிற்கான உ.வே.சா விருது மருத்துவர் இரா. கலைக்கோவன் அவர்களுக்கும், அம்மா இலக்கிய விருது முனைவர் மு. சற்குணவதி அவர்களுக்கும், காரைக்கால் அம்மையார் விருது முனைவர் இரா. திலகவதி சண்முகசுந்தரம் அவர்களுக்கும் வழங்கினார். விருதாளர்களுக்குப் பொன்னாடை அணிவித்து விருதுத்தொகையாக இரண்டு இலட்சம் உரூபாய்க்கான காசோலையும் தங்கப் பதக்கமும் தகுதியுரையும் வழங்கப்பட்டன. மேலும், தமிழ்நாடு திருநாளை முன்னிட்டு மாநில அளவில் நடத்தப்பெற்ற பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் முதலிடம் பெற்ற திருவாரூர் மாவட்டம் ஸ்ரீ ஜி. ஆர். எம். பெண்கள் மேனிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயிலும் செல்வி சு. நறுமுகை அவர்களுக்கு ரூபாய் 50,000/-, இரண்டாமிடம் பெற்ற சிவகங்கை மாவட்டம் வித்யாகிரி பதின்ம மேனிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு பயிலும் செல்வன் இர. பிரபாகரன் அவர்களுக்கு ரூபாய் 30,000/-, மூன்றாமிடம் பெற்ற கடலூர் மாவட்டம் என். எல். சி. பெண்கள் மேனிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயிலும் செல்வி ஸ்ருதிகா அவர்களுக்கு ரூபாய் 20,000/- பரிசுத்தொகை, இதேபோன்று, கட்டுரைப் போட்டியில் முதலிடம் பெற்ற சிவகங்கை மாவட்டம் புனித மரியன்னை பெண்கள் மேனிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு பயிலும் செல்வி பா. தயாழினி அவர்களுக்கு ரூபாய் 50,000/-, இரண்டாமிடம் பெற்ற செங்கற்பட்டு மாவட்டம் வெங்கம்பாக்கம் அரசு மேனிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு பயிலும் செல்வி சொ. துர்கா அவர்களுக்கு ரூபாய் 30,000/-, மூன்றாமிடம் பெற்ற வேலூர் மாவட்டம் பென்னாத்தூர் அரசு மேனிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு பயிலும் செல்வி தி. யோகபிரியா அவர்களுக்கு ரூபாய் 20,000/-பரிசுத் தொகையுடன் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கினார். முன்னதாக, இவ்விழாவில் தலைமைச் செயலாளர் அவர்கள் வரவேற்புரையும் மாண்புமிகு செய்தித் துறை அமைச்சர் திரு. மு.பெ. சாமிநாதன் அவர்கள் முன்னிலையுரையும் மாண்புமிகு தொழில்கள், தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப் பண்பாடு, தொல்லியல் துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள் தலைமையுரையும் நிகழ்த்தினர். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொளி வாயிலாக விழாப் பேருரையினை நிகழ்த்தினார். அவர் தமது உரையில், “எத்தனையோ விழாக்கள், நிகழ்ச்சிகள் இருந்தாலும், தமிழ்நாடு திருநாள் என்ற நிகழ்ச்சிக்கு இணையானது எதுவுமில்லை. ஏனென்றால், ‘தமிழ்நாடு நாள்’, ‘தமிழ்நாடு திருநாள்’ என்று சொல்லும்போதே நமது உள்ளத்தில் ஒரு மகிழ்ச்சி ஏற்படுகிறது. அதனைச் சொல்லும்போதே ஒரு ஆற்றல் பிறக்கிறது எனவும் என்னுடைய ஒரே வருத்தம் என்பது கலைவாணர் அரங்கிற்கே நேரடியாக வந்து கலந்து கொள்ள இயலவில்லையே என்பது தான்” மேலும், செந்தமிழ் நாடெனும் போதினிலே -இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே – எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே -ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே – என உணர்ச்சி பொங்கக் குறிப்பிட்டார்.நிகழ்ச்சியின் நிறைவாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் திரு. மகேசன் காசிராஜன், இ.ஆ.ப., அவர்கள் நன்றியுரையும் ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், மாண்புமிகு மேயர் மற்றும் துணை மேயர், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி உறுப்பினர்கள், அரசு உயர் அலுவலர்கள், தமிழறிஞர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்….
The post தமிழ்நாடு திருநாள் விழாவையொட்டி தமிழறிஞர்களுக்கு விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக பேருரை appeared first on Dinakaran.
