×

தேனி ரிங்டோனுக்கு பயந்து செல்போனை சுவிட்ச் ஆப் செய்த இலை கட்சியினர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘வடக்கு சாய்ந்தது… தெற்கு ஆட்டம் காட்டுகிறது என்று சேலம்காரர் புலம்ப, தேனிக்காரரோ அழுகையை எப்படி நிறுத்துவது என்று தெரியாமல் தத்தளிக்கிறாராமே, அப்படியா…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘இலை கட்சியில் ஒற்றை தலைமை வேண்டுமா.. வேண்டாமா என்ற விவாதம் போய்விட்டதாம். காரணம் சேலம்காரர் இடைக்கால செயலாளராக தன்னை உயர்த்தி கொண்டார். பழைய தேர்தல் ஆணைய ஆவணங்களை காட்டி, நான் தான் இன்னும் ஒருங்கிணைப்பாளர் என்று தேனிக்காரர் உரக்க குரல் கொடுத்து வருகிறார். அதெல்லாம் பழைய கதை. இப்போது இலை கட்சியில், கட்சி ஆபிசை யார் கைப்பற்றுவது என்று போர்தான் உச்சக்கட்டத்தில் இருக்கிறதாம். வழக்கம்போல வடக்கு, மேற்கு மாவட்டங்கள் எல்லாம் மாஜி அமைச்சர்களின் கீழ் சேலம்காரருக்கு சப்போர்ட் செய்யறாங்க. ஒன்று இரண்டு டிக்கெட் தேனிக்கு சப்போர்ட் பண்றாங்க. ஆனால், தென்மாவட்டங்கள் மட்டும் இன்றுவரை சேலத்துக்கும், தேனிக்கும் தண்ணீ காட்டுகிறதாம். யாருக்கும் வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கவில்லையாம். கடைசி முடிவு கடைசி விநாடி தெரியும் வரை அடக்கி வாசிப்போம். ஒருவரை ஆதரித்து மற்றவர்களை பகைத்து கொண்டால் வருவாய் மட்டுமல்லாமல் பதவியும் பறிபோகும் என்பதில் தெளிவாக இருப்பதால், பெரும்பாலான நிர்வாகிகள் அடக்கியே வாசிக்கின்றனர்.  தேனிக்காரரின் தீவிர விசுவாசிகள் கூட இப்போது அவருக்கு ஆதரவு அளித்து ‘நம்ம  தலையில் நாமே மண் அள்ளி போடவா’ என ஒதுங்கிட்டாங்களாம். ஒரு சிலர் மட்டுமே  அவர் மீதான விசுவாசத்தை காட்ட சமூக வலைத்தளங்களில் மட்டும் குரல் கொடுத்து  வருகின்றனர். பொதுக்குழு விவகாரங்களில் தென்மாவட்டங்களில் இருந்து தனக்கு பெரிய ஆதரவு கிடைக்கும் என நம்பியிருந்த தேனிக்காரர் சமீபகாலமாக வரும் அழுகையை நிறுத்த பெரும்பாடு பட்டு வருகிறாராம். தேனிக்காரர் தரப்பு தங்களிடம் பேசி ஆதரவு  கேட்டுவிடுமோ என பயந்த நிர்வாகிகள் சிலர் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து  வைத்துள்ளனராம். கட்சி எப்போது உடைந்தாலும் இலை எங்கு செல்கிறதோ, அங்குதான்  தங்கள் ஆதரவு என சில நிர்வாகிகள் ஓப்பனாகவே சொல்லி வருகின்றனர்… தென் மாவட்டங்களின் இந்த ஆட்டத்தால் ஆடிப்போய் இருக்கிறார் தேனிக்காரர்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘இலைக்கட்சி மாஜி அமைச்சர் மணியானவர் பிளே பாயாக இருந்தார்.. இப்போது வேறு ஒருவர் உருவாகி இருக்கிறாராமே, அப்படியா…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘மஞ்சள் மாவட்டத்துல தொழிற்சாலைகள் அதிகம் கொண்ட ஊரை சேர்ந்த இலைக்கட்சி ஒன்றிய செயலாளர் லேடீஸ் விவகாரத்தில் செம கில்லாடியாம். அர்ஜூனனின் மறுபெயர் கொண்ட இவரது அந்தரங்க அத்துமீறல் எல்லை மீறி போயிட்டு இருக்காம். இலைக்கட்சியில ஒற்றை தலைமை குழப்பம், அடி-தடி-ன்னு பிரச்னை போயிட்டு இருக்கிறதால இவரை கண்டுக்க ஆளில்லை. அதனால், இவரது ஆட்டம் வரம்பு மீறுது. உள்ளூர் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் இவர் கலந்துகொண்டுள்ளார் என்ற தகவல் தெரிந்தால், மகளிர் அணியினர் யாரும் உள்ளே செல்வதில்லை, தெறிச்சு ஓடுகிறார்கள்.. பல பேர், இவருக்கு பயந்து, ஆலோசனை கூட்டம் நடத்துறதே இல்லையாம்… இவர், உள்ளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகுந்து அங்குள்ள ஒரு விதவை பெண்ணை, அழைத்துள்ளார். அப்பெண் மறுக்கவே, தொடர்ந்து டார்ச்சர் கொடுத்துள்ளார். இந்த விவகாரம் வெளியே தெரிந்ததால், அங்கிருந்து எஸ்கேப் ஆகி விட்டார். ஆனாலும், லோக்கல் போலீஸ் மூலமாக இந்த பிளே பாய்-க்கு லாடம் கட்ட, சந்தர்ப்பம் பார்த்து வருகிறார் அப்பெண் ஊழியர். அவருக்கு ஆதரவாக பெண்கள் அமைப்பும் களம் இறங்கி இருப்பதால பிளேபாய் அநேகமாக போக்சோ சட்டத்துக்கு போயிடுவார்னு பேசிக்கிறாங்க…’’ என்றார் விக்கியானந்தா.‘‘ஒன்றிய அரசின் இணையமைச்சர் நிகழ்ச்சியில் என்ன பிரச்னை…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் கிஷன்ராவ் கராத் குமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசு நிகழ்ச்சி, கட்சி நிகழ்ச்சி, தனிப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இதன் ஒரு பகுதியாக நாகர்கோவிலில் எஸ்எல்பி அரசு மேல்நிலை பள்ளியில் ஒன்றிய அரசின் நலத்திட்டங்கள் குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் கட்சியினரே திரளாக கலந்துகொண்டனர். ஆனால் முக்கிய அதிகாரிகள் போதிய அளவில் வருகை தரவில்லை என்று கூறி நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஒரு சில அதிகாரிகளையும், அவர்களின் வாகனங்களையும் முற்றுகையிட்டு தாமரை கட்சியினர் அவர்களுடன் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். ஆனால் என்ன நிகழ்ச்சி என்ற தகவல் தங்களுக்கு முறையாக தெரிவிக்கவில்லை என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். அதிகாரிகளுக்கு விவரம் சொல்லாமல் வந்தால் எப்படி அவர்கள் பங்கேற்க முடியும்.. இது கூட தாமரை கட்சியினருக்கு தெரியவில்லையே என்ற தமிழக அதிகாரிகள் புலம்பினர்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ டெல்டாவில் மதில் மேல் பூனையாக இருக்கும் இரண்டு மாஜி அமைச்சர்கள் பற்றி சொல்லுங்க… ’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘இலை கட்சியில் சேலத்துக்காரர் மற்றும் தேனிக்காரர் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. நெற்களஞ்சியம், மனுநீதி சோழன், கடலோர ஆகிய மாவட்டங்களை சேர்ந்த இலை கட்சி முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சேலத்துக்காரர் பக்கமா. அல்லது தேனிக்காரர் பக்கம் தாவலமா என எந்த முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருந்து வருகிறார்களாம். முக்கியமாக, இரண்டு மாஜி அமைச்சர்கள் எப்போது வேண்டுமானாலும் அணி மாறலாம் என்ற ரகசிய தகவல் தற்போது வெளியில் லீக் ஆகி உள்ளதாம். இந்த இரண்டு மாஜி அமைச்சர்களை தங்கள் பக்கம் இழுக்கும் வேலையில் சின்னமம்மி டீம் முழு மூச்சில் ஈடுபட்டு உள்ளதாம். இலை கட்சியில் நடந்து வரும் அதிகார மோதலை, கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்களாம். விரைவில், டெல்டா மாவட்டத்தை சேர்ந்த இலை கட்சி தொண்டர்கள் அதிரடி முடிவு எடுக்க தயாராகி வருகிறார்களாம். இதில் முக்கிய நிர்வாகிகள் பலர் கட்சி தாவவும் முடிவு செய்து அதற்கான வேலையில் இறங்கியுள்ளார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா. …

The post தேனி ரிங்டோனுக்கு பயந்து செல்போனை சுவிட்ச் ஆப் செய்த இலை கட்சியினர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Theni ,wiki ,Yananda ,Salemkar ,Thenikar ,
× RELATED நிதி நிறுவனம் ₹6 கோடி மோசடி: தேனி குற்றப்பிரிவில் புகார்