×

35 வருடமாக முடங்கி கிடப்பதால் வாலிநோக்கத்தில் கப்பல் கட்டும் பணி நடக்கவில்லை: மீண்டும் அமைக்கப்படுமா? எதிர்பார்ப்பில் மீனவர்கள்

சாயல்குடி: சாயல்குடி அருகே கப்பல் கட்டும் பணி, கப்பல் போக்குவரத்து இருந்த வாலிநோக்கத்தில், துறைமுகம் அமைக்கும் பணிகள் 35 வருடங்களாக கிடப்பில் போடப்பட்டதால் காணாமல் போய் வருகிறது. மீண்டும் புதிய துறைமுகம் அமைக்க வேண்டும் என மத்திய,மாநில அரசுகளுக்கு மீனவ கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாயல்குடி அருகே வாலிநோக்கத்தில் மிக ஆளமான கடற்கரை உள்ளது. இப்பகுதியில் ஏர்வாடி, அடஞ்சேரி, சின்னஏர்வாடி, கீழமுந்தல், மேலமுந்தல், மாரியூர், காந்திநகர், ஒப்பிலான் உள்ளிட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. கப்பல்கள் வந்து நிறுத்தும் அளவிலான ஆழமான கடல் என்பதால் துறைமுகம் இல்லாத 1980 ஆண்டுகளில் வணிக ரீதியான கப்பல் போக்குவரத்து இயக்கியுள்ளது. இதனால் பல்வேறு நாடுகளிலிருந்து சரக்கு கப்பல்கள் போக்குவரத்து இருந்துள்ளது. தொடர்ந்து கப்பல் கட்டும் பணிகளும் நடந்தது. கப்பல் போக்குவரத்துடன், மீன்பிடி தொழிலும் கொடி கட்டி பறந்துள்ளது. இதனால் வாலிநோக்கம் பகுதியில் துறைமுகம் அமைக்க இப்பகுதி மீனவ கிராம மக்கள் பல ஆண்டுகளாக ஒன்றிய, மாநில அரசு பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை ஏற்று கடந்த 1986ம் ஆண்டு வாலிநோக்கத்தில் மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு, கடலில் அளவிடும் மிதவைகள் மிதக்க விடப்பட்டு, முதற்கட்ட பணிகள் துவங்கப்பட்டது. அப்போது 100 படகுகளை நிறுத்தும் அளவிலான ஜெட்டி பாலம், கப்பல் நிறுத்தும் இடம், மீன் பதனிடும் குளிர்சாதன கூடம், கருவாடு காயப்போட உலர்தளம், வலை பின்னும் கூடம், மீனவர் ஓய்வரை, மீன்வளத்துறை இயக்குனர் அலுவலகம், துறைமுகம் அலுவலகம், படகு பழுது பார்க்கும் மெக்கானிக் ஷாப் உள்ளிட்டவை கட்டிமுடிக்கப்பட்டது.   துறைமுகம் திட்ட வரைவு  படி ஆங்கில எழுத்தான ஈ வடிவிலான படகு நிறுத்தும் தளம் அமைக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு பகுதி மட்டுமே கட்டி முடிக்கப்பட்டது. மீதமுள்ள இரண்டு பகுதி கட்டுதல், கூடுதல் கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்பட்டுத்துதல் உள்ளிட்ட அடுத்த கட்ட பணிகளுக்கும், கூடுதல் நிதி உதவி கேட்டு அப்போதைய மத்திய அரசிடம் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஆனால் அனுமதி கிடைக்காததால் துறைமுகம் அமைக்கும் பணியை மேற்கொண்ட ஒப்பந்த நிறுவனம் பணிகளை முழுமையாக முடிக்காமல் பாதியிலேயே விட்டுச் சென்றுள்ளது. தற்போது 35 வருடங்கள் ஆகியும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எடுக்காததால், கட்டிடங்கள் அனைத்தும் உருக்குலைந்து கிடக்கிறது. இதுகுறித்து வாலிநோக்கம் கிராமத்தினர் கூறும்போது, வாலிநோக்கம் கடற்கரை இயற்கையிலேயே ஆழமான கடல் பகுதி ஆகும். இங்கு 1980களில் கப்பல் தயார் செய்யப்படும் கப்பல் கட்டும் பணியும் நடந்தது. இதனால் இங்கு பல்வேறு நாடுகளிலிருந்து வணிக ரீதியிலான சரக்கு கப்பல் போக்குவரத்து இருந்தது. மீன் பிடித்தொழிலும் கொடி கட்டி பறந்ததால், வர்த்தகத்தில் அந்நிய செலவானியை அதிகரித்து கொடுத்தது இந்த கடற்கரை.  இங்கு 1986 ல் துறைமுகம் அமைக்கும் பணி நடந்தது. ஆனால் போதிய நிதி ஒதுக்கீடு இன்றி 1990 ல் துறைமுகம் அமைக்கும் பணியை மேற்கொண்ட நிறுவனம் கிடப்பில் போட்டுவிட்டு சென்றது. இதனால் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பீட்டிலான கட்டிடங்கள், பொருட்கள், இயந்திரங்கள் நாசமாகி கிடக்கிறது. துறைமுகம் அமைப்பதற்காக ஆழப்படுத்தப்பட்ட பகுதி தற்போது மணல் சூழ்ந்து மணல் மேடாக உள்ளது. மீனவர் சங்க பிரதிநிதி ஒருவர் கூறும்போது, இங்கு 200க்கும் மேற்பட்ட நாட்டுபடகுகள், 100க்கும் மேற்பட்ட விசை படகுகளில் மீன்பிடித்தொழில் செய்து வருகிறோம், ஆனால் கடற்கரையில் பாதுகாப்பாக படகுகளை நிறுத்தி வைக்க, பழுது பார்க்க, எரிபொருள் நிரப்புவதற்கு வசதிகள் கிடையாது. மேலும் வாலிநோக்கம் கடல் பகுதியில் அரசு உப்பளம் உள்ளிட்ட உப்பு நிறுவனங்கள் அதிகமாக உள்ளது. இறால் பண்ணையும் உள்ளது. இதனால் இப்பகுதியில் கடல்சார்ந்த தொழில்கள் அதிகளவில் நடக்கிறது. இதனால் இப்பகுதி மீனவர்கள் மட்டுமின்றி சுற்றுவட்டார கிராம மக்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கிறது. எனவே கிடப்பில் கிடக்கும் துறைமுகத்தை ஆய்வு செய்து, மீண்டும் துறைமுகம் அமைக்க ஒன்றிய, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.எழில் கொஞ்சும் அழகு கடற்கரையில் ஒருபக்கம் ஆக்ரோஷமான கடல் அலையும், ஒருபக்கம் அமைதியாக நிலையில் கடல் இருப்பதாலும், இயற்கையில் அழகிய மணல் திட்டு அமைந்துள்ளது. அலை மோதும் கடல்புற்களுடன் கூடிய அழகிய பாறைகள் என ரம்மியமான சூழ்நிலை, உப்புநீர் சூழ்ந்த கடல் நடுவே சுவையான நல்லதண்ணீர் கிணறுகள் என எழில் கொஞ்சும் அழகுடன் கடற்கரை அமைந்துள்ளது. இதனால் வெளியூர் மட்டுமின்றி பல்வேறு வெளிமாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர். எனவே சுற்றுலா தலமாக்க வேண்டும் என்றனர்….

The post 35 வருடமாக முடங்கி கிடப்பதால் வாலிநோக்கத்தில் கப்பல் கட்டும் பணி நடக்கவில்லை: மீண்டும் அமைக்கப்படுமா? எதிர்பார்ப்பில் மீனவர்கள் appeared first on Dinakaran.

Tags : Valiwan ,Chayalkudi ,Valinokum ,
× RELATED இலங்கைக்கு கடத்த முயன்ற இரண்டு டன் பீடி இலைகள் பறிமுதல்