இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் உயிர் தப்பிய சில தமிழ்ப் போராளிகள், போருக்குப் பிறகான தங்கள் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க எப்படிப் போராடுகிறார்கள் என்பது கதை. போரில் தனது கர்ப்பிணி மனைவியைப் பறிகொடுத்தவர், சுந்தரம் (புதியவன் ராசய்யா). போராடி உயிர்நீத்த ஒருவரது மனைவி, கஸ்தூரி (நவயுகா குகராஜா). ஆட்டிசம் பாதித்த அனாதை இளம்பெண், அஜா (அஜாதிகா புதியவன்).
தங்களுக்கான எதிர்காலத்தை உருவாக்க, பாதிக்கப்பட்ட பெண்களின் மறுவாழ்வுக்காக சங்கம் ஆரம்பிக்க அவர்கள் முயற்சிக்கின்றனர். இதையடுத்து இலங்கை அரசுக்கு தகவல் கிடைத்து, புதியவன் ராசய்யாவை சித்திரவதை செய்து ரோட்டில் வீசுகின்றனர். இறுதியில் அவரும், நவயுகா குகராஜாவும் தங்கள் லட்சியத்தில் ஜெயித்தார்களா என்பது எதிர்பாராத கிளைமாக்ஸ். 2012களில் சம்பவங்கள் நடக்கிறது.
கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் சொந்த மண்ணையும், தமது மக்களையும் இழந்து அகதிகளானவர்களின் வாழ்க்கையை, அவர்களின் வலியை யதார்த்தமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் புதியவன் ராசய்யா. போருக்குப் பிறகான வறுமை, ஆதரவற்ற நிலை, வேலை பாகுபாடு ஆகியவற்றைச் சொன்ன அவர், சில கேரக்டர்களின் கண்ணியத்தையும் காப்பாற்றி இருக்கிறார். பப்ளிசிட்டிக்காக செய்யப்படும் நிதியை நவயுகா குகராஜா ஏற்க மறுப்பதில் தன்மானம் பளிச்சிடுகிறது.
உயிர் தப்பியவர்களின் வாழ்க்கையையும், அவர்களின் எதிர்காலத்துக்கான வெற்றிடத்தையும், தன் இனத்தைச் சேர்ந்தவர்களாலேயே புறக்கணிக்கப்படுவதையும் படம் சித்தரித்துள்ளது. அனைவரும் இலங்கைத் தமிழில் பேசியிருக்கின்றனர். பெருமாள் காசி, நூர்ஜஹான், ஜெகன் மாணிக்கம் ஆகியோர் இயல்பாக நடித்துள்ளனர்.
சர்வதேச பட விழாக்களில் 17 விருதுகள் பெற்றுள்ள இப்படத்தின் இலங்கை காட்சிகளை மஹிந்த அபேசிங்க, இந்திய காட்சிகளை சி.ஜே.ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளனர். அஸ்வமித்ராவின் பின்னணி இசை, காட்சிகளை நகர்த்த உதவியுள்ளது. ஒரு பெண் தடம் மாறும் காட்சியை நீக்கியிருக்க வேண்டும். முரண்பட்ட கருத்துகளும், சொன்ன விஷயத்தில் ஏதோ உள்குத்து இருப்பதாகவும் திரைக்கு வந்த பிறகு சர்ச்சைகள் ஏற்படலாம்.