×

அதிமுக பொதுக்குழுவுக்கு தடைகோரி ஓ.பி.எஸ் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி: ஐகோர்ட் தீர்ப்பு

சென்னை: அதிமுக., பொதுக்குழு கூட்டத்துக்கு தடைக்கோரி  ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. வானரகத்தில் கடந்த பொதுக்குழுவில் அனைத்து தீர்மானங்களும் ரத்து செய்யப்பட்டு, அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்ந்தெடுக்கப்பட்டார் . அப்போது பொதுக்குழு ஜூலை 11ல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த பொதுக்குழுவுக்கு தடை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர்  வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கு விசாரணை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு கடந்த வெள்ளிக்கிழமை நடந்தது. அப்போது, அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி. அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் ஆகியோர் சார்பில் மூத்த வக்கீல் விஜய் நாராயண், வக்கீல்கள் எஸ்.ஆர்.ராஜகோபால், நர்மதா சம்பத் ஆகியோரும், ஓ.பன்னீர்செல்வம் சார்பில் மூத்த வக்கீல்கள் குரு கிருஷ்ணகுமார், ஸ்ரீராம், சி.திருமாறன் ஆகியோரும் ஆஜராகி வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, இந்த வழக்கின் தீர்ப்பு திங்கள் கிழமை காலை 9 மணிக்கு பிறப்பிக்கப்படும் என்று அறிவித்தார். இன்று காலை 9.15 மணிக்கு பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று காலை 8.55 மணிக்கு நீதிமன்ற அறைக்கு வந்த நீதிபதி தனது தீர்ப்பை 8.58 மணிக்கு வாசித்தார். தீர்ப்பில் கூறியிருப்பதாவது: அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிப்பதற்கான முகாந்திரம் இந்த வழக்கில் இல்லை. உட்கட்சி விவகாரத்தில் பெரும்பாலும் நீதிமன்றங்கள் தலையிடுவதில்லை. ஜனநாயக முறைப்படி, உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்படும்போது பொதுக்குழுவில்தான் அதை தீர்க்க வேண்டும். பெரும்பான்மையினரின் முடிவே அதில் இறுதியாகும். கட்சிக்குள் ஏற்படுகின்ற பிரச்னையை கட்சியின் விதிகளின் படிதான் தீர்வு காண வேண்டுமே தவிர, அதற்காக நீதிமன்றத்தை அணுக முடியாது. அதிமுகவில் மொத்தம் உள்ள 2,665 பொதுக்குழு உறுப்பினர்களில் 2,190 பேர் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று கடந்த ஜூன் 23ம் தேதி நடந்த பொதுக்குழுவில் கையெழுத்து போட்டு கொடுத்துள்ளனர். அதன்படி பொதுக்குழு 11ம் தேதி நடைபெறும் என்று அன்றே அறிவிப்பு வெளியிடப்பட்டது.  அதுமட்டுமல்லாமல் பொதுக்குழு தேதி அறிவிப்பு ஊடகங்கள் மூலமாகவும் அறிவிக்கப்பட்டு விளம்பரமும் செய்யப்பட்டுள்ளது. கட்சி விதி 19(7) பொதுக்குழு கூட்டுவதற்கு 15  நாட்களுக்கு முன்பு உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறுகிறது. ஆனால், எழுத்துப்பூர்வமாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறவில்லை. பொதுக்குழு தேதி கடந்த பொதுக்குழுவிலேயே அறிவிக்கப்பட்டுள்ளதால் அது சட்டப்படியானதுதான். கட்சி உறுப்பினர்களில் செல்வாக்கை பெற வேண்டிய  மனுதாரர் நீதிமன்றத்தை ஒரு கருவியாக பயன்படுத்தியுள்ளார்.கட்சியின் பொதுக்குழுவை எதிர்கொள்வதற்கு பதிலாக கட்சியின் முக்கிய பதவியில் உள்ள ஒருங்கிணைப்பாளர் நீதிமன்றத்தை நாடி வந்திருப்பது துரதிருஷ்டவசமானது. ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் கட்சியின் மூத்த தலைவர்  உறுப்பினர்களை சமாதானம் செய்து கட்சி நலன் மற்றும் வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் உறுப்பினர்களின் நம்பிக்கையை பெரும் வகையில் பொதுக்குழுவை அணுகுவதை விடுத்து ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை நாடி நீதிமன்றத்தின் மூலமாக சாதிக்க முயற்சிக்கிறார். ஆயிரக்கணக்கான உறுப்பினர்களின் ஒருங்கிணைந்த கருத்துக்கு ஓரிரு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் இந்த விஷயத்தில் நீதிமன்றம் தலையிடுவது உகந்ததாக இருக்காது.ஒரு கட்சியின் விதியை திருத்தவோ, சேர்க்கவோ பொதுக்குழுவுக்குத்தான் முழு அதிகாரம் உள்ளது. விதியில் மாற்றம் செய்யும்போது பாதிக்கப்பட்ட நபர்கள் அந்த பொதுகுழுவில்தான் முறையிட வேண்டும். பாதிக்கப்படும் நபர் பொதுக்குழுவில் முறையிட விடாமல் தடுக்கப்பட்டால், அவரது உரிமை பாதிக்கப்பட்டால், அவர் தாராளமாக சிவில் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற முடியும். கட்சியின் செயல்பாட்டை மேம்படுத்தவும், விதிகளில் சிக்கல் இருந்தால் அதை சரி செய்யவும் கட்சியின் பொதுக்குழுக்குத்தான் அதிகாரம் உள்ளது. ஏற்கனவே, இதே வழக்கில் உச்ச நீதிமன்றம் பொதுக்குழுவை நடத்தலாம் என்று கூறியுள்ள நிலையில், மனுதாரர்கள் தங்கள் கோரிக்கையை உச்ச நீதிமன்றத்திலேயே வைத்திருக்கலாம். ஆனால், அதை செய்யவில்லை. அரசியல் கட்சியின் உள்விவகாரத்தில் சாதாரணமாக இந்த நீதிமன்றம் தலையிடாது. எனவே, மனுதாரரின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. பொதுக்குழுவுக்கு தடை கோரிய இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன….

The post அதிமுக பொதுக்குழுவுக்கு தடைகோரி ஓ.பி.எஸ் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி: ஐகோர்ட் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Supreme General Union ,iCourt ,Adamukh ,High Court of Chennai ,Pannerselvam ,Supreme General Assembly ,B. S ,Dinakaraan ,
× RELATED மறுகூட்டல் விண்ணப்பம்..அரசு வழங்கும்...