×
Saravana Stores

கோடையிலும் வாழைகளை பாதுகாக்க நடவடிக்கை தண்ணீர் அதிகம் சேமிக்க பேய்க்குளம் தூர்வாரப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு

ஏரல் : கோடையில் நீரின்றி வாழைகள் வாடும் நிலையில் அதிக அளவில் தண்ணீரை சேமிக்க ஏதுவாக சாயர்புரம் அருகே பேய்க்குளம் முறையாகத் தூர்வாரப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.  தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் அருகேயுள்ள பேய்க்குளம் சுமார் 312 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இக்குளத்தின் மூலம் 3 ஆயிரம் ஏக்கரில் நெல், வாழை சாகுபடி நடந்து வருகிறது.  இக்குளத்திற்கு ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து வடகால் வாய்க்கால் வழியாக தண்ணீர் வரும். வடகால் வாய்க்காலில் கடைசி பகுதியில் இக்குளம் இருப்பதால் வடகால் வாய்க்காலில் அதிக அளவு தண்ணீர் வந்தால் மட்டுமே இந்த குளத்திற்கு தண்ணீர் வந்து சேரும். இக்குளத்தை நம்பி சாயர்புரம், நடுவக்குறிச்சி, நந்தகோபாலபுரம், புளியநகர், சிவத்தையாபுரம், பேய்க்குளம், இருவப்பபுரம், சேர்வைகாரன்மடம், தங்கம்மாள்புரம், சக்கம்மாள்புரம், போடம்மாள்புரம், கூட்டாம்புளி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் வாழை, நெல் என பயிரிட்டு வருகின்றனர். கோடை காலத்திலும் இப்பகுதி விவசாய சங்கங்கள் மூலம் குளத்திற்கு தண்ணீர் வரும் வாய்க்கால் மற்றும் மடைகளை சீரமைத்து வருவதால் இப்பகுதியில் நெல் இருபோகம் விளைந்து வந்தது. ஆனால் தற்போது ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் நேரிடையாக கொண்டு செல்வதால் வடகால் வாய்க்காலில் தண்ணீர் முறையாக வராததால் கோடை காலத்தில் குளத்தில் தண்ணீர் இன்றி வறண்டு விடுகிறது. இதனால் நீரின்றி வாடும் வாழைகளை காக்க விவசாயிகள் ஆண்டுதோறும் போராடும் அவலம் தொடர்கிறது. இதனால் ஒரு சில விவசாயிகள் ஆழ்துளை கிணறு அமைத்து ஆயில் இன்ஜின் மூலம் தண்ணீர் எடுத்து விளைநிலங்களுக்கு பாய்ச்சி வருவதால் உற்பத்தி செலவு அதிகமாகிறது. அத்துடன் போதிய வருமானமும் கிடைப்பதில்லை. இதனால் இப்பகுதி விவசாயிகள் விவசாயம் செய்வதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர். பேய்க்குளத்தில் ஆங்காங்கே மணல் திட்டுகள் ஏற்பட்டுள்ளதால் மழைக்காலத்தில் வாய்க்கால் வழியாக குளத்திற்கு வந்து சேரும் தண்ணீரை அதிக அளவு சேமித்து வைத்திட முடியாமல் வெளியேற்றம் செய்ய வேண்டியுள்ளது.வெயில் காலத்தில் ஸ்ரீவைகுண்டம் வடகால் வாய்க்காலில் ஒருமாதம் தொடர்ந்து தண்ணீர் வராமல் இருந்தால் குளம் வறண்டு போய்விடுகிறது. எனவே குளத்தில் எப்போதும் தண்ணீர் இருப்பதற்கு இந்த குளத்து பகுதியை முழுவதும் தூர்வாரி அதிக அளவு தண்ணீரை சேமித்து வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுவே அனைவரது எதிர்பார்ப்பாகும்.நிரந்தரத்தீர்வுஇதுகுறித்து பேய்க்குளம் குளம் பகுதி விவசாயிகள் கூறுகையில் ‘‘பேய்க்குளம் குளத்திற்கு ஸ்ரீவைகுண்டம் வடகால் வாய்க்கால் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு கடந்த 100 ஆண்டுகளாக இருபோக விளைச்சல் நடைபெற்று வந்தது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக கோடை காலத்தில் தண்ணீரின்றி போவதால் ஒருபோக விளைச்சல் நடைபெறுவதே கேள்விக்குறியாகிவிட்டது. குளமும் மணல் மேடாகி வருவதால் அதிக அளவு தண்ணீரை சேமிக்க முடிவதில்லை. எனவே அரசு பேய்க்குளத்தை முழுமையாக தூர் வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தனிக்கவனம் செலுத்தி தக்க நடவடிக்கை எடுத்து இந்த பிரச்னைக்கு நிரந்தரத்தீர்வு காண வேண்டும். மேலும் ஸ்ரீவைகுண்டம் வடகால் வாய்க்காலிலும் தட்டுப்பாடின்றி தண்ணீர் கிடைக்கும் வகையில் வடகால் வாய்க்காலுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும். இதையே பாசன விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்’’ என்றனர்….

The post கோடையிலும் வாழைகளை பாதுகாக்க நடவடிக்கை தண்ணீர் அதிகம் சேமிக்க பேய்க்குளம் தூர்வாரப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Arel ,Sairapuram ,Dinakaran ,
× RELATED ஏரல் அருகே ஆலங்கால் வடிகால் வாய்க்கால் தூர்வாரப்படுமா?