×

புதூர் பகுதியில் 26 ஆண்டுகளாக செயல்படாத அவலம் காட்சி பொருளாக மாறிய பருத்தி அரவை இயந்திரம் விரைவில் பயன்பாட்டுக்கு வருமா?

கோவில்பட்டி :  புதூர் பகுதியில் பருத்தி விளைச்சல் அமோகமாக உள்ள நிலையில் 26 ஆண்டுகளாக செயல்படாமல் காட்சி பொருளாக மாறிய பருத்தி அரவை இயந்திரம் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். திருநெல்வேலி வேளாண் விற்பனை மற்றும் வணிகவரித்துறை கட்டுப்பாட்டில் கோவில்பட்டி, சங்கரன்கோவில், தூத்துக்குடி, எட்டயபுரம், புதூர் உள்ளிட்ட சுமார் 20க்கும் மேற்பட்ட இடங்களில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் செயல்படுகின்றன. இந்த விற்பனை கூடத்தில் விவசாயிகள் தங்கள் விளைப்பொருட்களை இருப்பு வைக்கவும், சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்கும் விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் இடையில் ஒழுங்கு முறை விற்பனை கமிட்டி பாலமாக செயல்படுகிறது. இவை தவிர இடைத்தரகர் ஆதிக்கமின்றி சுதந்திரமாக விவசாயிகள் விளைப்பொருட்களை விற்பதற்கும் லாபம் ஈட்டுவதற்கும் அரசு உதவுகிறது. இங்கு நெல், சோளம், பருத்தி, பயறு வகைகள் கொள்முதல்  செய்யப்படுகிறது.புதூர், விளாத்திகுளம், எட்டயபுரம் பகுதிகள் கரிசல் பூமியாகும். இங்கு சிறுதானியங்கள், பயறு வகைகள், பணப்பயிர் பருத்தி, குண்டு வத்தல், வெங்காயம் அதிகம் பயிரிடப்படுகிறது. புதூரில் ஏற்கனவே புதூர் வேளாண் கூட்டுறவு உற்பத்தியாளர் சங்கம் மூலம் 5 பருத்தி அரவை இயந்திரம் இயங்கி வருகிறது. இந்தாண்டு இப்பகுதியில் பருத்தி வரத்து அதிகரிப்பால் விவசாயிகள் பருத்திஅரவை செய்ய சுழற்சி முறையில் வாய்ப்பு வழங்கப்படுறது. இதனால் பருத்தி அரவை செய்ய காலதாமதமாகிறது. ஒரு கிலோ பருத்தி அரவைக்கு ரூ.5 செலவாகிறது. இதன்படி 225 குவிண்டாலுக்கு ரூ.1 லட்சம் அரவை கூலியாகிறது. இதனால் அரசுக்கும் பெரும் வருவாய் கிடைக்கிறது. இந்நிலையில் புதூர் பகுதியில் பருத்தி சாகுபடி அதிகம் என்பதால் அரசு சார்பில் புதூர் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வேளாண் விற்பனை மற்றும் வணிகவரித்துறை மூலம் கடந்த 1994ம் ஆண்டு விசாலமான கட்டிடத்துடன் 7 பருத்தி அரவை இயந்திரம் மற்றும் பருத்தி உலர வைக்கும் கொட்டகை கட்டப்பட்டது. சுமார் 2 ஆண்டுகள் சிறப்பாக பருத்தி அரவை செய்யப்பட்டது. இதனால் விவசாயிகள், வியாபாரிகள் அதிக அளவில் பயன்பெற்றனர். ஆனால் அதன்பிறகு கடந்த 26 ஆண்டுகளாக பருத்தி அரவை செய்யப்படாமல் காட்சிப்பொருளானது.இதே போல் ரூ.பல லட்சத்தில்  கட்டப்பட்ட பருத்திகளை உலர வைப்பதற்கான கொட்டகை, கட்டிடம், உலர் களம் ஆகியனவும் பயன்பாடின்றி காட்சிப் பொருளாக மாறிவிட்டன. எனவே, இதுவிஷயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தனிக்கவனம் செலுத்துவதோடு தக்க ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரிசல் பூமி விவசாயிகள் சங்கத்தலைவர் வரதராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர். இதையே பெரும்பாலான விவசாயிகளும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்….

The post புதூர் பகுதியில் 26 ஆண்டுகளாக செயல்படாத அவலம் காட்சி பொருளாக மாறிய பருத்தி அரவை இயந்திரம் விரைவில் பயன்பாட்டுக்கு வருமா? appeared first on Dinakaran.

Tags : Pudur ,Kovilbhatti ,Dinakaran ,
× RELATED திருச்சியில் ஓடும் பேருந்தில்...