×

இனியும் தலைதூக்க முடியாது ராஜபக்சேக்கள் ஆதிக்கம் ஓய்ந்தது: 30 மாதத்தில் முடிவுரை எழுதிய இலங்கை மக்கள்

கொழும்பு: இலங்கையில் 20 ஆண்டு காலம் ஆட்சியில் ஆதிக்கம் செலுத்தி வந்த ராஜபக்சேக்களுக்கு இலங்கை மக்கள் முடிவுரை எழுதி உள்ளனர். இனியும் எந்த காலத்திலும் இவர்கள் ஒருவர் கூட இலங்கை அரசியலில் தலைகாட்ட முடியாத நிலையை மக்கள் புரட்சி உண்டாக்கி உள்ளதாக அரசியல் நிபுணர்கள் கூறி உள்ளனர். கடந்த 1948ம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்ததில் இருந்து, கடந்த 20 ஆண்டு காலம் அந்நாட்டை ராஜபக்சே குடும்பம் ஆட்டிப் படைத்தது. 2005ல் சக்தி வாய்ந்த அதிபராக இருந்த மகிந்த ராஜபக்சே தலைமையிலான அரசு, 2009ம் ஆண்டு நடந்த இறுதிகட்ட உள்நாட்டுப் போரில் லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்து, விடுதலைப் புலிகளுக்கு முடிவு கட்டியது. இதனால், ராஜபக்சேக்கள் சிங்களர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றது. அந்த மமதையில் இந்தியா போன்ற அண்டை நாடுகளை பகைத்துக் கொண்டு, சீனாவுக்கு சிவப்புக் கம்பளம் விரித்தனர். சீனா விரித்த கடன் வலையில் நாட்டை சிக்க வைத்து நாசமாக்கினர்.கடந்த 2015 முதல் 2019ம் ஆண்டு வரை மைத்ரிபால சிறிசேனா ஆட்சி அமைந்த போது, சற்று அடங்கியிருந்த ராஜபக்சே குடும்பம், 2019ம் ஆண்டு மீண்டும் தலைதூக்கியது. 60 சதவீத பெரும்பான்மையுடன், 2019ல் அதிபராக கோத்தபய ராஜபக்சே பதவியேற்றதைத் தொடர்ந்து, அவரது சகோதரர் மகிந்த ராஜபக்சே பிரதமர் ஆனார். மற்றொரு சகோதரர் பசில் ராஜபக்சே நிதி அமைச்சர் ஆனார். ஒட்டுமொத்த அதிகாரமும் தனக்கே வேண்டும் என்பதற்காக அதிபர் கோத்தபய அரசியலமைப்பு சட்டத்திலும் திருத்தம் செய்தார். ராஜபக்சே சகோதரர்களின் தவறான கொள்கைகளால் இன்று இலங்கையின் பொருளாதாரம் முடங்கிப் போய், நாடே செயலற்று கிடக்கிறது.இதன் காரணமாக வெடித்த மக்கள் புரட்சியில், பதவியேற்ற 30 மாதத்தில் ராஜபக்சேக்களுக்கு இலங்கை மக்கள் முடிவுரை எழுதி உள்ளனர். முதலில் பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்சேவை விரட்டி அடித்த பொதுமக்கள், தற்போது அதிபர் மாளிகையை கைப்பற்றி, கோத்தபயவின் பதவியையும் பறித்துள்ளனர். உயிர் பிழைத்தால் போதும் என்ற அளவுக்கு அவர்கள் தப்பியோடி வருகின்றனர். இதனால், இனிமேல் எந்த காலத்திலும் ராஜபக்சேக்கள் இலங்கை அரசியலில் அடியெடுத்து வைக்க முடியாது என்கின்றனர் இலங்கையின் அரசியல் நிபுணர்கள்.கொழும்பைச் சேர்ந்த எழுத்தாளரும், அரசியல் விமர்சகருமான குசல் பெரேரா கூறியதாவது: ராஜபக்சே குடும்பத்தில் கோத்தபய, மகிந்த, பசில் சகோதரர்கள் முக்கியமானவர்கள். மகிந்தாவின் மகன் நமல் மற்றும் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்சேவின் மகன் ஷஷீந்திர ராஜபக்சே ஆகியோர் எதிர்கால வாரிசுகளாக உள்ளனர். இதில், கோத்தபய தான் சக்தி வாய்ந்தவர். இவர், வழக்கமான அரசியல்வாதி அல்ல. எப்போதும் தனது சகோதரர் மகிந்த ராஜபக்சேவை முன்னிருத்தி, அதிகாரத்தை மட்டும் தன் கையில் வைத்திருப்பார். கோத்தபயவின் பலமே மக்களிடம் அவருக்கு உள்ள ஆதரவுதான். தற்போது இது சுக்குநூறாக உடைந்து விட்டது. அவர் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் இலங்கையில் போராட்டங்கள் தீவிரமடையும் என்பதை கோத்தபய உணர்ந்துள்ளார்.எனவே, நிச்சயம் அவர் அதிபர் பதவியிலிருந்து விலகியே தீருவார். அதில் எந்த தந்திரமும் செய்ய முடியாது. சொந்த ஊழியர்கள் கூட அவர் பக்கம் நிற்க மாட்டார்கள். எனவே, அவர் மீண்டும் ஒருமுறை அதிபராக பதவியேற்க வாய்ப்பே இல்லை. மகிந்த ராஜபக்சேவை பொறுத்த வரையில், உடல் ரீதியாக பலவீனமாகி விட்டார். சிங்களர்களிடம் அவருக்கு இருந்த செல்வாக்கு அடியோடு அழிந்து விட்டது. எனவே, அரசியல் ரீதியாக அவர் முன்பு இருந்த அதே சக்திவாய்ந்த, கவர்ச்சிகரமான தலைவராக இருக்க வாய்ப்பில்லை. அலரி மாளிகையில் இருந்து மக்களால் விரட்டி அடிக்கப்பட்ட பிறகு அவர் மீண்டும் அரசியலை பற்றி நினைத்து கூட பார்க்க முடியாது.பசில் ராஜபக்சே சிறந்த நிர்வாகி. 2015க்குப் பிறகு மீண்டும் கட்சியை ஆட்சிக் கொண்டு வருவதில் முக்கிய பங்காற்றினார். ஆனால், மகிந்தாவை வைத்துதான் இவரது அரசியல். தனிப்பட்ட முறையில் பசிலுக்கு எந்த சக்தியும் இல்லை. இலங்கை அரசியலில் அவருக்கு எந்த எதிர்காலமும் இல்லை. மகிந்தாவின் மகன் நமல் ராஜபக்சே அமைச்சராக இருந்த போதிலும், மக்கள் மத்தியில் நற்சான்றிதழ் கொண்ட ஒரு ஆளுமையாக நிரூபிக்க முடியவில்லை. தந்தையின் நிழலிலேயே வெற்றி பெற்ற இவரால் திருப்புமுனையை ஏற்படுத்த முடியாது. இவ்வாறு பெரரோ கூறினார். மற்றொரு ஆய்வாளர் எம்.எஸ்.எம்.அயூப், கூறுகையில், ‘‘நமல், அவரது உறவினர் ஷஷீந்திரன் ஆகியோர் இளையவர்கள். அவர்கள் 2025 அல்லது 2030ம் ஆண்டு தேர்தலை குறிவைத்து களத்தில் குதிக்கலாம். ஆனாலும், எந்த காலத்திலும், மறக்க முடியாத ஒரு வடுவை ராஜபக்சேக்கள் ஏற்படுத்தி உள்ளனர்.  எனவே, அதை தாண்டி ராஜபக்சே வாரிசுகள் இனியும் இலங்கை அரசியலில் வெற்றி பெறுவது சாத்தியமில்லாத ஒன்றுதான்’’ என்றார். * அதிபர் மாளிகையில் தொடர்ந்து தங்கியுள்ள போராட்டக்காரர்கள்கடும் கட்டுப்பாடுகளை மீறி அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் நேற்று முன்தினம் கைப்பற்றிய நிலையில், இரவு முழுவதும் அங்கேயே தங்கினர். அதிபரின் நீச்சல் குளத்தில் குளித்தும், அதிபரின் சமையலறையில் சமைத்து சாப்பிட்டும், அதிபரின் மெத்தையில் படுத்து தூங்கியும், அதிபரின் பியானோவை வசித்தும், அதிபரின் ஜிம்மில் உடற்பயிற்சி செய்தும், அதிபரின் இருக்கையில் அமர்ந்தும் சந்தோஷப்பட்டனர். அவர்களை வெளியேற போலீசார் பலமுறை கேட்டுக் கொண்டும் வெளியேற மறுத்து விட்டனர். ராசியற்ற 9ம் தேதி* ராஜபக்சே சகோதரர்களுக்கு எதிரான போராட்டம் கடந்த ஏப்ரல் 9ம் தேதி உச்சமடைந்தது. கொழும்பு காலி முகத்திடலில் ‘கோத்த கோ கம’ என்ற பெயரில் போராட்டக்காரர்கள் முகாம் அமைத்து 24 மணி நேர தீவிர போராட்டத்தில் குதித்தனர். * இதன் காரணமாக மே 9ம் தேதி போராட்டம் உச்சமடைந்து, ராஜபக்சேக்களின் வீடுகளை பொதுமக்கள் கொளுத்தினர். இதனால், அன்றைய தினம் மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியை ராஜினாமா செய்து, உயிருக்கு பயந்து ஓடினார்.* அடுத்த மாதம் ஜூன் 9ம் தேதி, நிதி அமைச்சர் பதவியிலிருந்து பசில் ராஜபக்சே விலகினார்.* ஜூலை 9ம் தேதி மக்கள் புரட்சி வெடித்த நிலையில், கோத்தபய ராஜபக்சே அதிபர் மாளிகையை விட்டு ஓட்டம் பிடித்துள்ளார். * கோத்தபயவின் மகன் வீடு அமெரிக்காவில் முற்றுகைகோத்தபய ராஜபக்சேவின் மகன் மனோஜ் ராஜபக்சே அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வருகிறார். அவரது வீட்டின் முன்பாகவும், இலங்கை வம்சாவளிகள் போராட்டம் நடத்தினர். மனோஜ் ராஜபக்சே வீட்டின் முன்பாக, ‘இது பொதுமக்களின் பணத்தை கொள்ளை அடித்து கட்டப்பட்ட வீடு’ என பதாகைகளை எழுதி வைத்தனர். ‘உனக்கு வெட்கமே இல்லையா’ என பலர் கூச்சலிட்டனர். அந்த வழியாக செல்பவர்களிடம், ‘இவரது தந்தை எங்கள் நாட்டு மக்களின் பணத்தை கொள்ளை அடித்து கட்டிய சொகுசு பங்களா இது’ என விளக்கம் அளித்தனர். இந்த வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது….

The post இனியும் தலைதூக்க முடியாது ராஜபக்சேக்கள் ஆதிக்கம் ஓய்ந்தது: 30 மாதத்தில் முடிவுரை எழுதிய இலங்கை மக்கள் appeared first on Dinakaran.

Tags : rajapakses ,Colombo ,Sri Lanka ,
× RELATED இலங்கை அதிபர் தேர்தலில் ரணில் போட்டி: அமைச்சர் தகவல்