×

கண்ணகப்பட்டு, கம்மாளம்பூண்டி திரவுபதி அம்மன் கோயில்களில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

திருப்போரூர்: திருப்போரூர் அருகே கண்ணகப்பட்டு கிராமத்தில் திரவுபதி அம்மன் கோயிலில் நேற்று துரியோதனன் படுகள நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. இதில், ஏராளமானோர் கலந்து கண்டு ரசித்தனர். திருப்போரூர் அடுத்துள்ள கண்ணகப்பட்டு கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலின் அக்னி வசந்த உற்சவ பெருவிழா கடந்த மாதம் 22ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 5ம் தேதி அர்ஜுனன் தபசு நிகழ்ச்சி நடைபெற்றது. தினந்தோறும் மகாபாரத சொற்பொழிவும், இரவில் அம்மன் வீதி உலா மற்றும் தெருக்கூத்தும் நடைபெற்று வருகின்றன. இதைத்தொடர்ந்து நேற்று காலை 11 மணிக்கு விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளின் ஒன்றான துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தெருக் கூத்து கலைஞர்கள் துரியோதனன் போல் வேடமணிந்து நடித்தனர். விழா நடைபெறும் கோயில் வளாகத்தில் 100 அடி நீளமுள்ள துரியோதனன் சிலை உருவாக்கப்பட்டு போர்க்கள காட்சி நடித்து காட்டப்பட்டது. இதில், ஆயிரக்கணக்கானோர் கலந்துக் கொண்டு கண்டு ரசித்தனர். மாலை 6 மணியளவில் கோயில் முன்பு நடைபெற்ற தீமிதி திருவிழாவில் நூற்றுக்கணக்கானோர் அம்மனுக்கு விரதமிருந்து காப்பு கட்டி தீ மிதித்தனர். திருப்போரூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இன்று காலை தருமர் பட்டாபிஷேகமும், நாளை விடையாற்றி உற்சவமும் நடைபெறுகிறது. உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த கம்மாளம்பூண்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீதர்மராஜா உடனுறை ஸ்ரீ திரவுபதி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மஹோத்சவ மகாபாரத பெருவிழா நடைபெறுவது வழக்கம். அதன் அடிப்படையில் இந்த ஆண்டு மஹோத்சவ மகாபாரத பெருவிழா கடந்த மாதம் 23ம் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடங்கிய நாள் முதல் கோயில் வளாகத்தில் மகாபாரத சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடந்து வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான துரியோதனன் படுகள நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்காக பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்ட துரியோதனன் சிலையினை கட்டைக்கூத்து கலைஞர்களால் பீமன் – துரியோதனன் போரிடும் போர்க்களக் காட்சியினை தத்ரூபமாக நடத்தப்பட்டது. இதில், பீமன் வேடமணிந்தவர் துரியோதனன் சிலையின் தொடைப்பகுதியில் கதாயுதத்தால் ஓங்கி அடித்து துரியோதனன் வதம் செய்யும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைப்பெற்றது. விழாவிற்காக காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் மாலை கோவில் அருகே அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் இறங்க தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைப்பெற்றது. பின்னர் இரவு திரவுபதி அம்மன் பஞ்சபாண்டவர்களுடன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவையொட்டி கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர். நிகழ்ச்சியில் கம்மாளம்பூண்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்….

The post கண்ணகப்பட்டு, கம்மாளம்பூண்டி திரவுபதி அம்மன் கோயில்களில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Kannagapattu ,Kammalambundi Draupadi Amman Temples ,Tiruporur ,Duryodhanan ,Kannakapatu ,Kannagapat ,Kammalamphundi Tirupati Amman Temples ,
× RELATED மனவளர்ச்சி குன்றியோர் மையத்தில் கலெக்டர் ஆய்வு