×

சித்த பிரமை, சுக்கிர தோஷம் நீக்கும் கஞ்சனூர் அக்னீஸ்வரர் கோயில்

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே கஞ்சனூரில்  உள்ளது அருள்மிகு அக்னீஸ்வரர் கோயில். மூலவர் அக்னீஸ்வரர். தாயார் கற்பகாம்பாள்.  நவகிரகத்தலங்களில் இத்தலம் சுக்கிரனுக்குரிய தலமாகும்.  சுக்கிரனுக்கு இங்கு தனி சன்னதி உள்ளது. இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். நடராஜர் மூலத்திருமேனியில்சிவகாமியுடன் (சிலா ரூபமாக) இருப்பது தனிசிறப்பு வாய்ந்தது. இத்தலத்தில் ஈசன்பிரம்மனுக்கு தன் திருமணக்கோலத்தை காட்டியருளினார். எனவே தான் இங்கு அம்மனை தன்வலப்பாகத்தில் சிவன் கொண்டருள்கிறார்

கோயில் வரலாறு
:

கஞ்சனூரில் வாசுதேவர் என்னும் வைணவருக்கு பிறந்த குழந்தையின் பெயர் சுதர்சனர். வைணவக் குடும்பத்தில் பிறந்தாலும் அக்குழந்தை சிவபக்தியில் சிறந்து விளங்கியது. திருநீறு, உருத்திராக்கதாரியாக திகழ்ந்த அக்குழந்தை எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. அவ்வூர் மக்கள் சொல்லியவாறே பழுக்கக் காய்ச்சிய இரும்பு முக்காலி மீதுஅமர்ந்து “சிவமேபரம்பொருள்’ என்று அக்குழந்தை மும்முறை கூறியதைக்கண்டு வியந்தனர். இக்காட்சியை சித்தரிக்கும் உருவம் இவ்வூர் பெருமாள் கோயிலிலும், அக்னீஸ்வரர் கோயில் நடராஜர்சன்னதியிலும் உள்ளது. பெருமாள் கோயிலிலும் அக்னீஸ்வரர் கற்பகாம்பாள் எழுந்தருளியுள்ளனர்.

ஹரதத்தருக்கு உபதேசித்து அருள் செய்த தெட்சிணாமூர்த்தி உருவில் ஹரதத்தரின் உருவமும் உள்ளது. இம்மூர்த்தியே சுதர்சனரை ஆட்கொண்டு ஹரதத்தர் என்ற பெயர் அளித்து சிவநாம தீட்சைசெய்தவர். செல்வந்தர் ஒருவர் தினமும் அக்னீஸ்வரருக்கு நைவேத்தியம் செய்து வந்தார். தினமும் அவர் கனவில் சுவாமி தோன்றி அவ்வுணவை உண்பதுபோல காட்சி தருவார். ஒருநாள் அக்கனவு தோன்றவில்லை.விசாரித்ததில் அன்று அக்னீஸ்வரர் ஹரதத்தரிடம் ஏழை பிராமணர் வடிவில் சென்று கஞ்சியை வாங்கி உண்டதாகவும், அதனால் வயிறு நிரம்பிவிட செல்வந்தரின் உணவை ஏற்கவில்லை என்றும் உணர்ந்தார். இதன்மூலம் ஹரதத்தரின் பெருமையை அறிந்து அச்செல்வர் அவரை நாடிச்சென்று வணங்கியதாக ஐதீகம்.

ஆலயத்தில் ஹரதத்தரின் குடும்பமும், ஏழை அந்தணராக வந்த இறைவனின் திருவுருவமும் உள்ளன. ஊருக்குள் வரும்போது அரசமரத்தின் எதிரில் கிழக்குநோக்கி ஹரதத்தர் சிவபூஜை செய்வதுபோல உள்ள ஹரதத்தர் தனிக்கோயிலும் இத்தலத்தில் உள்ளது. கோயில் ராஜகோபுரம் ஐந்து நிலைகளையுடையது. பழமையான கோயில். இக்கோயிலில் உள்மண்டபம்,  விநாயகர் சன்னதி, வலதுபக்கம் விசுவநாதர் சன்னதி. அடுத்து அம்பாள் சன்னதி. உள்வாயிலைத் தாண்டி சுவாமி சன்னதி, விநாயகர், மயூரசுப்பிரமணியர், மகாலட்சுமி சன்னதிகள் உள்ளன. தலமரமமான புரசு (பலாசு) மரத்தின் கீழ் அக்னீஸ்வரர் லிங்கம் உள்ளது. அடுத்து மானக்கஞ்சாறர், கலிக்காமர் திருவுருவங்கள் உள்ளன. பக்கத்தில் சுரைக்காய்ப் பக்தர் என்ற அடியார் மனைவியுடன் காட்சி தருகிறார். மகா மண்டபத்தில் பைரவர், சூரியன், சனிபகவான், சந்திரன், நவக்கிரக சன்னதி, நால்வர் சன்னதிகள் உள்ளன.இக்கோயில் காலை 7.30 முதல் மதியம் 12 வரை. மாலை 4.30 முதல் இரவு 9 மணிவரை நடை திறந்திருக்கும்     இத்தலத்து இறைவனை வணங்கினால் உடல்பிணி, சோகை நோய், சித்தபிரமை நீங்கும். தோஷங்கள் நீங்கி, செல்வம் செழிக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை

Tags : Kanjanoor Agniswarar ,abode ,Siddha illam ,
× RELATED 9ம் தேதி ஆடிக்கிருத்திகை திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை