கொடைக்கானல் மலையில் நடந்த விபத்தில் குடும்பத்தைப் பறிகொடுத்த வெற்றி, மனப்போராட்டத்தில் இருந்து மீள காசிக்குச் சென்று, ஹரீஷ் பெராடியை குருவாக ஏற்று ஆன்மீகவாதியாக முயற்சிக்கிறார். சிறுவயதில் இருந்தே எழுத்தில் ஆர்வம் கொண்ட அவரது மனம், தொடர்ந்து 10 வருடங்கள் முயற்சித்தும் ஆன்மீகத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. இதனால், எழுத்துலகை நோக்கிப் பயணிக்கும் அவருக்கு ஜெர்மன் பெண் மதுராவின் நட்பு கிடைத்து காதலாகிறது. ஆன்மீகத்தை விட்டு விலகி சக மனிதராக மாறிய வெற்றி, எழுத்துலகில் ஈடுபடும்போது விரும்பத்தகாத சில சம்பவங்களை எதிர்கொள்கிறார்.
இதனால் திசை மாறும் அவரது வாழ்க்கை என்ன ஆகிறது? எழுத்தில் அவர் சாதித்தாரா என்பது மீதி கதை. துறவியாகவும், பிறகு தோற்றம் மாறி மதுராவைக் காதலிக்கும்போதும், இறுதியில் மீண்டும் துறவியாகி எழுத்துலகில் ஈடுபடும்போதும், வெற்றி இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை ஆய்வு செய்யும் ஜெர்மன் பெண்ணாக, நிஜ ஜெர்மன் இளைஞி மதுரா நடித்து ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். தமிழில் அவர் பேசும் அழகே தனி. வெற்றியின் காதலுக்கு ஏங்கும் அனு சித்தாரா அற்புதமாக நடித்துள்ளார்.
பாசத்தைக் குழைந்து தரும் ‘அருவி’ மதன் குமார், விவேக் பிரசன்னா, டிட்டோ வில்சன், ஸ்ரீதேவா, ஹரீஷ் பெராடி ஆகியோரும் தங்கள் கேரக்டருக்கு சிறப்பு சேர்த்துள்ளனர். காசி, ராமேஸ்வரம், ரிஷிகேஷ் என்று, ஆன்மீக சுற்றுலா சென்று வந்த அனுபவத்தை விந்தன் ஸ்டாலின் கேமரா சிறப்பாக ஒளிப்பதிவு செய்துள்ளது.
மனோஜ் கிருஷ்ணாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப நன்கு பயணித்துள்ளது. மு.காசி விஸ்வநாதன் நேர்த்தியாக எடிட்டிங் செய்துள்ளார். ‘நமது மனம் எதை அதிகம் விரும்புகிறதோ அதுவே கடவுள்’ என்பதை காதல் பின்னணியுடன் சொல்ல வந்த இயக்குனர் சிவா.ஆர், ஆன்மீகமா? காதலா? எழுத்தா என்பதில் ஏதாவது ஒன்றில் நிலைகொள்ள முடியாமல், திரைக்கதையில் சற்று தடுமாறியிருக்கிறார். அடுத்து இதுதான் நடக்கும் என்பதிலும் சுவாரஸ்யம் குறைவு.
The post ஆலன் விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.