×

மேஷ ராசிப் பெண் - காவல் தெய்வம் காதல் தேவதை

என்னோட ராசி நல்ல ராசி 3

மேஷம், ராசிச் சக்கரத்தில் முதல் ராசி என்பதால் அதை குழந்தை ராசி என்பர். அதனால் இந்த ராசியில் பிறந்த பெண்களுக்கும் குழந்தை மனோபாவம் உண்டு. மற்றவர்களுடன் பேசி மகிழ்வார் கூடி வாழ்வார். அண்டி அனுசரித்து இருக்க மாட்டார். தனித்து சிந்திப்பார். தலைமைப் பொறுப்பேற்பார். பிறர் துணை இல்லாமல் தனித்து வாழக்கூடிய திறம் படைத்தவர். மற்ற ராசிகளில் பிறந்த பெண்களைக் காட்டிலும் இந்த ராசிப் பெண்கள் ஆண்கள் துணையின்றி தனியாக அனைத்து வேலைகளையும் தாமே செய்யும் துணிவு பெற்றவராக இருப்பர். மேஷ ராசிப்பெண் தன் தந்தை, சகோதரன், கணவன், மகன், நண்பன் என எவரையும் அண்டிப் பிழைக்காமல் சிறப்பாக தன் குடும்பத்தைக் காப்பாற்றுவார்.  இவருக்குச் சொந்தமும் நட்பும் வேலையும் மாறிமாறி வந்து போகும்.

வாயாடி: மேஷ ராசிக்கு அதிபதி செவ்வாய். செவ்வாய் ரத்தச்  சிவப்பு கிரகம். ரத்தத்துக்குரிய கிரகமும்  இது தான்.  எனவே மேஷ ராசி பெண் மனத்துணிவுடன் திடமாக இருப்பார். கடைசி வரை ரத்தம் சூடாகத் தான் இருக்கும். இவர் நாணி கோணிப் பேச மாட்டார். முந்தானை அல்லது துப்பட்டாவின் நுனியை பிடித்து திருகியபடி தரையைப் பார்த்தபடி கண்களை அங்கும் இங்கும் அலைய விட்டபடி ஸ்டைலாக ஒயிலாக நின்றுகொண்டு  பேசமாட்டார். யாராக இருந்தாலும் எந்த விஷயமாக இருந்தாலும் கண்களை நேரே பார்த்துப் பேசுவார். அவருக்கு அதிகாரம் செய்வோரையும் பிடிக்காது . அடி வருடிகளையும் பிடிக்காது. முகஸ்துதி செய்வோர்; கூழைக் கும்பிடு போடுவோரை கண்டால் அவருக்கு ஆகவே ஆகாது.  ஆனால், தன்னிடம் காணப்படும் நல்ல விஷயங்களை கண்டறிந்து எடுத்துச் சொல்வோருக்கு இவர் அடிமை..

துணிச்சல்காரி: மேஷ ராசி பெண் எதையும் சுற்றி வளைத்துப் பேசாமல், மூடி மறைத்துப் பேசாமல், உள்ளது உள்ளபடி நறுக்கென்று நயமாகச் சொல்வார். இவர் வாயே பல வேளைகளில் இவருக்கு எதிரியாகும்; துணிந்து எதையும் பேசி வம்பை விலை கொடுத்து வாங்கிக்கொள்வார். ஆனால் அதற்கு வருந்தமாட்டார். துணிச்சல் மிக்கவர் எந்த பிரச்னை என்றாலும் ஜல்லிக்கட்டு காளை போல களத்தில் நின்று விளையாடுவார். அஞ்சி ஓட மாட்டார். இவருக்கு ஆபத்பாந்தவன் போல நல்லவர்கள் பலர் துணை நிற்பார்கள்.

செயல் திறன் மிகுதி: மேஷ ராசி பெண் எதையும் செய்வதற்கு முன்னால் பலரிடமும் அது குறித்து விவாதிப்பார். நடந்த பிறகு சொல்வோம் என்று நினைக்க மாட்டார். ஒரு வேலையை ஆரம்பிக்கும் முன்பே எல்லோரிடமும் அது பற்றி பேசுவார். யோசனைகளை கேட்பார். ஆராய்ந்து முடிவு எடுப்பார். எப்போதும் முடிவு இவருடையதாக இருக்கும். அதன் விளைவு என்னவாக இருந்தாலும் கலங்க மாட்டார். செய்ததை சிறப்பாக செய்தோம் என்ற மன நிறைவு கொள்வார். பெரும்பாலும் மேஷ ராசிப் பெண்கள் எடுத்த காரியத்தில் தோல்வி அடைவதில்லை. வெற்றியின் கனத்தை தலையில் ஏற்றிக் கொண்டாடுவதும் இல்லை. வானத்து நட்சத்திரங்களை தமது இலக்காக வைத்திருப்பார்கள். மரத்தின் உயரத்தின் நின்றபடி மகிழ்ந்து போக மாட்டார்கள். இறந்தும் வாழ வேண்டும் என்று லட்சியவாதி போலப் பேசுவார்கள். கொள்கை, புகழ், லட்சியம் என பேசுவார்கள். அதனைப்  பின்பற்றுவார்கள், அப்படியே வாழ்வார்கள். சற்று விசித்திரப் பிறவிகள் தான். ஏழ்மையிலும் செம்மையாக வாழ்த் தெரிந்த இவர்களை பணம், பதவி, அந்தஸ்து காட்டி எவரும் மயக்கிவிட முடியாது.

பணியுமாம் என்றும் பெருமை: மேஷ ராசி பெண் பெரியவர்களுக்கும் குருக்களுக்கும் கட்டுப்பட்டவர். பயப்படுவார். தெய்வ நம்பிக்கை உள்ளவர்; சகுனம் பார்ப்பார்; ஜோசியம் பார்ப்பார். அதே  சமயம் கம்யூனிச சோஷலிசக் கொள்கைகளிலும் நம்பிக்கை உள்ளவராக இருப்பார். யாருக்காகவும் தன் கருத்துக்களை மாற்றிக் கொள்ள மாட்டார்; சூழ்நிலைக்கு ஏற்றபடி மாற்றிப் பேசவும் மாட்டார். போராட்டம் தர்ணா எல்லாம் இவருக்கு அல்வா சாப்பிடுவது போல: ஆர்வத்துடன் கலந்து கொள்வார். போர்க்குணம் படைத்த பெண் இவர். எப்போதும் இவருக்குள் ஒரு நெருப்பு கனன்று கொண்டே இருக்கும்.

சுறுசுறுப்பானவர்: மேஷ ராசி நெருப்பு ராசி என்பதால் இந்த ராசியில் பிறந்த பெண் வேகமாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பார். அதிக பெண்மை நலம் மிக்கவராக இருப்பதால் ஆண்கள் இவர்கள் பால் ஈர்க்கப்படுவது சகஜம். ஆனால் பெரும்பாலும் மேஷ ராசிக்காரப் பெண்ணுக்கு காதலில் வெற்றி கிடைப்பதில்லை; காரணம் இவர் தன் காதலரை நேசிப்பதை விட காதலை மிகவும் நேசிப்பார். எப்படி காதலிக்க வேண்டும் என்று இவர் ஒரு புத்தகமே எழுதலாம்..  ஆனால் இவர் வாழ்வில் அந்த விஷயங்களைப் பின்பற்ற மாட்டார். இவர் காதலின் கனவுகளிலும் கற்பனைகளிலும் மூழ்கி திளைப்பாரே தவிர யதார்த்தத்தைப் பற்றி சிந்திக்க மாட்டார்.மேஷ ராசி பெண் லட்சியவாதி தானே தவிர யதார்த்தவாதி கிடையாது. அவரை ஒரு idealist எனலாம். ஆனால்,  கொஞ்சம் கூட practical சிந்தனையே கிடையாது. காதலிக்கும் காலகட்டத்தில் 24 மணி நேரமும் கற்பனையில் மிதக்கும் இவர் நிஜத்தில் உப்பு சப்பில்லாதவராக இருப்பார். இவர் தனது காதலருக்கும்  கணவருக்கும் பல சந்தர்ப்பங்களில் தொந்தரவாக  ஒரு disturbing element ஆக தோன்றுவார். இவரைக் காதலிப்பது அந்தக் காதலருக்கு சுவையான அனுபவமாக இராது. இவர் குணத்துக்கு சிம்மராசிக்காரர் பெஸ்ட் மேட்ச்.

சர்வதேசப் பெண்: மேஷ ராசிப் பெண் ஒரு சர்வதேசக் குடிமகள். ஜாதி பற்று, நாட்டுப்பற்று மொழிப்பற்று எலாம் அளவுக்கு அதிகமாகவே இருந்தாலும் நட்பு திருமணம் என வரும்போது ஜாதி மதம் நாடு இனம் பார்க்க மாட்டார். யாரையும் காதலிப்பார். இவருக்கு குணமும் பழகும் விதமும் முக்கியமே தவிர காதலரின் படிப்பு பணம் அந்தஸ்து வேலை சம்பளம் ஆகியவை முக்கியமில்லை. இவருடைய நண்பர்களும் தோழிகளும் எல்லா மட்டத்திலும் இருப்பார்கள். அடுத்தவருடைய காதலுக்கும் உதவி செய்வார். உயர் அதிகாரிகள் குடும்பத்தார் ஆகியோரை பகைத்துக் கொண்டு நண்பர்களுக்கு உதவுவார். தான் எடுத்த முடிவின் படி தான் நடப்பாரே தவிர மற்றவர்களின் அறிவுரையையும்  அச்சுறுத்தளையும் கண்டுகொள்ள மாட்டார். காதலிக்கும் முடிவுக்கு வந்த பின்பு மேஷ ராசிக்காரப் பெண் தானே முன்வந்து தன் எண்ணத்தை தெரிவிப்பார். Propose பண்ணும் விஷயத்தில் மேஷ ராசிக்காரப் பெண்கள் முதலிடம் பெறுவர். ஆனால், அதே வேகத்தில் break up செய்வதும் உண்டு.. அந்த அபாயமும் இருக்கிறது. ஆண்கள் முந்திக்கொண்டு சொன்னால் மறுத்து விடுவார். அதற்கு முக்கிய காரணம் அவர் மீது காதல் இல்லை என்பதால் அல்ல. அவர் தன் மீது அதிகாரம் செலுத்துகிறாரோ என்ற பயம்தான் காரணம். ஒவ்வொரு விஷயத்திலும் மேஷ ராசிப் பெண் தானே முதல் அடியை [ஃபர்ஸ்ட் ஸ்டெப்] எடுத்து வைக்க வேண்டும் என்று விரும்புவார். யாரையும் ஃபாலோ செய்வது அவருக்கு விருப்பம் கிடையாது.

அன்பினாலே உண்டாகும் இன்ப நிலை: மேஷ ராசிப் பெண்ணை கட்டளையால் மாற்ற முடியாது. ஒரு வேலையைச் செய்யாதே என்று சொன்னால் அதை செய்துவிட்டுத்தான் மறு வேலை பார்ப்பார். இதைப் புரிந்துகொண்டு அவரிடம் பக்குவமாக நடத்து கொள்ள வேண்டும். கத்தியை வைத்திருக்கும் சிறு குழந்தையிடம் இருந்து அதை வாங்குவதற்கு வேறொன்றைக் கொடுத்து ஏமாற்றுவோம் அல்லவா அதைப் போல வேறு ஒன்றை காட்டித் தான் இவரிடம் முதல் வேலையைச் செய்ய விடாமல் தடுக்க வேண்டும். இந்த டெக்னிக் எல்லாம் தெரிந்து வைத்து கொண்டால்தான் மேஷ ராசி பெண்களை மேனேஜ் செய்ய முடியும். கட்டளை அல்லது உத்தரவு பிறப்பித்தால் சில காலம் வேடிக்கை பார்த்துவிட்டு ஒரு நாள் வெடித்து பஸ்பமாக்கி விடுவார்கள். செவ்வாய் நெருப்பு அல்லவா? மாதவியும் இவளே! கண்ணகியும் இவளே! என்பது மேஷ ராசி பெண்ணுக்கு தான் பொருந்தும்.

பொருத்தமானவர் யார்?: ஆழ்கடல் போன்ற அமைதியும் அலட்டிக் கொள்ளாத செயல்பாடும் அதீத அக்கறையும் கொண்ட சிம்ம ராசி ஆண் மேஷ ராசிக்காரப் பெண்ணுக்கு பொருத்தமான துணையாக அமைவதுண்டு. வேறு சில ராசி காம்பினேஷன்கள் மேஷ ராசிகாரப் பெண்ணுக்கு பொருந்தும். மேஷ ராசி பெண்ணுக்கு பொருத்தமான கணவர் வாய்த்துவிட்டால் இவர் மிகச் சிறந்த மனைவியாக இருப்பார்.. ஆனால், அதற்கு முற்பிறவியில் பெரும் புண்ணியம் செய்திருக்க வேண்டும். இவர் ஒரு தாயாக இருந்து சமையல் செய்து, துணி துவைத்து, பிள்ளைகளுக்கு பாடம் சொல்லி தருவார் என்று எவரும் எதிர்பார்க்கக் கூடாது. இந்தப் பணிகளை மேஷ ராசி பெண் செய்ய மாட்டார். ஆனால் அந்த வேலைகள் எல்லாம் சரியாக நடைபெறுகின்றனவா என்று கவனிப்பார். இவர் ஒரு ஹோம் மேக்கர் இல்லை ஒரு நல்ல மேனேஜர் .

தன்னம்பிக்கை திலகம்: மேஷ ராசி பெண் தன் பிள்ளைகளுக்கு உயர்ந்த கொள்கை கருத்துக்களை போதித்து உயர்ந்த லட்சியத்துட்டன் வாழ வைப்பார். இந்த உலகத்தில் நாம் தான் ரொம்பவும் சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் வாழ்கிறோம் என்ற எண்ணத்தை குழந்தைகளிடம் உருவாக்குவார். இவர் எந்நேரமும் தனக்கு பிடித்த வேலையையே செய்துகொண்டிருப்பார். அது வெட்டி வேலையாக கூட மற்றவருக்கு தோன்றலாம்மேஷ ராசி பெண் யாருக்கும் அடிமையாக இருக்கக்கூடாது என்ற எண்ணத்தில் வாழ்வதால் காதல் வலையில் சிக்கிக்கொள்ள கூடாது என்று முடிவு செய்து பல ஆண்களை நண்பர்களாகவே தக்க வைத்துக் கொள்வார். ஆனால், மேஷ ராசி பெண்ணின் வாழ்க்கையில் காதல் ஜுரம் அடிக்கடி வரும். விரைவில் நார்மலாகி விடும். ஆழமாகக் காதலிப்பார்; ஆனால் வேகமாகப் பிரிந்து விடுவார்.
மேஷ ராசி நெருப்பு ராசி என்பதால் இந்தப் பெண் படபடவென்று பேசுவார். கண நேரத்தில் முடிவெடுப்பார். பின்பு நிதானமாக சிந்தித்து உறவுச்சிக்கலில் இருந்து விடுபடுவார். அவரே பிரச்னைகளில் மாட்டிக் கொள்வார்; பின்பு அவரே விடுவித்துக் கொள்வார். இவர் வாழ்க்கையில் அப்ஸ் அண்ட் டவுன்ஸ் அடுத்தடுத்து வந்து கொண்டே இருக்கும்.

வேலை செய்யும் இடத்தில்... : மேஷ ராசி பெண் நல்ல நிறுவனத்தில் இண்டர்வியூவுக்கு போவார்; செலக்ட் ஆவார்; ஆனால், பணியில் சேர மறுத்துவிடுவார். தொழில் கூட்டாளிகள் இவரது திறமையைக் கண்டு பாராட்டி தம்முடன் பங்குதாரராக ஆக்கிக்கொள்ள முன்வருவர் . சரி சரி என்று சொல்லி அவர்கள் தனக்கு தரவிருக்கும் அதிக பட்ச சலுகைகளை எல்லாம் தெரிந்துகொண்டு பிறகு ‘‘கூலாக’’ மறுத்து விடுவார். தன் பெண்மை நலனை கருத்தில் கொண்டு ஆண்களைக் கவரும் எண்ணம் இவருக்கு இராது. சில சமயம் அதையும் இவர் விளையாட்டாகச் செய்வார். அதனால் எந்தப் பிரதிபலனும் எதிர்பார்க்க மாட்டார். அதே சமயம் தன் அறிவுத்திறனால் தன்னுடைய கருத்து விளக்கத்தால் [இண்டர்பிரட்டேஷனால்] இவர் பலரையும் இம்ப்ரெஸ் பண்ணுவார். பின்பு ஒரு நாள் தனக்கும் தன் அறிவுக்கும் எந்த தொடர்பும் இல்லாதது போல நடந்து கொள்வார்.

புதுமை விரும்பி: நினைத்ததை சாதிக்கும் திறமையுள்ள மேஷ ராசி பெண் அவ்வாறு சிரமப்பட்டுப் பெற்றதை பெரும்பாலும் தக்க வைத்துக் கொள்வதில்லை. அழுது அடம்பிடித்து ஒரு பொம்மையை வாங்கிவிட்டு வீட்டுக்கு வந்ததும் அதைக் கீழே எறிந்துவிடும் குழந்தையின் மனநிலையைப் போலவே மேஷ ராசி பெண்ணின் செயல்பாடும் இருக்கும். புதிது புதிதாக இவரது ஆர்வம் மாறிக்கொண்டே இருக்கும். இவருக்குத்  தெரியாத விஷயங்களே இல்லையோ என்று கருதும் வகையில் இவர் எந்நேரமும் ஏதாவது செய்து தன் அறிவை ஆற்றலை திறமையைப் பெருக்கிக் கொண்டே இருப்பார்.

அந்தரங்க ஆலோசகர்: மேஷ ராசி பெண்ணுக்குப்  பிறரது அந்தரங்க விஷயங்களை அடுத்த வீட்டு விஷயங்களை அறிந்து கொள்வதில் நாட்டம் இருக்காது. அதனால், இவரிடம் gossip, back biting போன்ற பழக்கங்கள் இருக்காது. ஆனாலும் நூறு பேரின் ரகசியமாவது இவரிடம் புதைந்து இருக்கும். யாராவது ஒரு அந்தரங்கப் பிரச்னை என்றால் இவரிடம் தான் வந்து ஆலோசனை பெறுவர். காரணம் இவர் inhibitionsக்கு அப்பாற்பட்டவர்.

வேலை மாற்றி வேலை: மேஷ ராசி பெண் பெரும்பாலும் வேலைக்குச்  செல்வார். வேலை பார்த்தால் தானே தனியாக இருந்து பிழைக்க முடியும். ஆனால், இந்த வேலை இருந்தால்தான் வாழ்க்கை என்ற எண்ணம் சிறிதும் இன்றி வேலையை திடீரென ராஜினாமா செய்து விடுவார் அல்லது சண்டை போட்டுக்கொண்டு வெளியே வருவார். எந்த வேலையையும் இவர் திறம்படச் செய்வார் என்பதால் உடனே இவர் வேறொரு வேலையில் சேர்ந்து உற்சாகமாகி விடுவார். இவரிடம் பணத்தைக் காட்டி வேலை வாங்க முடியாது. திறமையைச் சொல்லி வேலை வாங்க வேண்டும். இவர் பண விஷயத்தில் மிகவும் கவனமாக இருப்பார்; கிடைக்கும் சொற்ப வருமானத்தில் செம்மையாக வாழ்வார். அதே சமயம் சல்லிக் காசு யாருக்கும் செலவழிக்க மாட்டார். ஆடம்பர வாழ்வை விரும்ப மாட்டார். தனக்கு வேண்டிய வசதிகளை சரியாக அமைத்துக் கொள்வார். குறைந்த விலையில் அழகான பொருட்களை வாங்குவார். அதிக விலை கொடுத்து [expensive] எதையும் வாங்க மாட்டார்.

கலைகளில் நாட்டம்: மேஷ ராசிப் பெண்ணுக்கு சமையல் மற்றும் வீட்டு வேலைகளில் ஆர்வம் இருக்காது; ஆனால், இவர் தான் செய்தாக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் இவரா செய்தார் என்று அதிசயிக்கும்படி அழகாகவும் நேர்த்தியாகவும் செய்வார். கலைகளில் நல்ல ஆர்வமும்
தேர்ச்சியும் இருக்கும். எனவே, தன்  வீட்டையும் அலுவலகத்தையும் சுத்தமாகவும் அழகாக வைத்திருப்பார். கலைப் பொருட்களை சேகரித்து வீட்டை அழகாக்குவார். உணவில் எளிமையை விரும்புவார். வெளி உணவுகள் ஜங்க் ஃபுட் போன்றவற்றில் நாட்டம் இல்லாதவர். ஆடம்பர மோகம் கிடையாது. மண்ணாசை, பொன்னாசை இல்லாதவர் எனலாம். உடை உடுத்துவதில் அணிமணிகள் அணிவதில் வித்தியாசமான டெஸ்ட் உள்ளவர். அடுத்தவர் மாதிரி சேலை வாங்கிக் காட்ட மாட்டார். அடுத்தவர் போட்டிருக்கும் நகை மாதிரி வாங்கிப் போட மாட்டார் எதிலும் differentஆக இருக்க வேண்டும் என்று விரும்புவார்.

பாதி மருத்துவர்: மேஷ ராசி செவ்வாயின் ராசி. செவ்வாய் மருத்துவத்துக்கு அதிபதி என்பதால் இப்பெண் உடல்நலத்தில் மிகுந்த அக்கறை உள்ளவர். இவரே பாதி மருத்துவர். எல்லா நோய்க்கும் மருந்து சொல்வார்; டாக்டர்போல செயல்படுவார். அதிக நேரம் தூங்கமாட்டார். எப்போதும் விழிப்புடன் இருப்பார். எல்லோர் மீதும் ஒரு சந்தேகக் கண் வைத்திருப்பார். யாரையும் முழுமையாக நம்ப மாட்டார். தன்னைச் சுற்றிலும் தன் இருப்பிடத்தை சுற்றிலும் என்னென்ன நடக்கின்றன என்று தெரிந்து வைத்துக்கொள்வார். ஒரு சிறு சத்தம் கேட்டால் கூட என்ன ஏது என்று அறிந்து கொண்ட பின்பு தான் நிம்மதியாக இருப்பார். இவரைச் சுற்றி நடப்பது என்னவென்று இவருக்குக் கண்டிப்பாக தெரிந்தாக வேண்டும். எங்கு இருந்தாலும் எல்லோரையும்தான் பார்க்க எதுவாக ஒரு இடத்தை தேர்ந்தெடுப்பர். மறைவாக உட்கார்வது இவருக்குப் பிடிக்காது. சுற்றி இருப்பவர்களை விட உயரமான இடத்தில் அமர்ந்துகொள்ள விரும்புவார். மற்றவர்களை விட்டுத்  தனியாகப்போய் நிற்பார். எங்கேயாவது போகவேண்டும் என்றால் எல்லோருக்கும் முன்னால் நடந்து போவார். சேர்ந்து நடக்க மாட்டார். இவையெல்லாம் இவர் பிறவிக் குணங்கள்; இவற்றை புரிந்துகொள்ள வேண்டுமே அல்லாது மாற்ற நினைப்பது மடத்தனம்.

இளைஞருக்கும் நண்பர்: மேஷ ராசி பெண்ணுக்கு எல்லா இடத்திலும் ஒரு big boss attitude இருக்கும். மற்றவர்களின் பிரச்னைக்கு இவர் தீர்வு சொல்வார். இலவசமாக அறிவுரை ஹெல்த் டிப்ஸ்,  பியூட்டி டிப்ஸ் சொல்வார். அவை நல்ல பயன் தருவனவாக இருக்கும். வயதான பெரியவர்களின் அனுபவ மொழிகளைக் கேட்டு அதனை நினைவில் வைத்து அவ்வப்போது முன்பு இப்படி நடந்தது என்பார். இளைஞரின் நெருங்கிய நண்பராக இருந்து அவர்களின் slang பற்றியும் தெரிந்திருப்பார். next generation லேடி ஆக இருப்பார். அவர்கள் தம் ஆண் நண்பர் அல்லது பெண் நண்பரோடு எப்படி பழக வேண்டும் என்றும் டிப்ஸ் கொடுப்பார். வயதானவர்களிடம் புராண இதிகாசம் பற்றிப் பேசும் இவர் இளைஞரிடம் ரொமான்ஸ் பற்றிப் பேசுவார்.

திறந்த புத்தகம்: மேஷ ராசி பெண் தன்னைப் பற்றிய தனது குடும்பத்தைப் பற்றிய தனது நண்பர்கள் உற்றார், உறவினர் பற்றிய  அனைத்து விஷயங்களையும் அனைவரிடமும் சொல்லி விடுவார். இவருக்குள் ரகசியம் என்பதே கிடையாது. தான் செய்வது அனைத்தும் சரி என இவர் முடிவு செய்திருப்பதால் பிறர் தவறு என நினைக்கும் விஷயங்களையும் இவர் பட்டென்று அனைவரிடமும் பகிர்ந்து கொள்வார். அதே சமயம் மேஷ ராசி பெண் தன்னைப் போல பிறரும் திறந்த புத்தகமாக இருக்க வேண்டும் என்று விரும்புவார். தன்னோடு சிறிது நேரம் பழகியவர் தன்னிடம் எதையாவது மறைத்தால் கூட இவருக்கு பிடிக்காது.. இவர் தன் அன்றாட வாழ்வின் இன்ப துன்பங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வார். ஒரே மாதிரி அக்கறையோடு அணுகுவார். உணர்ச்சி வசப்பட்டு பேசுவார். தனக்கு தெரிந்தவர் நண்பர், உறவினர் எவரையும் விட்டுக்கொடுக்காமல் பேசுவார். இவரைப் பற்றி அவர்கள் மோசமாகப் பேசினாலும் கூட இவர் தனக்குத் தெரிந்தவர்களைப் பற்றி தவறாகப் பேச மாட்டார். யாரையும் பேச விட மாட்டார். மேஷ ராசி பெண்ணிடம் போய் யாரும் உன் வீட்டார் மோசம் உன் நண்பர்கள் மோசம் என்று குற்றம் சுமத்தக் கூடாது.

வலி தாங்காதவர்: மேஷ ராசிப் பெண் வெளியே பார்க்க துணிச்சலான பெண்ணாக தெரிந்தாலும் உடலில் வலி பொறுக்க மாட்டார். உடலில் லேசாகக் காயம்பட்டாலும் மனதில் காயம் பட்டாலும் மிகவும் வருந்துவார். மற்றவர்களின் துரோக நடவடிக்கைகளால் அடிக்கடி உள்ளுக்குள் உடைந்து போவார். தன்னைப் பற்றியோ; தன் குடும்பத்தவர்; தன் நண்பர்கள்; தான் சார்ந்த கட்சி கொள்கை; பற்றியோ யாரும் விமர்சித்தால் இவரால் தாங்கிக் கொள்ளவே முடியாது. எதிர்த்து பேசி தன்னை defend செய்வார். அதனால் இவர் ஆட்களோடு பழகும் போது மிகவும் ஜாக்கிரதையாக பார்த்துப் பழகுவார்.
மேஷ ராசி பெண் பல தரப்பினர் கலந்து கொள்ளும் பெரிய விருந்து விசேஷங்களில் கலந்து கொள்ள மாட்டார். வேடிக்கையாகப் பேசுவது கூட சில சமயம் இவரிடம் விபரீதம் ஆகிவிடும். எந்த இருவருக்கும் இடையிலான  பழக்கமாக இருந்தாலும் அதில் நேர்மை இருக்க வேண்டும் என்று நினைப்பார். மரியாதை இருக்க வேண்டும் என நினைப்பார். வேலைக்காரப் பெண்களின் குடும்ப விஷயங்களைக் கேட்டு அவரிடம் பாசமும் பரிவும் கொண்டு இருப்பார். முன்பின் தெரியாத  பலருக்கும் உதவி செய்யும் இரக்க குணம் இவருக்கு இருக்கும். பிறருக்காக அதிகமாக அழுபவர் என்பதால் யாருக்காவது விபத்து மரணம் என்று கேள்விப்பட்டால் முதல் ஆளாக அங்கு போய் நிற்பார், வேண்டிய உதவிகளை செய்வார், மற்றவர்கள் வர ஆரம்பித்ததும் இவர் அமைதியாக வந்துவிடுவார்.

சின்னம் - ஆடு: மேஷ ராசியின் சின்னம் ஆடு என்பதால் இந்த ராசியில் பிறந்த பெண் மெலிந்த தேகமும் பளிச்சென்ற முகமும் பெரிய கண்களும் சற்று கூன் போட்டு நடக்கும் உடலமைப்பும் கொண்டிருப்பார். இவர் ஆடை அலங்காரத்தில் அதிகம் கவனம் செலுத்த மாட்டார். ஆனாலும் இவர் உடை அலங்காரம் எல்லாம் மற்றவரால் பேசப்படும் வகையில் வித்தியாசமாகவே இருக்கும் . ஊருக்காக தன் ஹேர்ஸ்டைல் மற்றும் உடை உடுத்தும் பாணியை மாற்றிக் கொள்ள மாட்டார். மாடர்னாக ட்ரெண்டியாக இருப்பதை விட, தனக்கு எது பிடிக்குதோ அதையே செய்ய விரும்புவார். பலருக்கும் இவர் உலகத்தோடு ஒத்துப்போகாத ஒரு வினோத பிறவி எனத் தோன்றும்.. ஆனால் இவரைப் புரிந்து கொண்டவர்களுக்கு இவர் ஒரு காவல் தெய்வம்; காதல் தேவதை.

(தொடரும்)

முனைவர்
செ. ராஜேஸ்வரி


Tags : Aries ,deity love angel ,
× RELATED பகலும் இரவும் நிறம் மாறும் மரகதப்பவளம்