×

வையகம் ஆள வரதராஜராக வந்தார்!

அது காலதேச வர்த்தமானங்களை தாண்டிய புராண காலம். எம்பெருமான் பாற்கடல் நாயகன் பூவுலகில் தன்னை எல்லோரும் தரிசித்து உய்வடைய வேண்டி கருணை பொங்க பூமியை நோக்கினான். அந்தப் பார்வை பிரம்மனின் மூலமாக காஞ்சியை அடைந்தது. யுகாந்திரங்களாக நிலைக்கப் போகும் விஷயம் பேரருளோடு வருவதை அறிந்த பிரம்மா காஞ்சி எனும் பெருந்தலத்திற்கு வந்தமர்ந்தார். கார்மேக வண்ணனை காண்பதற்காக கமலாசனன் (பிரம்மன்) காஞ்சியில் அஸ்வமேத யாகம் தொடங்கினான். வேள்விச் சாலையில், கிழக்கு முகமாக அமர்ந்து யாகம் செய்யத் தயாரானார், நான்முகனான பிரம்மா. ரிஷிகள், புரோகிதர்கள், வேதவிற்பன்னர்கள் ஆயத்தமாகினர். புரோகிதரான வசிஷ்டர் அவ்விடம் வந்ததும் “உன்னத யாகம் நடத்தும்போது உரியவளை அழைக்க வேண்டாமா? மகத்தான வேள்வி நடத்துகையில் மனைவி உடனிருக்க வேண்டாமா!’’ என்று கேள்வி எழுப்பினார். வேள்வி தொடங்கும் வேளையிலே இப்படி ஒரு கேள்வியா என்றெண்ணிய வேதத்தன்,‘‘ஊடல் ஏற்பட்டதன் காரணமாக விலகி சென்ற வித்யா, சரஸ்வதி நதிக்கரையில் தவம் புரிகிறாள்’’என்றார். அப்படியா என்றதும் பிரம்மாவின் மற்ற மனைவிகளான சாவித்திரி, காயத்திரி இருவரையும் பிரம்மாவோடு அமர வைத்தார். அஸ்வமேத யாகம் ஆரம்பமானது.

பிரம்மா யாகம் செய்வதையும் அதற்கு தன்னை அழைக்காமல் இருப்பதையும் அறிந்த அன்ன வாகனி, சாந்த ஸ்வரூபிணி கலைமகள் கடுஞ் சினம் கொண்டாள். யாகத்தை தடுத்து நிறுத்தும் பொருட்டு தனது சக்தியால் சந்திரனையும், சூரியனையும் கிரகிக்க வைத்து சத்தியவிரத க்ஷேத்திரத்தையே (காஞ்சிபுரம்) இருளில் மூழ்கும்படிச் செய்தாள். இருளால் சூழப்பட்ட காஞ்சியில் யாகம் செய்ய முடியாமல் தவித்தார் பிரம்மா.வேள்வி இடையூறின்றி நடக்க அருள் புரியுமாறு விஷ்ணுவை வேண்டினார் வேதமுகன். பொழுது சாய்ந்து நாழிகை இரண்டு கடந்த நிலையில் விண்ணில் விளக்கு ஒளிபோல் ஜோதியாய் தோன்றினார் த்ரிவிக்கிரமன் திருமால். பிரம்மனின் யாகம் தடையின்றி நடந்தேற ஒளி கொடுத்து அருளினார். சூரிய, சந்திரர்களின் ஒளி கிடைக்காத வண்ணம் இருந்த தடைகளை  நீக்கினார். மீண்டும் உலகம் வெளிச்சமாகியது. இதைக்கண்டு பொங்கி எழுந்த புனிதவதி சரஸ்வதி, தன் சக்தி முழுவதையும் பிரயோகித்து அக்கினி வடிவில் மாய நலன் என்ற ஒரு கொடிய அரக்கனைப் படைத்தாள்.

அக்னி வடிவில் யாகத்தை அழிக்க எழுந்தான், அசுரன். யாக குண்டத்தில். அவனை தடுத்து, பெருமாள் தனது கையில் தீபம் போல் ஏந்தி யாகசாலைக்கு மேலும் வெளிச்சம் வருமாறு அருளினார். இவ்வாறு அக்னியைக் கையில் தீபம் போல் ஏந்தி நின்றதால் விளக்கொளிப் பெருமாள் (தீபப் பிரகாசர்) என அழைக்கப்படுகிறார். விளக்கொளிப் பெருமாள் மூலவராக உள்ள தலம் சத்தியவிரத க்ஷேத்திரத்தில் (காஞ்சிபுரம்) உள்ளது. இத்தலத்தில் பெருமாள் மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் தீபப்பிரகாசர், விளக்கொளிப் பெருமாள், திவ்யப் பிரகாசர், என்னும் நாமங்களை தாங்கி நிற்கிறார். பிரம்மனின் அஸ்வமேத யாகம் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. இதையறிந்த சரஸ்வதி தேவி தன் சக்தியால் உருவான அசுர சக்திகளை யாக சாலையை நோக்கி அனுப்பினாள். யாகம் செய்து கொண்டிருந்த ரிஷிகள், அசுர சக்திகள் படையெடுத்து வருவதைக் கண்டு அஞ்சி ஓடினார்கள். யாகம் தடைப்பட்டு விடுமோ என்றஞ்சிய பிரம்மா, மீண்டும் மகாவிஷ்ணுவை வேண்டினார். அப்போது எட்டுத் திருக்கரங்களில் எட்டு ஆயுதங்களை ஏந்தியபடி அஷ்டபுஜப் பெருமாளாகத் திருமால் அங்கே தோன்றினார். அட்டபுயக்கரம் அல்லது அஷ்டபுஜகரம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் காஞ்சிபுரத்தில் காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலில் இருந்து சுமார் ஒரு மைல் தூரத்தில் உள்ளது. காளியை இவ்விடத்தே அடக்கினார். இதற்குச் சான்றாக

இச்சந்நதியின் அருகே கருங்காளியம்மன் கோயில் ஒன்றுள்ளது. வாள், வில், அம்பு, கதை, சங்கு, சக்கரம், கேடயம், தாமரை என்று எட்டுக் கரங்களில் எட்டு ஆயுதங்களோடு வந்து அசுரர்களைத் தாக்கி விரட்டினார் திருமால். பிரம்மாவின் யாகம் மீண்டும் அமைதியாக நடைபெறத் தொடங்கியது.திருமாலால் விரட்டப்பட்ட அசுர சக்திகள், சரஸ்வதி நதிக்கரையில் இருந்த கலைமகளிடம் வந்தனர். இந்த முயற்சியும் தோற்றுப்போனதால் வெகுண்டெழுந்த சரஸ்வதி தானே யாகத்தை நிறுத்தபோவதென முடிவு எடுத்தாள்.  வேதநாயகி, வேகவதிஎன்னும் நதியாக மாறினாள். பிரம்மாவின் யாகசாலையை அழிப்பதற்காகப் புறப்பட்டு வந்தாள். வேகவதி நதியாக வேதவல்லி உருவவெடுத்து வருவதை தனது ஞானத்தால் அறிந்த பிரம்மன், மகாவிஷ்ணுவை மீண்டும் நாடி முறையிட்டார். நான் பார்த்துக்கொள்கிறேன். என்று வாக்குறுதி அளித்த வாசுதேவ மைந்தன்.

வேகாசேது என்ற திருநாமத்துடன், அந்த வேகவதி நதிக்குக் குறுக்கே அணையாக வந்து சயனித்தார் திருமால். வேகாசேது என்றழைக்கப்பட்ட அந்தப் பெருமாள், பின்னாளில் திருமழிசை ஆழ்வாரின் பாடலுக்குக் கட்டுப்பட்டு அவர் பின்னே சென்ற படியால், ‘சொன்ன வண்ணம் செய்த பெருமாள்’ என்று பெயர் பெற்றார்.பிரம்மா, சரஸ்வதி இருவரையும் அழைத்துப் பேசி, சமாதானப்படுத்தி, இணைத்து வைத்தார் திருமால். சரஸ்வதி, சாவித்திரி, காயத்திரி ஆகிய மூவருடன் தனது அசுவமேத யாகத்தைத் தொடர்ந்து செய்தார் பிரம்மா. யாக வேதியில் இருந்து ஆயிரம் சூரியன்கள் உதித்தாற்போல் அக்னியில் இருந்து உதயம் ஆனார். வரதராஜப் பெருமாள் புண்ணியகோடி விமானத்துடன் தோன்றிப் பிரம்மாவுக்குக் காட்சியளித்தார். கிழக்கு நோக்கி யாகம் செய்த பிரம்மாவைப் பார்த்தபடி மேற்கு முகமாக வரதராஜர் தோன்றினார். நெருப்பில் தோன்றியபடியால், இன்றும் வரதராஜர் உற்சவரின் முகத்தில் தீக்காயங்களைக் காணலாம்.

சு.இளம் கலைமாறன்
காஞ்சி எம்.பாஸ்கரன்

Tags : Viyakam ,
× RELATED ஸ்ரீ ராம தரிசனம்