×

உண்டோ வைகாசி விசாகத்துக்கு ஒப்பொரு நாள்

* வைகாசி விசாகம் - நம்மாழ்வார் அவதார திருநட்சத்திரம் - 15:06:2019

வேதங்களின் துணைகொண்டு மட்டுமே இறைவனை அறியலாம் என்பது பெரியோர்களின் வாக்கு. ஆனால் நம் போன்ற எளியவர்களுக்கு வடமொழி  வேதத்தின் சாரத்தை அறிந்து இறைவனைப் புரிந்து கொள்வது கடினம். அத்தகைய எளியவர்களான நம்மேல் கருணை கொண்டார் திருமாலின்  படைத்தளபதியான விஷ்வக்சேனர். அவரே வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தில், திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார் திருநகரியில்  காரிமாறன்-உடைய நங்கைக்கு மகனாக நம்மாழ்வாராக அவதரித்தார்.

“மறைப்பாற்கடலைத் திருநாவின் மந்தரத்தால் கடைந்து
துறைப்பால் படுத்தித் தமிழ் ஆயிரத்தின் சுவை அமுதம்”

என்ற பாடலுக்கேற்ப, திருமால் மந்தர மலையை மத்தாக்கிப் பாற்கடலைக் கடைந்து தேவாமுதத்தை எடுத்துத் தந்தாற்போல், நம்மாழ்வார் தம்  நாவையே மத்தாக்கி வேதங்களாகிய கடலைக் கடைந்து திருவாய்மொழி என்னும் தமிழ் மறையைத் தந்தார். நீண்ட நாட்களாகக் குழந்தைப் பேறு  இல்லாத தம்பதிகளாகிய காரிமாறனும் உடையநங்கையும் திருக்குறுங்குடி நம்பியிடம் குழந்தை பாக்கியம் வேண்டினார்கள். அந்தப் பெருமாளின்  அருளால் அவர்களுக்கு நம்மாழ்வார் குழந்தையாகப் பிறந்தார்.குழந்தை பிறக்கும் போது, சடம் என்னும் வாயு அதைப் பிடித்து, உலகியல் பந்தங்களுக்குள் அழுத்துமாம். நம்மாழ்வாரோ அவதரிக்கும் போதே அந்த  சடம் என்னும் வாயுவை வென்றபடியால், சடாரி, சடகோபன், சடஜித் என்றெல்லாம் பெயர் பெற்றார்.

குழந்தை பிறந்தவுடன் அழவில்லை, பால் குடிக்கவில்லை, கைகால்களை அசைக்கவில்லை. உலக இயல்புகளுக்கு மாறி இருந்தபடியால்  அக்குழந்தைக்கு மாறன் என்று அவர்கள் பெயரிட்டார்கள். அவர் தான் பின்னாளில் நம்மாழ்வார் என்று போற்றப்பட்டார். நம்மாழ்வாரைத் திருக்குருகூர்  ஆதிநாதப் பெருமாள் சந்நதியில் கிடத்தி, “நீ அருளிய குழந்தை அழவில்லை, உடலை அசைக்கவில்லை, பால் அருந்தவில்லை. இதை உன்னிடமே  சமர்ப்பிக்கிறோம்!”  என்று பெருமாளிடம் சொல்லி விட்டுக் காரிமாறனும் உடையநங்கையும் சென்றார்கள்.

அப்போது அக்குழந்தை அங்கிருந்து தவழ்ந்து சென்று ஆதிநாதப் பெருமாள் சந்நதிக்கு அருகாமையில் உள்ள புளியமரப் பொந்தில் யோகத்தில்  அமர்ந்தது. பதினாறு ஆண்டுகள் அங்கேயே யோகத்தில் இருந்தது. வடநாட்டு யாத்திரை சென்றிருந்த மதுரகவிகள் தென்திசையில் ஒரு ஜோதி  தெரிவதைக் கண்டார். அதைப் பின்தொடர்ந்து வந்த அவர், ஆழ்வார் திருநகரி புளியமரத்தினுள் யோகத்திலிருந்த நம்மாழ்வாரிடம் இருந்து அந்த ஜோதி  வருவதை உணர்ந்தார். நம்மாழ்வாரைப் பார்த்து, “செத்தத்தின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?” என்று கேட்டார்.  (செத்தது என்றால் உடல், சிறியது என்றால் ஜீவாத்மா. உடலில் இருக்கும் ஜீவாத்மாவுக்கு ஞானம் பிறந்தால், அது யாரைப் போய் பற்றும், எதை  அடையும் என்பது கேள்வி).

அதற்கு விடையளித்த நம்மாழ்வார், “அத்தைத் தின்று அங்கே கிடக்கும்!” என்றார். (ஜீவாத்மா ஞானம் பெற்றால், இறைவனே கதி என்று உணர்ந்து  அவன் திருவடிகளைப் பற்றி அந்த இறைவனையே சென்றடையும் என்பது பதில்). நம்மாழ்வாரின் ஞானத்தின் ஏற்றத்தை உணர்ந்து அவருக்குச்  சீடரான மதுரகவிகள், அவரைக் குறித்து கண்ணிநுண் சிறுத்தாம்பு எனப்படும் பதினொன்று பாடல்களைப் பாடினார்.

அதைத் தொடர்ந்து நம்மாழ்வார், ரிக் வேத சாரமாகத் திருவிருத்தம், யஜுர் வேத சாரமாகத் திருவாசிரியம், சாம வேத சாரமாகத் திருவாய்மொழி,  அதர்வண வேத சாரமாகப் பெரிய திருவந்தாதி என நான்கு நூல்களைப் பாடினார். வேதம் தமிழ் செய்தவர் என்றும், ஆழ்வார்களுக்குள் தலைவர்  என்றும் போற்றப்படும் நம்மாழ்வார், 35 ஆண்டுகள் பூமியில் எழுந்தருளியிருந்து, அதன்பின் வைகுண்டத்தை அடைந்தார்.

அவரது திருவாய்மொழிப் பாசுரங்களுக்குக் குறிஞ்சி, நட்டபாடை, வியந்தம், கொல்லி, தக்கராகம், இந்தளம் உள்ளிட்ட தமிழ்ப்பண்களும், ஏழொத்து,  ஒன்பதொத்து, இடையொத்து, நடையொத்து உள்ளிட்ட தமிழ்த் தாளங்களும் உள்ளன. நம்மாழ்வாரைப் பற்றி சடகோபர் அந்தாதி என்னும் நூறு  பாடல்கள் பாடினார் கவிச்சக்கரவர்த்தி கம்பர். அதன் முதல் பாடலில்,

வேதத்தின் முன்செல்க மெய்யுணர்ந்தோர் விரிஞ்சன் முதலோர்
கோதற்ற ஞானக் கொழுந்தின் முன்செல்க குணங்கடந்த
போதக்கடல் எங்கள் தென்குருகூர்ப் புனிதன் கவியோர்
பாதத்தின் முன்செல்லுமே தொல்லை மூலப் பரஞ்சுடரே

என்கிறார். கோயில் உற்சவங்களில் வடமொழி வேத பாராயண கோஷ்டி பெருமாளுக்குப் பின்னால் செல்லும். ஆனால் தமிழ் வேதமாகிய ஆழ்வார்  பாசுர கோஷ்டியோ பெருமாளுக்கு முன்னாடி செல்லும். வடமொழி வேதம் பெருமாளின் பின் செல்ல, பெருமாளோ தமிழ் வேதத்தின் பின்னே  செல்கிறார். இத்தகைய ஏற்றம் பெற்ற நம்மாழ்வார் அவதரித்த நன்னாளாகிய வைகாசி விசாக நாளன்று, திருநெல்வேலி மாவட்டத்தில் அவரது  அவதார ஸ்தலமான ஆழ்வார் திருநகரியில் பத்து நாட்கள் நம்மாழ்வார் அவதார உற்சவம் வெகு சிறப்பாக வருடா வருடம் நடைபெறுகிறது. இந்த  வருடம் வைகாசி விசாக நன்னாளாகிய ஜூன் 15-ம் தேதிக்குப் பத்து நாட்கள் முன் தொடங்கும் உற்சவம், வைகாசி விசாகத்தன்று தீர்த்தவாரியோடு  நிறைவடையும்.

ஜூன் 6-ம் தேதி ஆழ்வார் திருநகரி ஆதிநாதப் பெருமாள்-நம்மாழ்வார் திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் உற்சவம் தொடங்கும். அன்று முதல்  தினமும் காலை தோளுக்கினியானில் புறப்பாடும் திருமஞ்சனமும் கண்டருளுவார் நம்மாழ்வார். மாலையில் வெவ்வேறு வாகனங்களில்  நம்மாழ்வாருக்குப் புறப்பாடு நடைபெறும்.முதல் நாள் வெள்ளி இந்திர விமானத்திலும், இரண்டாம் நாள் புஷ்பப் பல்லக்கிலும், மூன்றாம் நாள் தங்கப் புன்னைமர வாகனத்திலும், நான்காம் நாள்  தங்கத் திருப்புளி வாகனத்திலும் மாலை வேளைகளில் நம்மாழ்வார் எழுந்தருள்வார்.

உற்சவத்தின் ஐந்தாம் திருநாளாகிய ஜூன் 10-ம் தேதி அன்று காலை, நவ திருப்பதிகளைச் சேர்ந்த பெருமாள்கள், நம்மாழ்வாரைச் சந்திக்கும்  ஆவலுடன் ஆழ்வார் திருநகரியை
அடைவார்கள்.

*   ஸ்ரீவைகுண்டம் வைகுண்டநாதப் பெருமாள்
* வரகுணமங்கை நத்தம் விஜயாசனப் பெருமாள்
* ஸ்ரீ திருக்கோளூர் வைத்தமாநிதிப் பெருமாள்
*  திருப்புளிங்குடி காய்சின வேந்தன்
*  ஆழ்வார் திருநகரி ஆதிநாதப் பெருமாள்
*  தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்   காதர்
* திருக்குளந்தை ஸ்ரீநிவாசப் பெருமாள்
* இரட்டைத் திருப்பதி அரவிந்த லோசனர்
*  இரட்டைத் திருப்பதி தேவப்பிரான்

ஆகிய ஒன்பது பெருமாள்களும் முறையே ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ராகு, கேது ஆகிய நவ கிரகங்களையும்  ஆள்கின்ற பெருமாள்கள். இவர்கள் அனைவரும் காலையில் ஆழ்வார் திருநகரி பூப்பந்தலில் நம்மாழ்வாரிடம் இருந்து மங்களாசாசனம் பெறுவார்கள்.  அதைத் தொடர்ந்து அவர்களுக்குத் திருமஞ்சனம் நடைபெறும். இரவில் ஒன்பது பெருமாள்களும் கருட வாகனத்தில் எழுந்தருள, ஹம்ஸ வாகனத்தில்  எழுந்தருளும் நம்மாழ்வார் பாசுரம் பாடி அப்பெருமாள்களை மங்களாசாசனம் செய்வார். நம்மாழ்வாரின் சீடர் மதுரகவிகள் பறங்கி நாற்காலியில்  எழுந்தருள்வார்.

அப்போது ஆதிநாதப் பெருமாள் ஒன்றும் தேவும் பாசுரம் பதித்த பதக்கத்தையும், நம்மாழ்வார் கண்ணிநுண் சிறுத்தாம்பு பாசுரம் பதித்த பதக்கத்தையும்  அணிந்திருப்பார்கள். மறுநாள் காலை பிரியா விடை பெற்றுக் கொண்டு தத்தம் சந்நதியை ஒன்பது பெருமாள்களும் அடைவார்கள். ஆறாம் திருநாளன்று  காலையில் திருமஞ்சனம் கண்டருளும் நம்மாழ்வார், மாலையில் வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருள்வார்.

ஏழாம் திருநாள் அன்று காலை ராமாநுஜருக்கும் நம்மாழ்வாருக்கும் சேர்த்தி திருமஞ்சனம் நடைபெறும். மாலை வெள்ளி சந்திரப் பிரபையில் புறப்பாடு  கண்டருள்வார் நம்மாழ்வார். எட்டாம் திருநாளன்று காலை தவழ்ந்த கிருஷ்ணன் திருக்கோலத்தில் காட்சியளிக்கும் நம்மாழ்வார் மாலையில் குதிரை  வாகனத்தில் புறப்பாடு கண்டருள்வார்.
ஒன்பதாம் திருநாளன்று காலை நம்மாழ்வாருக்குத் தேரோட்டம் நடைபெறும்.

பத்தாம் திருநாளாகிய வைகாசி விசாகத்தன்று காலை தாமிரபரணியில் ஆதிநாதப் பெருமாளுக்கும் நம்மாழ்வாருக்கும் தீர்த்தவாரி நடைபெறும்.  அதன்பின் ஆதிநாதப் பெருமாள் சந்நதிக்கு எழுந்தருளும் நம்மாழ்வார் பெருமாளிடம் தீர்த்தம் சடாரி மரியாதைகளைப் பெறுகிறார். ஆதிநாதப் பெருமாள்  குறித்து நம்மாழ்வார் பாடிய ஒன்றும் தேவும் எனத்தொடங்கும் திருவாய்மொழிப் பதிகம் ஓதப்படும்.

அன்று மாலை பெருமாளும் நம்மாழ்வாரும் வெட்டி வேர் சப்பரத்தில் எழுந்தருள்வார்கள். அதைத் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு ஆழ்வாருக்கு விடாய்  ஆற்றி உற்சவங்கள்
நடைபெறும்.

உண்டோ வைகாசி விசாகத்துக்கு ஒப்பொரு நாள்
உண்டோ சடகோபர்க்கு ஒப்பொருவர் - உண்டோ
திருவாய்மொழிக்கு ஒப்பு, தென்குருகைக்கு உண்டோ
ஒரு பார்தனில் ஒக்கும் ஊர்

- நாகராஜன்

Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?