×

அம்மையே வருக! என திருவாய்மொழிந்த அரன்

மாங்கனி திருவிழா, காரைக்கால், புதுவை

புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்காலில் 63 நாயன்மார்களில் பெண் நாயன்மாரும் ஈசனால் அம்மையே என்றழைக்கப்பட்டவருமான புனிதவதியார் எனும் ஸ்ரீகாரைக்கால் அம்மையாரின் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் மாங்கனி திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு மாங்கனி திருவிழா வரும் ஜூன் மாதம் 30ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் பவழக்கால் சப்ரத்தில் வீதியுலா செல்லும் நிகழ்ச்சியும், அந்த சமயம், பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை தீர்க்கும் வகையில், மாங்கனிகளை வாரி இறைக்கும் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. ஸ்ரீபிச்சாண்டவர் பவழக்கால் விமானத்தில் வீதியுலாவின் போது, பக்தர்கள் சிவனை வேண்டி மாங்கனிகளை இறைத்து பக்தர்கள் பிரார்த்தனை செய்வார்கள். இதனைத் தொடர்ந்து ஸ்ரீபிச்சாண்டவர், காரைக்கால் அம்மையார் இல்லத்தில் விருந்துண்ணும் நிகழ்வாக அமுது படையல் நிகழ்ச்சியும் நடைபெறும்.

காரைக்காலில் வணிகர் குலத்தைச் சேர்ந்த தனதத்தன் என்பவருக்கு மகளாக பிறந்தவர் புனிதவதி. இவர் சிறுவயது முதல் சிவ பக்தியிலும், சிவனடியார்களுக்கு தொண்டு புரிவதிலும் சிறந்தவர். இவரை நாகப்பட்டினத்தில் உள்ள வணிகரின் மகன் பரமதத்தனுக்கு திருமணம் செய்து வைத்தனர். திருமணத்துக்கு பிறகும் புனிதவதி சிவனடியார்களுக்கு அன்னம், பொன், பொருட்களை கொடுத்து சிவ தொண்டு செய்து வந்தார். ஒரு நாள் பரமதத்தனுக்கு தனக்கு கிடைத்த மாங்கனிகளை தனது வேலையாட்கள் மூலம் வீட்டிற்கு கொடுத்து அனுப்பினான். அதனை பெற்றுக்கொண்ட புனிதவதி தனது கணவனின் வரவுக்காக காத்திருந்தார். அப்போது பசியுடன் ஒரு சிவனடியார் வந்தார் சிவன். வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த புனிதவதியோ, ‘‘சமைக்க சற்று தாமதமாகும் காத்திருங்கள்’’ என்று கூறினார்.

அதற்கு சிவனடியார் ‘‘அம்மா! தாயே! பசியில் உயிர் போகிறது, ஏதேனும் இருப்பதைக் கொடும்மா!’’ என்றார்.
அப்போது புனிதவதியாருக்கு தனது கணவன் கொடுத்து அனுப்பிய மாங்கனிகள் இருப்பது நினைவுக்கு வந்தது. அதிலிருந்து ஒன்றை எடுத்து சிவனடியாருக்கு உண்ணக் கொடுத்தார். அதனை உண்ட சிவனடியார் வேடத்தில் வந்த சிவபெருமானும் புனிதவதியை வாழ்த்தி அவ்விடம் விட்டுஅகன்றார். அவர் சென்ற பின்னர் மதிய உணவு உண்பதற்காக வீட்டிற்கு வந்த பரமதத்தன், தனது மனைவி புனிதவதியிடம்
‘‘மாங்கனிகளை எடுத்து வா’’ என்று கேட்டார். புனிதவதியோ, சிவனடியாருக்கு கொடுத்த ஒரு மாங்கனி போக மீதம் இருந்த மற்றொரு மாங்கனியை தன் கணவனிடம் கொண்டு வந்து கொடுத்தார். அக்கனியை உண்ட பரமதத்தன், மாங்கனி ருசியாக இருக்கிறது. இரண்டாவது மாங்கனியையும் எடுத்து வருமாறு கூறினார். இதைக் கேட்ட புனிதவதி, பூஜை அறைக்கு சென்று சிவபெருமானிடம் மாம்பழம் கொடுத்து அருளுமாறு வேண்டினார். சிவனும் உடனே புனிதவதிக்கு மாங்கனியை அருளினார்.

அதனை பெற்றுக் கொண்ட புனிதவதி, தன் கணவன் பரமதத்தனிடம் மாங்கனியை கொடுத்தாள். அக்கனியை உண்ட பரமதத்தனுக்கு தான் முன்பு சாப்பிட்ட மாங்கனியை விட இரண்டாவது கனி மிகவும் சிறப்பான சுவையுடன் இருந்ததால், புனிதவதியிடம் மாங்கனி சுவையின் வேறுபாடு பற்றி கேட்டான். கணவனின் கேள்விக்கு பொய் சொல்ல விரும்பாத புனிதவதி நடந்தவற்றை மறைக்காமல் தனது கணவனிடம் தெரிவித்தாள். இதனைக் கேட்ட பரமதத்தன், அப்படியானால் சிவபெருமானிடம் இருந்து இன்னொரு மாங்கனி பெற்றுத் தருமாறு வேண்டினான். புனிதவதியும் சிவபெருமானை வேண்ட இன்னொரு மாங்கனியும் கிடைத்தது. இதனைக்கண்ட பரமதத்தன் தன் மனைவி ஒரு தெய்வம் என்று எண்ணி அவளது காலில் விழுந்து வணங்கினார்.

தன் மனைவியை விட்டு விலகி பாண்டிய நாடு வந்த பரமதத்தன், குலசேகரன்பட்டிணத்தில் தங்கி வணிகம் செய்ய ஆரம்பித்தார். பிறகு அங்கேயே ஒரு பெண்ணை மணந்து வாழ்ந்து வந்தார். அந்த பெண்ணுக்கு பிறந்த பெண் குழந்தைக்கு தனது முதல் மனைவியின் பெயரான புனிதவதி என்று பெயரிட்டு அழைத்து வந்தார். இந்த தகவலை அறிந்த புனிதவதியார் குலசேகரன்பட்டிணம் வந்து, ஊர் எல்லையில் உள்ள ஒரு மண்டபத்தில் அமர்ந்து கொண்டு கணவனுக்கு அழைப்பு விடுத்தார். தனது 2வது மனைவி, மகளுடன் வந்து, முதல் மனைவியான காரைக்கால் அம்மையார் காலில் விழுந்து வணங்கி, அங்கு கூடியிருந்த மக்களையும் வணங்க வைத்தார். கணவனே தன்னை தெய்வம் என்று கூறி வணங்கியதால் இறைவனை வேண்டி முக்தி அடைந்தார். பின்னர் அங்கிருந்து கயிலாயம் புறப்பட்டுச் சென்றார். கயிலாயம் உலகையே ஆளும் சிவன், வாசம் செய்யும் இடம் என்பதால் அங்கு, காலால் நடப்பது குற்றம் என்று எண்ணிய புனிதவதியார், தனது தலையாலேயே கயிலாயத்தில் நடந்து சென்றார். அப்போது இறைவன்,
‘‘அம்மையே! நலமாக வந்தனையோ? நம்மிடம் வேண்டுவது யாது?’’
என்று புனிதவதியை நோக்கி கேட்டார்.

அதற்கு அம்மையார், ‘‘இறைவா! உன்மீது என்றும் நீங்காத அன்போடு நான் இருக்கவேண்டும். பிறவாமை வேண்டும், மீண்டும் பிறந்தால் உம்மை என்றும் மறவாமை வேண்டும். அனுதினமும் உன் திருவடியின் கீழ் இருந்து என்றும் உன் திருநாமத்தை பாடிக் கொண்டிருக்கும் வரம் வேண்டும்’’ என்று கேட்டார். உடனே சிவபெருமான், ‘‘அம்மையே! நீவீர் பூலோகத்தில் உள்ள திருவாலங்காட்டில் எனது திருவடியின்கீழ் இருந்து பாடும் வரம் தந்தோம்’’ என்று அருளினார். அதன்படி இன்றும் திருவாலங்காட்டில் உள்ள நடராஜப் பெருமானின் ரத்தின சபையில் காரைக்கால் அம்மையார் அமர்ந்து சிவபெருமானின் நடனத்தை கண்டு மகிழ்கிறார் என்பது ஐதீகம். சிவபெருமான் காரைக்கால் அம்மையாருக்கு அருளிய மாங்கனியை நினைவு படுத்தும் விதமாக மாங்கனி திருவிழா நடைபெறுகிறது.

- இ.எஸ்.சுகந்தன்


Tags : moon ,
× RELATED திருவாரூர் தியாகராஜர் சுவாமி...