×

அதிமுக தொண்டர்களே ஒதுக்கும் நிலையில் ஓபிஎஸ்சுடன் ஏன் பயணித்தோம் என நினைக்கும்போது வெட்கமாக இருக்கிறது: கே.பி.முனுசாமி பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி நேற்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:ஓ.பன்னீர்செல்வத்திடம் நான் கேட்கிறேன். நான்கரை ஆண்டு காலம் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியோடு துணை முதல்வராக பயணித்தீர்கள். அப்போது இந்த சிந்தனை வரவில்லையா? இப்போது, ஒன்றின் மீது ஒன்றாக தவறு செய்துவிட்டு தொண்டர்களும், பொதுமக்களும் வெறுத்து ஒதுக்குகின்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எங்களுடைய நற்பெயரையும் கெடுப்பதற்கு நீண்ட காலமாக உங்களோடு ஏன் பயணித்தோம் என்று நினைக்கிறபோது வேதனையாக இருக்கிறது. வெட்கமாக இருக்கிறது.அதிமுகவும், திமுகவும் நீண்ட காலமாக இருக்கின்ற ஒரு சக்திவாய்ந்த இரண்டு கட்சிகள். எம்ஜிஆர் 1972ல் கட்சி ஆரம்பித்தபோது, கிருஷ்ணகிரி அரசு கலை கல்லூரியில் நான் முதலாமாண்டு மாணவன். எம்ஜிஆரை வெளியேற்றிவிட்டார்கள் என்று தெரிந்த உடனேயே கல்லூரியில் மாணவர்களை சேர்த்து மிகப்பெரிய ஊர்வலத்தை நடத்தி கண்டனம் தெரிவித்து, 50 ஆண்டுகளாக எந்தவித மாற்று சிந்தனையும் இல்லாமல், எந்த சூழ்நிலையிலும் எம்ஜிஆர் இருக்கின்ற அந்த இயக்கத்தில் தொடர்ந்து பணியாற்றுகின்ற ஒரு தொண்டனாக இருக்கிறேன். நேற்று வரை காங்கிரசில் சட்டமன்ற உறுப்பினராக இருந்து, ஆதாயம் தேடுவதற்காக பல்வேறு கட்சிகளில் இருந்து வந்து இன்றும் ஓ.பன்னீர்செல்வத்திடம் கைக்கூலியை பெற்றுக்கொண்ட கோவை செல்வராஜ் போன்றவர்கள் கீழ்த்தரமான கருத்தை சொல்வதற்கு ஒரு வாய்ப்பை ஓ.பன்னீர்செல்வம் கொடுக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.ரகசியத்தை வெளியில சொல்லிராதீங்க ப்ளீஸ்…: ஓபிஎஸ்சுக்கு வேண்டுகோள்கிருஷ்ணகிரி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு இணையத்தில் இருக்கின்ற இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க்கை 99 ஆண்டுகளுக்கு என்னுடைய மகன் (எம்.சதீஷ்) பெயரில் குத்தகை எடுத்திருப்பதாகவும், அந்த குத்தகை எனக்கு திமுக ஆட்சியில் கிடைத்ததாகவும் கோவை செல்வராஜ் ஒரு குற்றச்சாட்டை கூறி உள்ளார். அவர் அம்பு, எய்தவர் ஓபிஎஸ். அந்த பெட்ரோல் பங்க் ஒரு கூட்டுறவு இணையத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பல்வேறு வகையில் அரசுக்கு வருவாய் வர வேண்டும் என்பதற்காக 2017ல் அந்த இணையத்தில் ஒரு தீர்மானம் போடப்பட்டு, அந்த இணையத்தின் வாயிலாக இந்த பெட்ரோல் பங்க் நடத்துவதற்காக ஒரு உத்தரவு பிறப்பித்து இந்தியன் ஆயில் நிறுவனத்தோடு இணைந்து அது துவங்கப்பட்டது.இந்தியன் ஆயில் நிறுவனமும், ஆவினும் சேர்ந்து அவர்கள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் 2020ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 20 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் இது. இதேபோலதான் கொடநாட்டில் நடந்த நிகழ்வில் தன்னுடைய அம்பாக அவர் மகனை பேட்டி அளிக்க கூறியுள்ளார்.தர்மயுத்தம் தொடங்கியபோது ஓபிஎஸ்சுடன் சேர்ந்து வேகமாக செயல்பட்டேன். பல்வேறு கருத்துகளை பரிமாறிக்கொள்வோம். எப்போதும் உட்கட்சிக்குள் இருக்கும் கருத்து பரிமாற்றங்கள் மனக்கசப்பு வரும்போது வெளியே வரும் நேரத்தில் அதனை காட்டிக்கொடுப்பது என்பது அதைவிடக் கேவலமான அரசியல்வாதி வேறு யாரும் இருக்க முடியாது. அந்த ரகசியத்தை கட்டிக்காத்து அதனை வெல்லுகிறவன்தான் உண்மையான அரசியல்வாதி. அப்பழுக்கற்ற அரசியல்வாதி. இன்றும் சொல்வேன், நாளையும் சொல்வேன், ஓ.பன்னீர்செல்வத்துடன் நான் இணைந்து பணியாற்றியபோது  நடந்த சம்பவங்கள் ஒன்றைக்கூட நான் வெளியிட மாட்டேன். இதுபோன்ற கருத்துகளை சொல்வதற்கு ஓபிஎஸ் உறுதுணையாக இருக்கக்கூடாது என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்றார் கே.பி.முனுசாமி….

The post அதிமுக தொண்டர்களே ஒதுக்கும் நிலையில் ஓபிஎஸ்சுடன் ஏன் பயணித்தோம் என நினைக்கும்போது வெட்கமாக இருக்கிறது: கே.பி.முனுசாமி பரபரப்பு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : OPSS ,K. ,Former Supreme Minister ,K. B. ,Chennai ,Panneirselva ,
× RELATED தொழிலாளர்கள் குடும்பங்கள் கல்வி,...