சென்னை: சிவாஜி உடன் இணைந்து ‘பாசமலர்’, ‘பாலும் பழமும்’, ‘பாகப் பிரிவினை’, ‘பாவ மன்னிப்பு’, ‘பார்த்தால் பசி தீரும்’ என ஏகப்பட்ட படங்களை இயக்கியுள்ளார் பீம்சிங். இந்நிலையில் இயக்குநர் பீம்சிங்கின் நூறாவது பிறந்த நாள் மற்றும் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நடிகர் பிரபு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: இன்று இயக்குநர் ஏ.பீம்சிங் நூறாவது பிறந்தநாள். பீம்சிங் அவர்களின் நூற்றாண்டு. இந்த நாளில் அவரைப் பற்றி நினைக்கும் போது எனக்கு பெருமையாகவும், நெகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அப்பா அவரை பீம் பாய் என்றுதான் செல்லமாக அழைப்பார். அப்பா நடித்த படங்களில் உதவி இயக்குநராக இருந்தவர். அவரை ‘செந்தாமரை’ படத்தில் இயக்குனராக அறிமுகப்படுத்தினார். அந்தப் படம் முடிய தாமதம் ஆனாலும், உடனே கால்ஷீட் கொடுத்து ‘அம்மையப்பன்’, ‘ராஜா ராணி’ படங்களில் நடித்திருக்கிறார். அதன் பிறகு அவர் நண்பர்களுடன் இணைந்து தயாரித்து, அவர் இயக்கிய ‘பதி பக்தி’ படத்திலும் நடித்தார்.
மற்ற நடிகர்களை வைத்து படங்கள் இயக்கினாலும் அப்பா (சிவாஜி) நடிப்பில் ‘பாகப்பிரிவினை’, ‘படிக்காத மேதை’, ‘பெற்ற மனம்’, ‘பாவ மன்னிப்பு’, ‘பாசமலர்’, ‘பாலும் பழமும்’, ‘பார்த்தால் பசி தீரும்’, ‘படித்தால் மட்டும் போதுமா’, ‘பந்த பாசம்’, ‘பார் மகளே பார்’, ‘பச்சை விளக்கு’, ‘பழனி’, ‘பட்டத்து ராணி’, ‘சாந்தி’, ‘பாலாடை’, ‘பாதுகாப்பு’ போன்ற பத்தொன்பது படங்களை இயக்கினார். மேலும் சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பில், 2 இந்தி படங்களையும் இயக்கினார். இப்படி தமிழ் படங்களின் பெருமையை இந்தி வரை கொண்டு சென்ற பெருமைக்குரிய இயக்குனர் பீம்சிங். அவரது ஆன்மா தனது படைப்புகள் மூலம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. படைப்புக்கும் அழிவில்லை. படைத்தவருக்கும் அழிவில்லை. கலைஞர்கள் எப்போதுமே மக்களுக்கானவர்கள். அவர்கள் எப்போதும் மக்களோடு வாழ்ந்து கொண்டிருப்பார்கள். பீம்சிங்கும், அய்யாவும் நமோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு பிரபு தெரிவித்துள்ளார்.
The post சிவாஜி பீம்சிங் உன்னத உறவு: பிரபு நெகிழ்ச்சி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.