×

பருத்தி நூல் மாதிரிகளை கொண்டு வரச்சொல்லி; டெல்லியில் திண்டுக்கல் தொழிலதிபர், மேலாளர் கடத்தல்: ரூ.50 லட்சம் கேட்டு கட்டிப் போட்டு சித்ரவதை

புதுடெல்லி: பருத்தி நூல் மாதிரிகளை கொண்டு வரச் சொல்லி, டெல்லி விமான நிலையத்தில் திண்டுக்கல்லை சேர்ந்த தொழிலதிபரும், அவரது மேலாளரும் கடத்தப்பட்டனர். ரூ.50 லட்சம் பணம் கேட்டு கை, கால்களை கட்டிப் போட்டு, அவர்களை சித்ரவதை செய்த நிலையில், 13 மணி நேரத்தில் ெடல்லி, அரியானா போலீசார் அதிரடியாக மீட்டனர்.திண்டுக்கல் அருகே சென்னமநாயக்கன்பட்டியை அடுத்த திருவல்லிக்கேணி நகரைச் சேர்ந்தவர் வில்வபதி (54). இவர் அகரம் பேரூராட்சி கொண்டசமுத்திரப்பட்டி அருகே பஞ்சாலை வைத்து நடத்தி வருகிறார். பஞ்சுகளை வாங்கி நூல்களாக மாற்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து வருகிறார்.கடந்த 5ம் தேதி டெல்லியில் உள்ள இவரது கம்பெனியின் ஏஜெண்ட் சிவக்குமார், வில்வபதியிடம் ெசல்போனில் பேசி, வங்கதேசத்துக்கு அனுப்ப 50 டன் நூல் வேண்டும் என்றும், 1 கிலோ நூலின் விலை ரூ.205 வீதம் 50 டன்னுக்கு ரூ.1 கோடியே 25 லட்சம் என பேசி முடித்துள்ளேன் என்றும் அதற்கான விற்பனை ஒப்பந்தத்தில் உடனடியாக கையெழுத்திட வேண்டுமென்று கூறியுள்ளார். இதையடுத்து கடந்த 5ம் தேதி, கம்பெனி மேலாளர் வினோத்குமாரை அழைத்துக் கொண்டு விமானம் மூலம் வில்பதி டெல்லி சென்றார்.அதன் பின்னர் கடந்த 8ம் தேதி வில்வபதி தனது மேனேஜர் சண்முகவேலை செல்போனில் தொடர்பு கொண்டு, பதற்றத்துடன் மில்லில் உள்ள நூல் லோடுகளை அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளார். தொடர்ந்து மருமகன் தர்மபிரகாஷை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட வில்வபதி, உடனடியாக ரூ.50 லட்சம் தயார் செய்யுமாறு கூறினார். இதையடுத்து வில்வபதி கடத்தப்பட்டது தெரிய வந்தது.இது தொடர்பாக, பஞ்சாலை மேனேஜர் சண்முகவேல் தாடிக்கொம்பு போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். இதன்பேரில் திண்டுக்கல் எஸ்பி பாஸ்கரன் உத்தரவின்பேரில், இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையிலான 30 பேர் கொண்ட தனிப்படை போலீசார் டெல்லி சென்றனர். மேலும் அரியானா மற்றும் டெல்லி போலீசாருக்கு இ-மெயில் மூலம் புகார் செய்யப்பட்டது.இதையடுத்து அரியானா மாநில அதிரடிப்படை எஸ்பி சதீஷ்பாலன் தலைமையிலான அதிரடி படையினர் மற்றும் டெல்லி போலீசார் நடவடிக்கையில் இறங்கினர். பணம் கேட்டு மீண்டும் தொடர்பு கொண்ட கடத்தல் கும்பலிடம், பணம் தயாராக உள்ளதாக கூறியுள்ளனர். இரவு 8.30 மணிக்கு ஒரு இடத்திற்கு வரவழைத்து, அதிரடிப்படையினர், கடத்தல் கும்பலை சேர்ந்த 5 பேரை சுற்றி வளைத்து கைது செய்தனர். டெல்லியில் உள்ள சிறப்பு அதிரடிப்படை தலைமையகத்துக்கு கொண்டு சென்று அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில் வில்வபதி மற்றும் வினோத்குமாரை அந்த கும்பல் குர்கான் பகுதியில் அடைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அங்கு சென்று அவர்கள் 2 பேரையும் பத்திரமாக மீட்டனர்.இதுகுறித்து அரியானா ஐஜி (எஸ்டிஎப்) சதீஷ்பாலன் கூறுகையில், ‘பருத்தி நூல் டெலிவரி ஒப்பந்தத்தின் அடிப்படையில், நூலின் மாதிரிகளை டெல்லிக்கு கொண்டு வரச் சொல்லி தொழிலதிபரையும், மேலாளரையும் அவர்களிடம் பேசிய கும்பல் கடத்தியுள்ளது. பின்னர், அவர்கள் இருவரிடமும் ரூ.50 லட்சம் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். அவர்களை குர்கானில் உள்ள ஷியாம் நகர் குடியிருப்பில் அடைத்து வைத்திருந்தனர். கைகளையும் கால்களையும் கட்டிப் போட்டு சித்ரவதை செய்துள்ளனர். பொம்மை துப்பாக்கிகளை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். தொழிலதிபர் தனது மகளை தொடர்பு கொண்டு, தான் கடத்தல் கும்பலிடம் சிக்கிக் கொண்ட விபரத்தை தெரிவித்தார். பணம் கொண்டு வருவதாக கடத்தல் கும்பலிடம் அவர் கூறியுள்ளார். இதற்கிடையை தமிழக போலீசார் எங்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பின் ெடல்லி, அரியானா கூட்டு தனிப்படை பிரிவு, வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் விஷ்ணு கார்டனில் கடத்தி அடைத்து வைக்கப்பட்டிருந்த தொழிலதிபரையும், மேலாளரையும் மீட்டோம். புகார் கிடைத்து கிட்டதட்ட 13 மணி நேரத்தில் இருவரையும் மீட்டுள்ளோம். கடத்தல் கும்பலை சேர்ந்த ஆசிப் உசேன், ஜிர்வானி பாபு, முகமது ஆசாத், முகமது கரீம் ஆகியோரை கைது செய்துள்ளோம்.இவர்களில் உசேன் ரகசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஏற்கனவே கைதானவன். ஜாமீனில் வெளியே வந்த அவன், மற்றவர்களுடன் சேர்ந்து இந்த கடத்தல் வேலையை அரங்கேற்றி உள்ளான். மீட்கப்பட்ட தொழிலபதிபர் மற்றும் அவரது மேலாளரை தமிழக போலீசாரிடம் இன்று ஒப்படைக்க உள்ளோம்’ என்றார்….

The post பருத்தி நூல் மாதிரிகளை கொண்டு வரச்சொல்லி; டெல்லியில் திண்டுக்கல் தொழிலதிபர், மேலாளர் கடத்தல்: ரூ.50 லட்சம் கேட்டு கட்டிப் போட்டு சித்ரவதை appeared first on Dinakaran.

Tags : Varasolli ,Dintukal ,Delhi ,Chitravatham ,New Delhi ,Varasoli ,Dindigul ,Chitravatha ,
× RELATED மாணவர்களுக்கு புத்தகம் வழங்க தவறிய...