×

தமது சீடரையே தன் பிள்ளைகளுக்கு குருவாக்கிய குரு

* திருக்கோஷ்டியூர் நம்பி திருநட்சத்திரம் -
 வைகாசி ரோகிணி: 3 - 6 - 2019


சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூரில் செல்வநம்பி என்றொரு மகான் வாழ்ந்து வந்தார். பெரியாழ்வாருக்குச் செல்வநம்பி மேல் மிகவும் மதிப்பு  இருந்திருப்பதை,
“அல்வழக்கு ஒன்றுமில்லா அணிகோட்டியர் கோன் அபிமானதுங்கன்
செல்வனைப் போலத் திருமாலே! நானும் உனக்குப் பழவடியேன்”

என்ற பெரியாழ்வாரின் திருப்பல்லாண்டு பாசுரத்தின் வாயிலாக அறியமுடிகிறது. “திருமாலே! நன்னெறிக்கண் வாழ்பவரும், அடியார்களிடம் அபிமானம்  கொண்டவருமான திருக்கோஷ்டியூர் செல்வநம்பியைப் போல அடியேனும் உனக்குத் தொண்டனாகி விட்டேன்!” என்று இப்பாசுரத்தில் தெரிவிக்கிறார்.  அத்தகைய ஏற்றம் பெற்ற செல்வநம்பியின் வம்சத்தில், 987-ம் ஆண்டு, ஸர்வஜித் வருடம், வைகாசி மாதம், ரோகிணி நட்சத்திரத்தில்  திருக்கோஷ்டியூர் நம்பி அவதரித்தார். வைகுண்டத்தில் திருமாலுக்குத் தொண்டு செய்யும் நித்யசூரிகளுள் ஒருவரான புண்டரீகர் என்பவர் தான்  திருக்கோஷ்டியூர் நம்பியாக அவதரித்ததாகப் பெரியோர்கள் கூறுவர். ராமானுஜரின் ஐந்து குருமார்களில்
திருக்கோஷ்டியூர் நம்பியும் ஒருவர்.

ஆளவந்தாருக்குச் சீடராக இருந்த திருக்கோஷ்டியூர் நம்பியிடம் ஆளவந்தார் ஒரு விக்கிரகத்தை அளித்தார். “இதற்கு பவிஷ்யதாசார்ய விக்கிரகம்  என்று பெயர். இந்த விக்கிரகத்தில் இருப்பவர், பின்னாளில் மிகப்பெரிய ஆச்சாரிய வள்ளலாக விளங்கி, வைணவ நெறியை வளர்க்கப் போகிறார். அவர்  உங்களைத் தேடி வரும்போது, கீதையில் கண்ணன் கூறிய “ஸர்வதர்மான் பரித்யஜ்ய…” என்னும் சரம ஸ்லோகத்தின் பொருளை அவருக்கு நீங்கள்  உபதேசிக்க வேண்டும்!” என்று கூறினார்.

ஆளவந்தார் தந்த விக்கிரகம் ராமானுஜருடைய விக்கிரகமே. அவர் சொன்னபடி, பின்னாளில் சரம ஸ்லோகத்தின் பொருளை வேண்டித்  திருக்கோஷ்டியூர் நம்பியிடம் ராமானுஜர் வர, அவரைப் பதினெட்டு முறை திருவரங்கத்திலிருந்து திருக்கோஷ்டியூருக்கு நடக்க வைத்து அதன்பின்  பொருளை உரைத்தார் திருக்கோஷ்டியூர் நம்பி. “இப்பொருளை வேறு யாருக்கும் நீ சொல்லக் கூடாது!” என்று அவர் கட்டளை இட்ட போதும், அதை  மீறி, தமது கருணையாலே, “நான் நரகம் சென்றாலும் பரவாயில்லை, மக்கள் அனைவரும் முக்தியடைய வேண்டும்!” என்ற எண்ணத்துடன்  ஆசையுள்ள அடியார்களுக்கு உபதேசம்  செய்தார் ராமானுஜர்.

இதைக் கண்ட திருக்கோஷ்டியூர் நம்பி, ராமானுஜரின் பரந்த உள்ளத்தைப் பாராட்டும் வகையில், ‘எம்பெருமானார்’ என்னும் பட்டத்தை அவருக்கு  வழங்கி, “இனி வைணவ நெறி ‘எம்பெருமானார் தரிசனம்’ என்று தங்கள் பெயரை இட்டு அழைக்கப்படும்!” என்றும் கூறினார். திருவரங்கத்தில்  ராமானுஜரின் உணவில் சிலர் விஷம் கலந்து விட்டார்கள். இதை அறிந்த ராமானுஜர், “ஒரு துறவியானவன் எந்த உயிரின் மனமும் நோகாதபடி வாழ  வேண்டுமே! அவ்வாறிருக்க, ஒருவன் எனக்கு விஷம் வைத்திருக்கிறான் என்றால், நான் அவன் மனதை எவ்வளவு தூரம் நோக வைத்திருப்பேன்!”  என்று எண்ணி வருந்தி, உண்ணா விரதம் இருக்கத் தொடங்கினார்.

இச்செய்தியைக் கேள்வியுற்று திருவரங்கத்துக்கு வந்தார் திருக்கோஷ்டியூர் நம்பி. நம்பியின் வரவை அறிந்த ராமானுஜர் அவரைத் தேடிச் செல்ல,  காவிரி மணலில் திருக்கோஷ்டியூர் நம்பி நின்று கொண்டிருப்பதைக் கண்டார். அப்போது மதியம் பன்னிரெண்டு மணி. தீயாய்க் கொதிக்கும் காவிரி  மணலில் விழுந்து திருக்கோஷ்டியூர் நம்பியை வணங்கினார் ராமானுஜர். குருவுக்கு நமஸ்காரம் செய்யும் போது, அவர் “எழுந்திரு!” என்று சொல்லும்  வரை சீடர்கள் தரையிலேயே விழுந்து கிடப்பார்கள். ராமானுஜர் வெகு நேரமாகக் காவிரி மணலில் விழுந்து நமஸ்கரித்தபடி இருக்க, திருக்கோஷ்டியூர்  நம்பி எதுவுமே சொல்லாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.

இதைக் கண்ட ராமானுஜரின் சீடர்களுள் ஒருவரான கிடாம்பியாச்சான், ராமானுஜரை எழுப்பித் தமது மடியிலே கிடத்திவிட்டுத் திருக்கோஷ்டியூர்  நம்பியைப் பார்த்து, “நீர் ஒரு குருவா? உங்கள் சீடரின் உடல் கொதிக்கும் மணலில் இப்படி வாடுவதைக் கண்டும் கருணையில்லாமல் நிற்கிறீரே!”  என்று கூறினார். அதுவரை மௌனமாக இருந்த திருக்கோஷ்டியூர் நம்பி, ராமானுஜரின் அனைத்துச் சீடர்களையும் பார்த்து, “ராமானுஜருக்கு இவ்வளவு  சீடர்கள் இருந்தாலும், அவர் என்னை நமஸ்கரித்து இங்கே விழுந்து கிடந்த போது நீங்கள் யாரும் அவரை எழுப்பவில்லை.

ஏனெனில், அவ்வாறு எழுப்பினால் உங்களுக்கு நான் சாபம் கொடுப்பேனோ என்ற அச்சம் உங்களுக்கு இருந்தது. ஆனால் கிடாம்பி ஆச்சான் மட்டும்  தான் தன்னைப்பற்றிக் கவலைப்படாமல், ராமானுஜர் மேல் அக்கறையுடன் அவரை வந்து எழுப்பினார். அப்படிப்பட்ட ஒருவர் தான் இனி  ராமானுஜருக்கு மடைப்பள்ளி கைங்கரியம் செய்ய வேண்டும்!” என்றார்.

அப்போது திருக்கோஷ்டியூர் நம்பியை வியப்புடன் பார்த்தார் ராமானுஜர். “ஆம் ராமானுஜா! உன் உணவில் யாரோ விஷம் கலந்து விட்டதாகக்  கேள்விப் பட்டேன். இனி அவ்வாறு நடக்கக் கூடாதல்லவா? தனக்கு ஆபத்து நேர்ந்தாலும் பரவாயில்லை, நீ நன்றாக இருக்க வேண்டும் என்று  எண்ணும் கிடாம்பியாச்சான் போன்ற ஒருவர் உனக்கு மடைப்பள்ளித் தொண்டு செய்தால் தான் இனி உனக்கு எந்த ஆபத்தும் நேராமல் இருக்கும்!”  என்று கூறினார் திருக்கோஷ்டியூர் நம்பி. திருக்கோஷ்டியூர் நம்பி தமது மகளான தேவகியையும், மகனான தெற்காழ்வானையும் ராமானுஜருக்குச்  சீடர்களாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

- ராமானுஜதாசன்

Tags : disciple ,Guru ,
× RELATED பசுபதீஸ்வரர் கோயிலில் குரு பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை