×

வேடுவனாக வந்த வேத நாயகன்

* வைகாசி - ஆயில்யம் 8-6-2019
* திருமாளம், திருவாரூர்


இறைவர் காளகண்டேசுவரர், மாகாளேச்வரர் எனும் திருப்பெயர்களிலும், இறைவி பட்சநாயகி எனும்  பயட்சயாம்பிகை எனும் திருப்பெயர்களிலும்,   கருங்காலியை தல மரமாகவும், மாகாள தீர்த்தத்தை தல தீர்த்தமாகவும் கொண்டு திருவருட்பாலிக்கும் திருத்தலம்  திருஅம்பர் மாகாளம்.    இத்தலம்  மக்கள் வழக்கில் “கோயில் திருமாளம்” என்று வழங்குகின்றது. அரிசிலாற்றங்கரையில் அமைந்துள்ள தலம். பாடல் பெற்ற காவிரி தென்கரைத்  தலங்கள் வரிசையில் 55-வது தலமாக இருப்பது அம்பர் மாகாளம். அம்பர் மாகாளம் ஒரு திருமணத் தடை நீக்கும் தலமாக சிறப்பு பெற்று  விளங்குகிறது. இத்தலத்துக்கு திருஞானசம்பந்தரின் மூன்று பதிகங்கள் உள்ளன.

மாகாளம் என்ற பெயர் பெற்ற சிவஸ்தலங்கள் இந்தியாவில் மூன்று இடங்களில் இருக்கின்றன. அவை, வடஇந்தியாவிலுள்ள உஜ்ஜயனி மாகாளம்,  தொண்டை நாட்டுத் தலமான இரும்பை மாகாளம், மற்றும் காவிரி தென்கரைத் தலங்களில் ஒன்றான அம்பர் மாகாளம் என்ற இத்தலம்.
மன்மதன் தேவர்களால் ஏவப்பட்டு, விசுவாமித்தர முனிவரின் தவத்தைக் குலைக்க அவர்மீது மலர்க்கணைகளைத் தொடுத்தான். அதனால் சினம்  கொண்ட முனிவர் இந்திரனை சபிக்க, அவன் மாகாளநாதரை வழிபட்டு சாபம் நீங்கப் பெற்றான். அதன் காரணமாக இத்தலம் மாரபுரி என்ற பெயரைப்  பெற்றது.

அஷ்ட நாகங்களில் ஒன்றாகிய வாசுகி என்ற் நாகம் தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கிக் கொள்ள இத்தலம் வந்து இறைவனை  வழிபட்டு தனது தோஷம் நீங்கப் பெற்றது. நாகதோஷம், புத்திரதோஷம், திருமணத்தடை உள்ளவர்கள் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு  காலத்தில் வாசுகிக்கு பால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்தால் நற்பலன்கள் அடையலாம்.சம்பந்தர்,காளி, மாகாள இருடியர் போன்றோர் வழிபட்டு  பேறு பெற்ற திருத்தலம். அம்பன், அம்பாசுரன் என்ற இரு அரக்கர்களை கொன்ற பாவம் நீங்க மாகாளி பூசித்தது; ஆதலின் இஃது “மாகாளம்”  எனப்பட்டது. சோமாசி மாற நாயனார் யாகம் செய்த திருத்தலம். சோமாசி மாற நாயனார், நாள்தோறும் சுந்தரருக்கு அவர் திருவாரூரில் இருந்தபோது  உணவுக்குத் தூதுவளை கீரை கொண்டுவந்து தரும் தொண்டைச் செய்து வந்தார். சுந்தரரின் துணைவியாரான பரவையாரும் அதை நன்கு சமைத்துப்  பரிமாற, சுந்தரர் விரும்பிச் சாப்பிட்டு வந்தார்.

ஒரு நாள் சுந்தரர் “நாள்தோறும் இக்கீரை கொணர்ந்து தருபவர் யார்?” என்று கேட்டு, சோமாசிமாறரைப் பற்றியறிந்து நேரில் கண்டு, அவர் விருப்பம்  என்ன? என  கேட்டார். அதற்கு சோமாசிமாறர், “தான் செய்யவிருக்கும் சோமயாகத்திற்குத் திருவாரூர் தியாகேசப் பெருமான் எழுந்தருளி அவிர்ப்பாகம்  பெற்றுக் கொள்ள வேண்டும்” என்றும் அதற்குச் சுந்தரர் உதவ வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். மறுக்க விரும்பாத சுந்தரர், சோமாசிமாறரை  அழைத்துக்கொண்டுத் திருவாரூர் பெருமானிடம் வந்து வேண்டுகோளைத் தெரிவித்தார். அதற்கு இசைந்த இறைவன், “தான் வரும் வேடம் தெரிந்து  இவர் எனக்கு அவிர்ப்பாகம் தர வேண்டும்” என்று பணித்தார்; சோமாசிமாறரும் அதற்குச் சம்மதித்தார்.

யாகம் நடைபெறும் இடத்திற்குத் தியாகராஜப் பெருமான், புலையர் வேடத்தில், நான்கு வேதங்களையும் நான்கு நாய்களாக்கி உடன் பிடித்துக்கொண்டு,  தோளில் இறந்துபோன கன்றினைப் போட்டுக்கொண்டு, தடித்த பூணூலணிந்து, தலையில் தலைப்பாகை (முண்டாசு) கட்டிக்கொண்டு, விநாயகரையும்,  முருகப்பெருமானையும் சிறுவர்களாக்கிக் கொண்டு, உமாதேவியை புலையச்சி வேடத்தில் தலையில் கள்குடம் ஏந்தியவாறு அழைத்துக்கொண்டு  வந்தார். வெறுக்கத்தக்க இக்கோலத்தில் வந்த இறைவனைப் பார்த்து, எல்லோரும் அபசாரம் நேர்ந்து விட்டதென்று எண்ணியும், இக்கோலத்தைக்  கண்டு பயந்தும் ஓடினர். ஆனால் சோமாசிமாறரும் அவர் மனைவியாரும் அவ்விடத்திலேயே (அச்சத்துடன் நிற்க - தந்தையார் வருவதைக் குறிப்பால்  விநாயகர் சோமாசிமாறருக்கு உணர்த்தி அவர்கள் அச்சத்தை நீக்கினார்) நின்று இறைவனை அந்நீச வடிவிலேயே வீழ்ந்து வணங்கி வரவேற்க -  இறைவன் மகிழ்ந்து சோமாசிமாறருக்குக் காட்சி தந்து அருள்புரிந்தார் என்பது தலவரலாறு.

வைகாசி ஆயில்ய நட்சத்திரத்தில் சோமயாகப் பெருவிழா நடக்கிறது. இந்த விழாவில் காலில் செருப்பு, கையில் மத்தளம், அருகில் மதுக்குடம் ஏந்திய  பார்வதியுடன் சிவன் அருட்பாலிப்பது சிறப்பு. திருவாரூரில் இருந்து தியாகராஜர் இவ்விழாவுக்கு எழுந்தருள்வதால், அன்றைய தினம் திருவாரூரில்  தியாகராஜருக்கு அபிஷேக ஆராதனைகள் கிடையாது.புலத்தியர் மரபில் வந்த சம்சாரசீலன் என்பவனிடம் தேவேந்திரன் தோற்று இத்தல இறைவனிடம்  அடைக்கலம் அடைந்தான். சுவாமி பைரவ திருக்கோலம் தாங்கி சம்சாரசீலனைக் கொன்று சட்டைநாதராக எழுந்தருளி தேவேந்திரனை மீண்டும்  அமராவதிக்கு அதிபதியாக்கினார். அதனால், இத்தலத்துக்கு இந்திரபுரி என்ற பெயரும் ஏற்பட்டது. சட்டைநாதருக்கு இத்தலத்தில் தனி சந்நதி உள்ளது.

சோமாசிமாறருக்குக் காட்சிக் கொடுத்து அருள்புரிந்த மூர்த்தமே “காட்சி கொடுத்த நாயகர்” எனப் போற்றப்படுகின்றது. இறைவன் யாகத்திற்கு  நீசவடிவில் எழுந்தருளியபோது அம்பிகையின் தலையிலிருந்த கள்குடம் பொங்கிய இடம் “பொங்கு சாராயநல்லூர்” (இன்று வழக்கில் “கொங்கராய ‘  நல்லூர்”) என்றும், இறைவன் சுமந்து வந்த பறை தானாக அடிப்பட்ட இடம் “அடியுக்க மங்கலம்” (இன்று வழக்கில் “அடியக்கமங்கலம்”) என்றும்,  இறந்தக் கன்றை ஏந்திய இடம் “கடா மங்கலம்” என்றும் இன்றும் வழங்கப்படுகின்றது.சோமாசி நாயனார் யாக குண்டம் அமைத்து யாகம் செய்த இடம்  அம்பர் மாகாளத்திற்கு அம்பர்பெருந்திருக்கோயிலுக்கும் இடையில் உள்ளது. அந்த இடத்தில் ஒரு மண்டபம் உள்ளது. இன்று அந்த இடம்  “பண்டாரவாடை திருமாளம்” என்று வழங்குகின்றது. இன்றும் சோம யாக உற்சவம் இவ்விடத்தில்தான் நடைபெறுகிறது.

இத்தலத்தில் மாகாள முனிவர், காளி ஆகியோர் இறைவன் மாகாளநாதரை வழிபட்டுள்ளனர். இறைவன் சோழ மன்னன் ஒருவனுக்கு தனது  மனக்கோலத்தைக் காட்டியருளிய தலம். அம்பாள் அம்பரனை வதம் செய்ததும் இத்தலத்தில்தான். இறைவன், இறைவி செப்புச் சிலை வடிவில்  இக்கோயிலில் உள்ளனர். சோமாசிமார் நாயனார், அவர் மனைவி ஆகியோரின் உருவச் சிலைகளும் இக்கோயிலில் உள்ளன. ஆலயம் ஒரு கட்டுமலை  மேல் அமைந்துள்ளது. சோழ மன்னன் கோச்செங்கட் சோழன் கட்டிய ஆலயங்களில் இதுவும் ஒன்று.இவ்வாலயம் அரிசிலாற்றின் வடகரையில் 5  நிலைகள் கொண்ட கிழக்கு நோக்கிய ராஜகோபுரத்துடன் காட்சி அளிக்கிறது. அம்பரன் என்னும் அசுரனைக் கொன்ற பாவந்தீரக் காளி, இறைவனைப்  பூஜித்து வழிபட்ட தலம். எனவே “மாகாளம்” என்று பெயர் பெற்றது. கோபுர வாயில் வழி உள்ளே சென்றால் விசாலமான முற்றம் உள்ளது. இறைவன்  சந்நதிக்கு நேரே பலிபீடமும் நந்தி மண்டபமும் உள்ளன. வடகிழக்கு மூலையில் கல்யாண மண்டபம் உள்ளது. முற்றவெளியை அடுத்து அதிகார நந்தி  கோபுரம் என்றழைக்கப்படும் 3 நிலை இரண்டாம் கோபுரம் உள்ளது.

உள்ளே மகாமண்டபத்தில் நாகநாதசுவாமி லிங்கத் திருமேனியுடன் காட்சி அளிக்கிறார். எதிரில் நந்தியெம் பெருமான், அவருக்கு வலதுபுறம் அம்பிகை  அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள். நாகநாதசுவாமிக்குப் பினபுறம் நாககன்னிகை யோகாசனத்தில் வீற்றிருக்கிறாள். நாக கன்னிகை இத்தலத்தில்  இறைவனை வழிபட்டு நற்கதி பெற்றாள். காளம் என்றால் நாகம் என்ற பொருளுண்டு. காளம் வழிபட்டதால் மாகாளம் என்று இத்தலம் பெயர் பெற்றது  என்றும் கூறுவர். வடக்குப் புறம் சோமாசிமாற நாயனாருக்குக் காட்சி கொடுத்த நாயகர், நடராஜர் மற்றும் பிற உற்சவமூர்த்திகளைக் காணலாம்.
மேலும் உள்ளே சென்றால் மாகாளநாதர் சந்நதியை அடையலாம். கருவறையில் காளி தன் கையால் பிடித்து வைத்த சிறிய லிங்கத் திருமேனியுடன்  இறைவன் சிறிய தோற்றத்தில் எழுந்தருளியுள்ளார். கருவறையை வலம் வரும்போது தெற்குப் புறத்தில் தியாகராஜர் சந்நதி உள்ளது.

அடுத்து அறுபத்து மூவர், பரிவார கணபதி, தட்சிணாமூர்த்தி, உதங்க, மதங்க முனிவர்கள், தனுசு சுப்பிரமணியர், மகாலட்சுமி, சண்டேஸ்வரர்  ஆகியோரை தரிசிக்கலாம். இங்குள்ள தனுசு சுப்பிரமணியர் வடிவம் வில்லேந்தியவாறு மிக்க அழகாகவுள்ளது. உட்பிராகாரத்தை வலம் வந்துவிட்டு  வெளிப் பிராகாரம் வந்தால் அங்கு தென்மேற்கு மூலையில் காளி கோயில் உள்ளது. அன்னை, அம்பாசுரனை வதம் செய்தபின், அந்த தோஷம் நீங்க  மாகாளநாதரை வழிபட்ட மாகாளியாவாள்.மதங்க முனிவரின் தவத்திற்கு மெச்சிய தேவி அவருக்கு ராஜமாதங்கி எனும் பெயரில் மகளாக  அவதரித்தாள். தக்கன் பருவம் வந்ததும் இத்தல ஈசனுக்கு மாதங்கியைத்திருமணம் செய்து வைத்தார் மதங்கர்.

அச்சமயம் ஈசன் தேவியிடம் என்ன வரம் வேண்டும் எனக்கேட்க இத்தலத்தை தரிசிக்கும் திருமணமாகாத கன்னியர்க்கும், காளையர்க்கும் உடனே  திருமணமாக வேண்டும் என வரம் கேட்டாள். அதன் படியே நீண்ட நாட்களாக திருமணம் ஆகாதவர்கள் இத்தலத்திற்கு வந்து சிவப்பு அரளிப்பூ  மாலைகள் இரண்டு தொடுத்து அதை இறைவன், இறைவிக்கு சார்த்தி ஐந்து வெள்ளிக்கிழமைகள் அர்ச்சனை செய்து வழிபட்டு, பின்பு ஒரு மாலையைப்  பெற்று கழுத்தில் அணிந்து கொண்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது இவ்வாலயத்தின் சிறப்பு.‘‘அம்பர் புராணம் - தலபுராணம்’’  மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்கள் பாடியுள்ளார்.இவ்வாலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5  மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.இக்கோயில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகேயுள்ள பூந்தோட்டம் அடுத்துள்ள  திருமாளம் ஊரில் அமைந்துள்ளது. கோயில் தொடர்புக்கு: 09486601401. திருவாரூர் ரயில் பாதையில் பூந்தோட்டம் நிலையத்திலிருந்து 4 கி.மீ.  தூரத்தில் உள்ளது.

ஓவியம்: வெங்கி
ந.பரணிகுமார்

Tags : Vedic Man ,hunter ,
× RELATED சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’