×

இறைவழியில் செலவு

ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகள்..!“இறைவழியில் என்ன செலவு செய்ய வேண்டும் என்று அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். “உங்களுடைய தேவைக்குப் போக மீதமுள்ளதைச் செலவு செய்யுங்கள் என்று அவர்களிடம் கூறுவீராக.”(குர்ஆன் 2:219)இன்னோர் வசனத்தில் யார் யாருக்குச் செலவு செய்ய வேண்டும், தான தர்மங்களை எங்கிருந்து தொடங்க வேண்டும் என்கிற விவரங்களையும் குர்ஆன் தருகிறது.“தாம் என்ன செலவு செய்ய வேண்டும் என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். சொல்வீராக: நீங்கள் எந்த ஒரு நல்ல பொருளையும் செலவு செய்யுங்கள். அதனை உங்கள் பெற்றோருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், வறியவர்களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் செலவழியுங்கள். மேலும் நீங்கள் எந்த நன்மை செய்தாலும் அதனை நிச்சயமாக இறைவன் நன்கறிபவனாக இருக்கிறான்.”(குர்ஆன் 2:215)

யாருக்கும் எந்த உதவியும் செய்யாமல், பேராசையுடனும் கஞ்சத்தனத்துடனும் செல்வத்தைப் பதுக்கி வைப்பவர்களின் நிலை என்ன ஆகும்?
வேதம் கடுமையாக எச்சரிக்கிறது:“எவர்கள் தங்கத்தையும் வெள்ளியையும் சேகரித்து வைத்துக்கொண்டு அவற்றை இறைவனின் வழியில் செலவு செய்யாமல் இருக்கிறார்களோ அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனை இருக்கிறது எனும் ‘நற்செய்தி’யை நீர் அறிவிப்பீராக. ஒரு நாள் வரும். அந்த நாளில் இதே தங்கமும் வெள்ளியும் நரக நெருப்பில் பழுக்கக் காய்ச்சப்பட்டு பிறகு அவற்றால் அவர்களின் நெற்றிகளிலும் விலாப்புறங்களிலும் முதுகுகளிலும் சூடு போடப்படும். இவைதாம் நீங்கள் உங்களுக்காக சேகரித்து வைத்திருந்த கருவூலங்கள். எனவே நீங்கள் சேகரித்து வைத்திருந்த செல்வத்தைச் சுவையுங்கள்.” (குர்ஆன் 9:34-35)

தான தர்மங்கள் செய்யாமல் கஞ்சத்தனம் செய்பவர்களின் கதி இதுதான்.சரி, இறைவழியில் பொருளைச் செலவு செய்தால் கிடைக்கும் நன்மை என்ன? புண்ணியம் என்ன? இந்தக் கேள்விக்கு ஓர் அழகிய உவமை மூலம் இதயத்தை ஈர்க்கும் வகையில்  விடை அளிக்கிறது இறைவேதம்.
“இறைவழியில் தங்கள் பொருங்களைச் செலவழிப்போர்களின் உவமானம், ஒரு தானிய விதையைப் பயிரிடுவது போன்றதாகும். அதிலிருந்து ஏழு கதிர்கள் முளைக்கின்றன. ஒவ்வொரு கதிரும் நூறு தானிய மணிகளைக் கொண்டுள்ளது. இவ்வாறு இறைவன் தான் நாடுவோருக்கு அவர்களின் நற்செயல்களின்  பயன்களைப் பன்மடங்காக்குகிறான். மேலும் இறைவன் அதிகமதிகம் வழங்குபவனும் யாவற்றையும் நன்கு அறிந்தவனுமாய்
இருக்கின்றான்.”(குர்ஆன் 2:261)

ரமலான் தான தர்மங்களின் மாதமாகும். இந்த மாதத்தில் நாம் செய்யும் ஒவ்வோர் அறச் செயலுக்கும் ஒன்று முதல் 700 மடங்கு வரை நன்மை கிடைக்கும்.இந்தத் தூய மாதம் வந்துவிட்டால் நபிகளார்(ஸல்) காற்றைப் போல் விரைந்து தான தர்மங்களை வாரி வழங்குவார்கள் என்று நபிமொழித் தொகுப்பு நூல்களில் காணப்படுகின்றன.அதனால்தான் ரமலான் மாதத்தில் தான தர்மம் செய்வோரின் எண்ணிக்கை இதர மாதங்களைவிட பலமடங்காக அதிகரிக்கிறது.பெரும் பணக்காரர்கள் மட்டும்தான் தான தர்மம் செய்ய வேண்டும் என்பதில்லை. நம்மிடம் என்ன இருக்கிறதோ, இறைவன் நமக்கு என்ன அளித்திருக்கிறானோ அதிலிருந்து ஏழைகளுக்கும் தேவையுடையவர்களுக்கும் நாம் வழங்கினால் நன்மையும் புண்ணியமும் நமக்கும் ஏராளமாய்க் கிடைக்கும்.

-இர்ஃபான் அதீப்

1. இறைநம்பிக்கை கொண்டவர்களே, நீங்கள் இறைவனுக்கு அஞ்சி வாழ்ந்தீர்களாயின் உங்களுக்கு சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக் காட்டக்கூடிய உரைகல்லை வழங்குவான். மேலும் உங்களுடைய தீமைகளை உங்களை விட்டு நீக்கிவிடுவான். மேலும் உங்களை மன்னித்துவிடுவான். இறைவன் மாபெரும் அருளுடையவன் இருக்கிறான். (குர்ஆன் 8:29)

2. “ரமலானின் கடைசிப் பத்து நாட்களில் ஒற்றைப் படை இரவுகளில்- 21,23,25,27,29 இரவுகளில்- லைலத்துல் கத்ரு எனும் மாட்சிமை மிக்க இரவைத் தேடுங்கள்” என்று நபிகளார் கூறியிருக்கிறார்.இந்த மாட்சிமை மிக்க இரவு ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்த ஓர் இரவாகும்.இந்த இரவின் தொடக்க நேரத்திலிருந்து மறுநாள் அதிகாலை வரை வானவர்கள் பூமியில் இறங்கி வருகிறார்கள் என்றும்  அது மிகவும் நலம் பொருந்திய இரவு என்றும் பலவாறாக அதன் சிறப்புகள் சொல்லப்பட்டுள்ளன.இறுதிப் பத்து ஒற்றைப் படை இரவுகளில் விழித்திருந்து வழிபாடுகளில் ஈடுபட வேண்டும்.

3. அபூஉமாமா (ரலி) எனும் நபித்தோழர் கூறுகிறார்:நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘என்னை சொர்க்கத்திற்குக் கொண்டு செல்லக்கூடிய நற்செயல்களைச் சொல்லுங்கள்’ என்று கேட்டேன். அதற்கு நபிகளார், ‘நோன்பிருப்பாயாக, அதற்கு நிகரானது எதுவுமில்லை’ என்றார்கள்.
மீண்டும் அவர்களிடம் சென்று கேட்டேன்.  நபிகளார் ‘நோன்பிருப்பாயாக!’ என்று சொன்னார்கள். (நூல்கள்: அஹ்மது, நஸயீ, ஹாக்கிம்)

Tags : God ,
× RELATED தண்ணீர்… தண்ணீர்…