×

பொறுமையின் மாதம்...!


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “மக்களே! உங்களுக்கு மகத்தான ஒரு மாதம் வந்திருக்கிறது. அருள்வளம் நிறைந்த மாதம் அது. ஆயிரம் மாதங்களைவிட சிறந்த ஓர் இரவு அந்த மாதத்தில் உள்ளது. அந்த மாதத்தில் நோன்பு வைப்பதை இறைவன் கடமையாக்கியுள்ளான். இரவில் நின்று வழிபடுவதை உபரி வழிபாடாக அமைத்திருக்கிறான். அது பொறுமையின் மாதம். பொறுமையின் கூலி சொர்க்கமாகும்.” ரமலான் மாதத்தைப் பொறுமையின் மாதம் என்று நபிகளார் சிறப்பித்துக் கூறியுள்ளார். அரபு மொழியில் ‘ஸப்ர்’ எனும் சொல்லுக்குப் பொறுமை, நிலைகுலையாமை, கொள்கையில் உறுதியோடு இருத்தல் ஆகிய பொருள்களும் உண்டு.பொறுமை யாரிடம் இல்லையோ அவரால் எப்படி நோன்பு நோற்க முடியும்? எப்படி மணிக் கணக்கில் வழிபாடுகளில் ஈடுபட முடியும்?சூரியன் உதிப்பதற்கு முன்பே அதிகாலை நாலரை மணிக்குள் சாப்பிட்டு முடித்துவிட வேண்டும். அதன் பிறகு கிட்டத்தட்ட பதினான்கு மணிநேரம்- அந்திநேரம் சூரியன் மறையும் வரை-  பச்சைத் தண்ணீர்கூட பல்லில் படாமல் நோன்பு இருக்க வேண்டும். பொறுமையும் மன உறுதியும் இருந்தால்தான் இது சாத்தியம்.

அடுத்து இரவுநேர சிறப்புத் தொழுகையான தராவீஹ். ஒவ்வொரு நாளும் குர்ஆனிலிருந்து ஒரு பகுதி(ஜுஸ்உ) முழுமையாக இந்தத் தொழுகையில் ஓதப்படும். இந்தத் தொழுகை முடிவதற்கு குறைந்தது ஒரு மணி நேரம் ஆகும். நின்று தொழுதால் நன்மை அதிகம். அவ்வாறு நின்று தொழும்போது கால்கள் வலி எடுக்கக்கூடும். பொறுமை இல்லாதவர்களால் இதை எப்படி நிறைவேற்ற முடியும்?நோன்பு வைத்திருக்கும்போது நம்மிடம் யாரேனும் சண்டைக்கு வந்தால் அப்போதும் தேவைப்படுவது பொறுமைதான். “பதிலுக்குப் பதில்” என்று முண்டா தட்டிக் கொண்டு நாமும் கோதாவில் இறங்கிவிடக் கூடாது. மாறாக, “நான் நோன்பாளி...நான் நோன்பாளி..” என்று தெளிவாக அறிவித்துவிடவேண்டும். எதிராளி சண்டைக் கோழியாக இருந்தாலும் நாம் சமாதானப் புறாவாக இருப்பதற்குப் பொறுமை அவசியம். அதனால்தான் நபியவர்கள் “நோன்பு ஒரு கேடயமாகும்” என்று உவமை அழகோடு கூறினார்கள். அனைத்து வகை தீய தாக்குதல்களையும் நோன்பு எனும் கேடயத்தின் மூலம் தடுத்துக்கொள்ள வேண்டும்.

அதே போல் இந்த மாதத்தில் தான தர்மங்கள் அதிகம் செய்யவேண்டும் என்று நபிகளார் அறிவுறுத்தியுள்ளார்கள். அதற்கும் பொறுமை தேவை. எப்படித் தெரியுமா? தான தர்மம் செய்வதற்காக இரும்புப் பெட்டியிலிருந்து ஒருவர் ஐம்பதாயிரம் ரூபாய் எடுத்து வருகிறார் என்று வைத்துக்
கொள்வோம்.அதை எண்ணிக்கொண்டிருக்கும்போதே, “ஏன் ஐம்பதாயிரம் செலவு செய்ய வேண்டும்? கொஞ்சம் குறைத்துக்கொள்வோமே” என்கிற சிந்தனையும் குறுக்கும் நெடுக்கும் ஓடும். அத்தகைய எண்ணத்திற்குப் பலியாகிவிடாமல் உறுதியோடு இருந்து, அந்தப் பணத்தை இறைவழியில் செலவு செய்வதற்கு பொறுமை- நிலைகுலையாமை வேண்டும்.இப்படி ரமலான் மாதத்தில் எந்த நற்செயலை எடுத்துக்கொண்டாலும் அதைச் செய்வதற்குப் பொறுமை என்கிற பண்பு மிகமிக அவசியம். அதனால்தான் நபிகளார் கூறினார்: “ரமலான் பொறுமையின் மாதம். பொறுமையின் கூலி
சுவனமாகும்.”

-சமீம் ஜாவீத்

Tags :
× RELATED சூரிய பகவானின் தேரைக் கொண்ட சூரிய கோயில்