×

புத்தாடை அணியும்போது..! புத்தாடை இல்லாமல் பெருநாள் ஏது?

ரமளான் மாதம் தொடங்கிவிட்டால் துணிக் கடைகளில் கூட்டம் அலைமோதும். ஈகைத் திருநாளன்று புத்தாடை அணிய வேண்டும் என்று விரும்புவதில் தவறில்லை. அப்படிப் புத்தாடை அணியும் போது இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும். அந்த அழகிய வழியையும் இறைத்தூதர்(ஸல்) கற்றுத் தந்துள்ளார்.நபிகளார் புத்தாடை அணியும்போது, அந்த ஆடையின் பெயரைத் தலைப்பாகை என்றோ முழுநீளச் சட்டை என்றோ குறிப்பிட்டுவிட்டுப் பின்வருமாறு பிரார்த்திப்பார்: “இறைவா, புகழ் அனைத்தும் உனக்கே உரியன. நீயே எனக்கு இதை அணிவித்தாய். இந்த ஆடையின் நன்மையையும் இது எதற்காகத் தயாரிக்கப்பட்டதோ அதன் நன்மையையும் உன்னிடம் நான் வேண்டுகிறேன். இந்த ஆடையின் தீங்கிலிருந்தும் இது எதற்காகத் தயாரிக்கப்பட்டதோ அதன் தீங்கிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.”இறைத்தூதர்களைச் சுற்றி எப்போதும் தோழர்கள் இருப்பார்கள். தோழர்களில் யாரேனும் புத்தாடை அணிந்து வந்தால்,“இந்த ஆடை பழையதாகும். உயர்வுமிக்க இறைவன் அதற்குப் பகரமாக வேறு ஆடை தருவான்” என்று நபிகளார் கூறுவார்.

ஒருவர் உணவு உண்ணும்போது, “புகழ் அனைத்தும் இறைவனுக்கே. அவன்தான் இந்த உணவை எனக்கு வழங்கினான். அவன்தான் என்னுடைய முயற்சி, ஆற்றல் ஏதுமின்றி இதை எனக்கு வழங்கினான்” என்று பிரார்த்தித்தால் அவருடைய முந்தைய, பிந்தைய குற்றங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும் என்று இறைத்தூதர் கூறினார்கள்.அதே போல் உடை உடுத்தும்போது ஒருவர்,“புகழ் அனைத்தும் இறைவனுக்கே. அவன்தான் இந்த ஆடையை எனக்கு அணிவித்தான். என்னுடைய முயற்சி, ஆற்றல் எதுவும் இன்றி எனக்கு அணிவித்தான்” என்று பிரார்த்தனை செய்தால் அவருடைய முந்தைய குற்றங்களும் மன்னிக்கப்படும்; பிந்தைய குற்றங்களும் மன்னிக்கப்படும் என்று நபிகளார் கூறினார்கள். நபித்தோழர் ஒருவர் ஒரு சுவையான நிகழ்வைக் குறிப்பிடுகிறார்.

“நான் பழைய மட்டமான ஆடை அணிந்தபடி நபிகளாரைச் சந்திக்க வந்தேன். அப்போது நபிகளார் “உன்னிடம் செல்வமோ வசதி வாய்ப்புகளோ இல்லையா?” என்று கேட்டார்.“அனைத்துச் செல்வமும் உள்ளன இறைத்தூதர் அவர்களே” என்று கூறினேன்.“என்ன வகைச் செல்வங்கள்?” என்று மீண்டும் கேட்டார் நபிகளார்.“ஒட்டகங்கள், ஆடுகள், குதிரைகள், அடிமைகள் என எல்லா வசதிகளையும் இறைவன் எனக்குக் கொடுத்துள்ளான்” என்றேன். உடனே நபிகளார், “இறைவன் உனக்கு வழங்கியிருக்கிற அருட்கொடைகள் உன் மேனியில் வெளிப்படட்டும்” என்றார்.அதாவது, இவ்வளவு செல்வங்களை வைத்துக்கொண்டு ஏன் பஞ்சைப் பராரி போல் உடை அணிந்து வருகிறாய்?  நல்லவிதமாக ஆடை அணிந்து வரக்கூடாதா என்று அறிவுறுத்தினார்.மகிழ்ச்சி பொங்கும் பெருநாளன்று படாடோப ஆடம்பரம் இல்லாத வகையிலும், அதே நேரம் நம் வசதிக்கு ஏற்பவும் புத்தாடை வாங்கி அணிவோம்.அவ்வாறு அணியும்போது இறைத்தூதர் கற்றுத்தந்த பிரார்த்தனைகளைச் சொல்லி இறைவனுக்கு நன்றி செலுத்தி அவன் அருளைப் பெறுவோம்.

- ஹஸன்

Tags : tragedy ,
× RELATED பேருந்து – கார் மோதி விபத்து; 3 பேர் பலி 28 வீரர்கள் காயம்: ம.பி.யில் சோகம்