×

அனந்தனுக்கு 1000 நாமங்கள்

159. அதீந்த்ராய நமஹ: (Atheendhraaya namaha)

இந்திரனின் வெண்கொற்றக் குடையையும், இந்திரனின் தாயான அதிதி தேவியின் வைரத் தோடுகளையும் நரகாசுரன் அபகரித்துச் சென்றான். அவனை  வதம் செய்து தன் உடைமைகளை மீட்டுத் தருமாறு கண்ணனிடம் பிரார்த்தித்தான் இந்திரன்.

சத்யபாமாவை அழைத்துக் கொண்டு கருட வாகனத்தில் நரகாசுரனின் இருப்பிடத்துக்குச் சென்ற கண்ணன், நரகாசுரனுடன் போர் புரிந்து அவனை  வீழ்த்தினான். நரகாசுரன் சிறை வைத்திருந்த பதினாறாயிரம் அரசிளங்குமரிகளையும், அவன் அபகரித்து வைத்திருந்த இந்திரனின் குடையையும்,  அதிதியின் தோடுகளையும் மீட்டான் கண்ணன். (நரகாசுரவதம் பற்றியும், அந்த வதத்துக்கும் தீபாவளிப் பண்டிகைக்கும் உள்ள தொடர்பைப் பற்றியும்  வேறொரு திருநாமத்தின் விளக்கத்தில் விரிவாகக் காண உள்ளோம்.)
மீண்டும் சத்யபாமாவோடு கருட வாகனத்தில் ஏறிய கண்ணன், தேவலோகம் சென்று இந்திரனிடம் அவனது குடையையும் அவனது தாயின்  தோடுகளையும் ஒப்படைத்தான். இந்திரன் மனம் மகிழ்ந்து கண்ணனுக்குத் தன் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டான்.

அப்போது, தேவலோகத்திலுள்ள பாரிஜாத மலரைக் கண்ட சத்யபாமா, அதைத்தன் கூந்தலில் சூடிக் கொள்ள எண்ணி, அம்மலரைப் பறிக்கப் போனாள்.  ஆனால் இந்திராணி, “சாதாரண மனிதப் பெண்ணுக்குப் பாரிஜாத மலர் கேட்கிறதா?” என்று கோபத்துடன் சொல்லவே, மனம் நொந்து போனாள். எதுவும்  பேசாமல் கண்ணனுடன் துவாரகைக்குத் திரும்பிவிட்டாள் சத்யபாமா.

ஆனால் அவளது மனக்கலகத்தை அறிந்து கொண்ட கண்ணன், கருடனைத் தேவலோகத்துக்கு அனுப்பினான். பாரிஜாத மரத்தையே பெயர்த்து எடுத்து  வந்து சத்யபாமாவின் அந்தப்புரத்தின் வாசலில் நட்டார் கருடன். “ஒரு மலருக்கு ஆசைப்பட்ட எனக்கு மரத்தையே என் கணவர் தந்து விட்டாரே!” என  மனம் மகிழ்ந்தாள் சத்யபாமா.

எனினும், பாரிஜாத மரத்தைக் கண்ணன் கொண்டு சென்றதால் கோபம் கொண்டான் இந்திரன். தனக்காக நரகாசுரனை வதைத்து, அவன் கவர்ந்து  சென்ற குடையையும் தோடுகளையும் கண்ணன் மீட்டான் என்ற நன்றி விசுவாசம் இல்லாமல் கண்ணனையே எதிர்த்துப் போர் புரிய வந்தான்.  கண்ணனும் யாதவ சேனையைத் திரட்டிக் கொண்டு இந்திரனின் சேனையை எதிர்த்துப் போரிட்டான். அச்சமயம் தனது வஜ்ராயுதத்தால் கண்ணனைத்  தாக்க முற்பட்டான் இந்திரன். ஆனால் கண்ணனைத் தாக்க வேண்டும் என்ற எண்ணம் அவன் மனதில் உண்டான அடுத்த நொடியே அவனது வலக்கை  அசைவற்றுப் போனது.

அதிர்ந்து போன இந்திரன், தன் தவறை உணர்ந்தான். தன் சேனையை மீண்டும் அழைத்துக் கொண்டு தேவலோகம் சேர்ந்தான். ஆனாலும் அவனது  வலக்கையை அசைக்க இயலவில்லை. செயலிழந்த தன் கரம் மீண்டும் செயல்வடிவம் பெற என்ன வழி என்று பரமசிவனிடம் கேட்டான் இந்திரன்.  “திருநாங்கூரில் பதினொரு திருத்தலங்களில் திருமால் கோயில் கொண்டுள்ளார். அவற்றுள் ‘திருக்காவளம்பாடி’ என்னும் திருத்தலத்துக்குச் சென்று,  அங்கே ‘கோபாலகிருஷ்ணன்’ என்ற திருநாமத்துடன் விளங்கும் திருமாலை வழிபட்டால், உன் செயலிழந்த கை குணமாகும்!” என்றார் பரமசிவன்.

இந்திரனும் திருக்காவளம்பாடிக்கு வந்து திருமாலை வழிபட்டான். “நீ எனது தம்பியாக- உபேந்திரனாகப் பிறந்தவன் தானே எனக் கருதி உன்னையே  தாக்க முற்பட்டேன். அதற்கான சரியான தண்டனையைப் பெற்றுவிட்டேன். நீ இந்திரர்களுக்கெல்லாம் இந்திரன். இந்திரர்களைக் காட்டிலும் மேம்பட்ட  ‘அதீந்திரன்’ என்று இப்போது உணர்ந்தேன். என்னை மன்னித்தருள வேண்டும்!” என்று பிரார்த்தித்தான்.

அவனது பிரார்த்தனையை ஏற்ற கோபால கிருஷ்ணப் பெருமாள், அவனது வலக்கரம் மீண்டும் செயல்படும்படி அருள்புரிந்தார். இந்தச் சரித்திரத்தைத்  திருமங்கையாழ்வார்,

“ஏவிளங் கன்னிக்காகி இமையவர் கோனைச் செற்று
காவளம் கடிது இறுத்துக் கற்பகம் கொண்டு போந்தாய்
பூவளம் பொழில்கள் சூழ்ந்த புரந்தரன் செய்த நாங்கைக்
காவளம்பாடி மேய கண்ணனே! களைகண் நீயே!”

என்று பாடியுள்ளார். இவ்வாறு, தேவேந்திரனின் தம்பியாக- உபேந்திரனாக அவதரித்தாலும், உண்மையில் தேவேந்திரனுக்கும் மேம்பட்டவராகத்  திருமால் விளங்குவதால் ‘அதீந்த்ர:’ என்றழைக்கப்படுகிறார். ‘அதி’ என்றால் மேம்பட்ட என்று பொருள். ‘அதீந்த்ர:’ என்றால் இந்திரனைக் காட்டிலும்  மேம்பட்டவர். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 159-வது திருநாமம்.
குறிப்பு: சென்ற இதழில் விளக்கப்பட்ட உபேந்த்ர என்ற 153-வது திருநாமம் இந்திரனுக்குத் தம்பியாக அவதரித்த திருமாலின் எளிமையைக்  காட்டுகிறது. அதீந்த்ர என்ற 159-வது திருநாமம் அவ்வாறு உபேந்திரனாக அவதரித்த போதும் அவர் மேன்மை குன்றாமல் இருக்கிறார் என்று அவரது  பெருமையைக் காட்டுகிறது.

“அதீந்த்ராய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் வாழ்வில் உயர்ந்த பதவிகளையும் பல பெருமைகளையும் அடையும்படித் திருமால்  அருள்புரிவார்.

160. ஸங்க்ரஹாய நமஹ:  (Sangrahaaya namaha)


காஞ்சிபுரத்திலுள்ள திருவெஃகா என்னும் திருத்தலத்தில் உள்ள சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோயிலின் திருக்குளத்தில் ஐப்பசி மாதம்  திருவோண நட்சத்திரத்தில் ஒரு மகான் தோன்றினார். பொய்கையில் பிறந்தமையால் ‘பொய்கையாழ்வார்’ என்று பெயர் பெற்றார். மகாபலிபுரத்திலுள்ள  ஸ்தலசயனப் பெருமாள் கோயிலுக்கு அருகிலுள்ள குளத்தில் ஐப்பசி மாதம் அவிட்ட நட்சத்திரத்தன்று ஒரு மகான் தோன்றினார். அவர் பிறக்கும்  போதே மகா பக்தராகவும், மகா ஞானியாகவும் விளங்கினார். இத்தகைய ெபரும் வாழ்வு பெற்றவராக விளங்கியமையால் ‘பூதத்தாழ்வார்’ என்று  அழைக்கப்பட்டார். இங்கே பூதம் என்றால் சிறப்பாக வாழ்பவர் என்று பொருள்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள ஒரு பொய்கையில் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் ஒரு மகான் தோன்றினார். அவர் திருமாலைத் தரிசிக்க  வேண்டும் என்ற பேரவாவுடன் பேய் போலச் சுற்றித் திரிந்தமையால் ‘பேயாழ்வார்’ என்று அழைக்கப்பட்டார்.

“ஐப்பசியில் ஓணம் அவிட்டம் சதயம் இவை
ஒப்பிலவா நாள்கள் உலகத்தீர் - எத்திசையும்
பேசுபுகழ்ப் பொய்கையார் பூதத்தார் பேயாழ்வார்
தேசுடனே தோன்று சிறப்பால்.”

என்று பாடினார் மணவாள மாமுனிகள். வெவ்வேறு திசைகளில் சென்று கொண்டிருந்த இம்மூன்று ஆழ்வார்களும் தற்செயலாகத் திருக்கோவலூருக்கு  ஒரே நேரத்தில் வந்தார்கள். அப்போது நள்ளிரவு. மழை பொழிந்து கொண்டிருந்தது. ஒதுங்க இடம் தேடிய பொய்கையாழ்வார், மிருகண்டு முனிவரின்  ஆசிரமத்தின் ரேழியில் சென்று சயனித்துக் கொண்டார்.

சற்று நேரத்தில் பூதத்தாழ்வார் வந்து ரேழியின் கதவைத் தட்டினார். கதவைத் திறந்த பொய்கையாழ்வார், அறிமுகம் இல்லாதவராயினும் திருமால்  அடியார் என்கிறபடியால் பூதத்தாழ்வாருக்கு ஒதுங்க இடம் கொடுத்தார். இருவர் சயனிக்க இடமில்லாமையால், இருவரும் அமர்ந்து கொண்டனர். சற்று  நேரத்தில் பேயாழ்வாரும் வந்து கதவைத் தட்ட, அவருக்கும் இவர்கள் இடம் கொடுத்தார்கள். மூவர் அமர இடமில்லாமையால், மூவரும்  நின்றுகொண்டார்கள்.

அப்போது மூவருக்கும் இடையே நான்காவதாக ஒருவர் புகுந்து அவர்களை நெருக்குவது போல் உணர்ந்தார்கள். வந்த நான்காம் நபர் யாரென்று  பார்க்கும் ஆர்வத்தில்,

“வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காகச் - செய்ய
சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடராழி நீங்குகவே என்று.”

என்று பூமியையே அகலாக்கிக், கடல்நீரை நெய்யாக்கிச், சூரியனை ஒளியாக்கி ஒரு விளக்கேற்றினார் பொய்கையாழ்வார்.

“அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி
ஞானச் சுடர்விளக்கேற்றினேன் நாரணற்கு
ஞானத்தமிழ் புரிந்த நான்.”

என்று அன்பையே அகலாக்கி, ஆர்வத்தையே நெய்யாக்கி, சிந்தையையே திரியாக்கி, ஞானத்தை ஒளியாக்கி ஒரு விளக்கேற்றினார் பூதத்தாழ்வார்.  இருவரும் ஏற்றிய தீபங்களின் ஒளியால் வந்திருப்பவர் திருக்கோவலூரில் கோயில் கொண்டிருக்கும் உலகளந்த பெருமாள் என உணர்ந்த பேயாழ்வார்,

“திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கண் அணிநிறமும் கண்டேன் - செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன் பால் இன்று.”

என்று திருமாலைத் துதித்தார். தன் பக்தர்களான இவ்வாழ்வார்கள், பல்வேறு ஊர்களில் இருந்து தன்னைத் தேடி வந்தபடியால், அவர்களை  எதிர்கொண்டு அழைக்கும் விதமாகத் திருமால் அவர்களைத் தேடி வந்து, அவர்கள் இருந்த அந்தச் சிறு அறைக்குள் அவர்களை அணைத்து உறவாட  வந்தார்.அனைத்துலகங்களையும் அளந்தவரான போதும், இன்னும் பற்பல மேன்மைகள் இருப்பினும், தன் பக்தர்களுக்காகத் தன்னைக் குறைத்துக்  கொண்டு அவர்களைத் தேடி வந்து அவர்களோடு கலக்கும் இயல்பைக் கொண்டதால், ‘ஸங்க்ரஹ:’ என்று திருமால் அழைக்கப்படுகிறார். அதுவே  விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 160-வது திருநாமம்.

“ஸங்க்ரஹாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களைத் தேடி வந்து அவர்களுக்குத் திருமால் அருள்புரிவார். அடுத்து வர இருக்கும்  மூன்று திருநாமங்களும் கூடத் திரிவிக்கிரமனின் திருக்குணங்களையே சொல்லப் போகின்றன.

161. ஸர்காய நமஹ: (Sargaaya namaha)


(‘உபேந்த்ர:’ என்ற 153-வது திருநாமம் தொடங்கி, ‘நியம:’ என்ற 163-வது திருநாமம் வரையிலுள்ள 11 திருநாமங்கள் திருமாலின் வாமன  அவதாரத்தின் பெருமையை விளக்க வந்தவை) சுதபர் என்ற முனிவரும், அவரது மனைவி பிருச்னியும் திருமாலைக் குறித்துத் தவம் புரிந்தார்கள்.  திருமால் அவர்களுக்குக் காட்சியளித்து, “உங்களுக்கு என்ன வரம் வேண்டும்?” என்று கேட்டார். “உன்னைப் போலவே ஒரு பிள்ளை வேண்டும்!  உன்னைப் போலவே ஒரு பிள்ளை வேண்டும்! உன்னைப் போலவே ஒரு பிள்ளை வேண்டும்!” என்று மூன்று முறை அவர்கள் கேட்டார்கள்.

திருமால் சிந்தித்தார். “ஒத்தார் மிக்கார் இல்லாதவனான என்னைப் போல் பிள்ளை வேண்டும் என்று கேட்கிறீர்களே! எனக்கு நிகரானவர் யாருமே  இல்லையே! அதனால் என்னைப் போல் பிள்ளை வேண்டுமென்றால், அதற்கு ஒரே வழி நானே வந்து உங்களுக்கு மகனாகப் பிறப்பது தான். மேலும்,  நீங்கள் மூன்று முறை இக்கேள்வியைக் கேட்டபடியால், நான் மூன்று முறை உங்களுக்கு மகனாகப் பிறப்பேன்!” என்று வரம் அளித்தார்.

சிறிது நாட்களில் பிருச்னி கருவுற்றாள். பத்து மாதங்கள் ஆன அளவில், திருமாலின் அம்சமான ஆண் குழந்தை ஒன்று அவளுக்குப் பிறந்தது.  அக்குழந்தைக்கு நான்கு திருத்தோள்கள் இருந்தன. திருமார்பில் மகாலட்சுமி அமர்ந்திருந்தாள். அக்குழந்தைக்குப் ‘பிருச்னிகர்பன்’ என்று அவர்கள்  பெயரிட்டார்கள். சுதபரும் பிருச்னியும் தங்கள் அடுத்த பிறவியில் கச்யபராகவும் அதிதி தேவியாகவும் பிறந்தார்கள். அவர்களுக்கு மகனாக- வாமன  மூர்த்தியாகத் திருமால் அதிதியின் கருவில் இருந்து தோன்றினார்.

வாமன மூர்த்தியாக அவதரிக்கும்முன், திருமால் மகாலட்சுமியிடம், “நீ என் மார்பை விட்டுக் கொஞ்சம் விலகி இருக்க வேண்டும்!” என்றார். “ஏன்?”  என்று கேட்டாள் மகாலட்சுமி. “நான் பிரம்மச்சாரியாக மகாபலியின் யாகசாலைக்குச் சென்று யாசகம் கேட்கவுள்ளேன். அதனால் என் மனைவியான நீ  மார்பில் அமர்ந்திருந்தால் நான் பிரம்மச்சாரி அல்ல, கிருஹஸ்தன் என்று மகாபலி அறிந்துகொள்வான்!” என்றார். “அது உங்கள் கவலை! ஆனால்  இந்தத் திருமார்பை விட்டு ஒரு நொடி கூட அகல மாட்டேன்! மேலும் நீங்கள் அடியார்களுக்கு அருள்புரிவதற்காகப் பிறக்கும் போது, நானும்  உங்களோடு பிறப்பேன்!”  என்றாள் மகாலட்சுமி.

அதனால், வாமன மூர்த்தி அவதரிக்கும் போது திருமார்பில் மகாலட்சுமியோடு தோன்றினாலும், அவளை மறைக்கும் விதமாக மான் தோலை மார்பில்  அணிந்து கொண்டு மகாபலியிடம் சென்றார். கச்யபரும் அதிதியும் தங்கள் அடுத்த பிறவியில் வசுதேவராகவும் தேவகியாகவும் பிறந்தார்கள்.  அவர்களுக்கு மகனாகக் கண்ணன் அவதரித்தான். கண்ணன் பிறக்கும் போதே சங்கு சக்கரம் உள்ளிட்ட ஆயுதங்களோடும், நான்கு  திருத்தோள்களோடும், திருமார்பில் மகாலட்சுமியோடும், உந்தித் தாமரையோடும் தோன்றினான்.

இவ்வாறு, மூன்று முறை உங்களுக்கு மகனாகப் பிறப்பேன் என்று தான் சொன்ன வாக்கை நிறைவேற்றும் விதமாக, பிருச்னி-சுதபருக்குப்  பிருச்னிகர்ப்பனாகவும், அதிதி-கச்யபருக்கு வாமனனாகவும், தேவகி-வசுதேவருக்குக் கண்ணனாகவும் மூன்று முறை திருமால் அவதரித்தார். அந்த  மூன்று அவதாரங்களிலும் மார்பில்
மகாலட்சுமியோடு வந்து தோன்றினார்.

“தன்னாலே தன் உருவம் பயந்து தானாய்
தயங்கொலி சேர் மூவுலகும் தானாய் வானாய்
தன்னாலே தன் உருவில் மூர்த்தி மூன்றாய்த்
தான் ஆயன் ஆயினான் சரண் என்று உய்வீர்”

என்று திருமங்கையாழ்வார் பாடியதற்கேற்ப, அடியார்களுக்கு அருள்புரிவதற்காகத், தன்னையே பலவித வடிவங்களில் படைத்துக் கொண்டு தோன்றி  அவர்களுக்குக் காட்சியளிப்பதால் திருமால் ‘ஸர்க:’ என்றழைக்கப்படுகிறார். ‘ஸர்க:’ என்றால் படைத்தல் என்று பொருள். திருமால் தன்னைத் தானே  பலவிதமாகப் படைத்துக் கொண்டு அடியார்களுக்கு அருள்புரிவதால் இத்திருநாமம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. ‘ஸர்க:’ என்பது ஸஹஸ்ரநாமத்தின்  161-வது திருநாமம்.

“ஸர்காய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்குப் புதிது புதிதான சிந்தனைகளும் அந்தச் சிந்தனைகளைச் செவ்வனே செயல்படுத்தும்  ஆற்றலையும் திருமால்
அருள்வார்.

162. த்ருதாத்மனே நமஹ: (Dhruthaathmane namaha)

ராமாநுஜர் தமது ஆரம்பக் காலத்தில் காஞ்சிபுரத்துக்கு அருகே உள்ள திருப்புட்குழியில் யாதவப்பிரகாசர் என்னும் குருவிடம் பாடம் பயின்று வந்தார்.  யாதவப்பிரகாசர் வேதத்துக்குச் சொன்ன தவறான விளக்கங்களை ராமாநுஜரால் ஏற்க முடியவில்லை. அதனால் சில சமயங்களில் யாதவப்பிரகாசர்  கூறும் விளக்கங்களிலுள்ள குற்றங்களை ராமாநுஜர் சுட்டிக்காட்டியதுண்டு. தனது சீடன் தன்னை விஞ்சிய அறிவாளியாக இருப்பதைப் பொறுத்துக்  கொள்ள முடியாத யாதவப்பிரகாசர், “நீ இனி என்னிடம் பாடம் கற்க வராதே! உன் மனதுக்கு ஏற்றபடி யார் வேதத்தை விளக்குகிறார்களோ  அவர்களிடமே செல்!” என்று கூறி ராமாநுஜரைத் தம் குருகுலத்தில் இருந்து வெளியேற்றினார்.

கனத்த மனத்துடன் இருந்த ராமாநுஜர் ஸ்ரீபெரும்பூதூரில் உள்ள தம் இல்லத்துக்குச் செல்லாமல் காஞ்சிபுரம் சென்றார். அங்கே ஒரு வீட்டுத்  திண்ணையில் அழுதபடி சயனித்துக் கொண்டிருந்தார். “முழுமையான அறிவு பெற்றவரோ இல்லையோ, குரு என்ற பெயரில் யாதவப்பிரகாசர்  என்றொருவர் எனக்குக் கிடைத்தார். ஆனால் அவர் கூறிய தவறான அர்த்தங்களை நான் திருத்தியதால், நான் குருவை அவமதிப்பதாகக் கருதி,  அவரும் என்னை வெளியேற்றி விட்டாரே!

குருவருள் இல்லாமல் பிறவிப் பெருங்கடலைக் கடக்க இயலாதே! இனி நான் குருவைத் தேடி எங்கே செல்வேன்?” என்று புலம்பிக் கொண்டிருந்தார்  ராமாநுஜர். அச்சமயம் அவ்வழியே சென்ற வழிப்போக்கர் ஒரு ஸ்லோகத்தைப் பாடிக் கொண்டே சென்றார். அந்த ஸ்லோகத்தைக் கேட்ட அடுத்த  நொடியே ராமாநுஜரின் மனக்கலக்கம் தீர்ந்து விட்டது. அந்த சுலோகம் யாதெனில்,

கதா புன: சங்க-ரதாங்க-கல்பக-த்வஜ-அரவிந்த-அங்குச-வஜ்ர-லாஞ்சனம் |
த்ரிவிக்ரம! த்வத் சரண-அரவிந்த-யுகளம் மதீய-மூர்த்தானம் அலங்கரிஷ்யதி?

“உலகளந்த பெருமாளே! இவ்வுலகை அளந்த உன் திருவடிகள் காண்பவர் கண்களை ஈர்க்க வல்லவை, குளிர்ச்சி நிறைந்தவை, மனத்துக்கு ஆறுதல்  தருபவை, தாமரை மலர்போல் மணம் வீசுபவை. அத்திருவடிகளில் சங்கு, சக்கரம், கற்பகமரம், கொடி, தாமரை, அங்குசம், வஜ்ராயுதம் உள்ளிட்ட  முத்திரைகள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. நீ உலகங்களை அளந்த போது அந்தத் திருவடிகளை அனைத்து உயிர்களின் தலைகளிலும் பதித்தாயே!  அதுபோலவே மீண்டும் உன் திருவடிகளால் என் தலையை நீ எப்போது அலங்கரிக்கப் போகிறாய்?” என்று திரிவிக்கிரமப் பெருமாளைப் பார்த்துக்  கேட்கும் விதமாக இந்த ஸ்லோகம் அமைந்துள்ளது.

இந்த சுலோகம் ராமாநுஜருக்குப் புத்துணர்வைத் தந்தது. “அன்று கிருத யுகத்தில் உலகளந்த போது, திரிவிக்கிரமப் பெருமாள் அனைத்து  ஜீவாத்மாக்களையும் பிறவிப் பெருங்கடலில் இருந்து மீட்பதற்காகவும், அனைவரையும் உய்வடையச் செய்வதற்காகவும் நம் அனைவர் தலைகளிலும்  திருவடிகளைப் பதித்தார். அப்போது நானும் புல் பூண்டாகவோ, ஈ எறும்பாகவோ இப்பூமியில் இருந்திருப்பேன். என் தலையிலும் திரிவிக்கிரமன்  நிச்சயமாகத் தன் திருவடிகளை அப்போது பதித்திருப்பார். எனவே அந்தத் திருவடி ஸ்பரிசம் என்றுமே வீண்போகாது. அந்தப் பெருமாளின் அருளால்  எனக்கு நல்ல குரு விரைவில் கிடைத்து விடுவார்!” என்று நம்பிக்கை கொண்டார் ராமாநுஜர்.

அந்த ஸ்லோகத்தைப் பாடிய வழிப்போக்கரிடம் ஓடிச் சென்ற ராமாநுஜர், “இந்த ஸ்லோகத்தை இயற்றியவர் யார்?” என்று கேட்டார். “திருவரங்கத்தில்  ‘ஆளவந்தார்’ என்று போற்றப்படும் யாமுனாச்சாரியார் எழுந்தருளியுள்ளார். அவர் இயற்றிய ‘ஸ்தோத்திர ரத்தினம்’ என்னும் நூலில் இடம்பெற்றுள்ள  ஸ்லோகம் இது!” என்றார் வழிப்போக்கர். “அந்த ஆளவந்தாரை அடியேன் காண வேண்டும்!” என்று தம் விருப்பத்தை வெளிப்படுத்தினார் ராமாநுஜர்.  வழிப்போக்கரோ, “ஆளவந்தார் உங்களைக் காண விரும்புகிறார். உங்களை அழைத்து வருவதற்காகத் தான் என்னை இங்கே காஞ்சிபுரத்துக்கு அனுப்பி  வைத்தார்!” என்று கூறினார்.

மிகச்சிறந்த மகானான ஆளவந்தாரே தனக்குக் குருவாகக் கிடைத்து விட்டார் எனப் பேருவகை அடைந்த ராமாநுஜர், திரிவிக்கிரமப் பெருமாளுக்கு  நன்றி கூறி விட்டு அந்த வழிப்போக்கருடன் திருவரங்கத்தை நோக்கிப் புறப்பட்டார். (மேற்கொண்டு திருவரங்கத்தில் நடந்த சம்பவங்களை வேறொரு  திருநாம விளக்கத்தில் காண்போம்.) உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளும் உய்வடைய வேண்டும் என்பதற்காக, உலகை அளக்கும் போது,  அனைவரின் தலையிலும் திருமால் தன் திருவடிகளைப் பதித்தார். இத்தகைய செயல்களால், நாம் பிறவிப் பெருங்கடலுள் அழுந்தாமல் நம்மை  மீட்டெடுப்பதால், திருமால் ‘த்ருதாத்மா’ என்றழைக்கப்படுகிறார். ‘த்ருதாத்மா’ என்றால் பிறவிச் சுழலில் நாம் வீழாதபடி நம்மை மீட்பவர் (savior) என்று  பொருள். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 162-வது திருநாமம்.

“த்ருதாத்மனே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் பக்தர்களை அனைத்து விதமான துயரங்களில் இருந்தும் திருமால் மீட்டருள்வார்.(தொடர்ந்து  நாமம் சொல்வோம்)

திருக்குடந்தை உ வே வெங்கடேஷ்


Tags : Ananthan ,
× RELATED அனந்தனுக்கு 1000 நாமங்கள்!