×

திருமங்கலம் சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை : 2வது வாரமாக விற்பனை அமோகம்

திருமங்கலம் : திருமங்கலத்தில் நேற்று நடந்த ஆட்டுச்சந்தையில் கடந்த வாரத்தை காட்டிலும் ஆடுகள் விற்பனை அதிகளவில் இருந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர். திருமங்கலத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதால் நேற்றைய ஆட்டுச்சந்தையில் அதிகளவில் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். பக்ரீத்தையொட்டி கடந்த வாரம் நடைபெற்ற சந்தையில் ரூ.2 கோடி அளவில் ஆடுகள் விற்பனையாகியிருந்தன. இந்நிலையில் இரண்டாவது வாரமாக நேற்று நடைபெற்ற சந்தையில் வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டன. சாதாரணமான வாரநாள்களில் ஆடுகள் ரூ.10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரையில் விற்பனை செய்யப்படுவது வழக்கம். ஆனால் தற்போது பக்ரீத்தையொட்டி ஆட்டின் விலை ரூ.12 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரையில் விற்பனை செய்யப்பட்டது. காலை 3 மணிக்கு துவங்கிய சந்தை தொடர்ந்து 11 மணிவரையில் நடைபெற்றது. நேற்று ஒருநாள் மட்டும் ஆட்டுச்சந்தையில் சுமார் ரூ.3 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையாகின. இதனால் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்த வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர். நேற்று சந்தையில் ஆடுகளை வாங்க மதுரை, தேனி, விருதுநகர், சிவகாசி, சிவகங்கை, அருப்புக்கோட்டை, கோவில்பட்டி, திண்டுக்கல், கம்பம் பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் வந்திருந்தனர். நேற்று நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் கடந்த வாரத்தை விட அதிகளவில் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதேபோல் கோழிகளும் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டன. இது போன்ற விழாக்காலங்களில் அதிகளவில் பொதுமக்கள் கூட்டம் வருவதால் ஆட்டுச்சந்தையில் இடநெருக்கடி ஏற்படுகிறது. எனவே திருவிழாக்காலங்களில் ஆட்டுச்சந்தையை நடத்த மாற்று இடத்தை திருமங்கலம் நகராட்சி நிர்வாகம் ஒதுக்கி தரவேண்டும் என பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்….

The post திருமங்கலம் சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை : 2வது வாரமாக விற்பனை அமோகம் appeared first on Dinakaran.

Tags : Thirumangalam Market ,Thirumangalam ,Amogam ,
× RELATED திருமங்கலம் அருகே தடுப்புச்சுவரில் மோதி லாரி விபத்து