×

மங்களம் பேட்டை மங்கள நாயகி கோயில் திருத்தேர் திருவிழா

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே மங்கலம் பேட்டையில் இருக்கிறது மங்களநாயகி அம்மன் திருக்கோயில். இந்த கோயிலின் திருத்தேர் திருவிழா 29-5-2019 இன்று நடைபெற்றது. இந்த பழமையான ஆலயத்தின் வரலாறு சிலிர்ப்பூட்டும்.அந்த இலுப்பைத் தோப்பில் தனது நான்கு முக்கிய கூட்டாளிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தான், வெள்ளைக்கார தளபதி மூகாசா. ‘‘நம் தலைமையின் ஆணைப்படி பரூர் பாளையத்திற்கு தகவல் அனுப்பிவிட்டீர்களா? பாளையக்காரர் என்ன சொல்கிறார்?’’ மூகாசா கேட்டான்.  ‘‘அவர்கள் சரணடையத் தயாரில்லை என்று தகவல் வந்துள்ளது தளபதி,’’ கூட்டாளி பதில் சொன்னான்.‘‘ அப்படியானால் நாளை சூரிய உதயத்திற்கு முன் தாக்குதலைத் தொடங்கிவிடலாம்.

நமது முதல் இலக்கு மங்களநாயகி அம்மன் கோயில். இங்கே இடித்தால், அங்கே வலிக்கும்’’ &கட்டளைக்கு தலையசைத்தக் கூட்டம் தாக்குதலுக்கு தயார் படுத்த விரைந்தது.வைகறைப் பொழுது.நடக்கப் போகும் விபரீதம் புரியாமல் ‘கீச்’சிட்டுப் பறந்தன, கிளிகள். முந்தின வரை பல கோயில்களை கபளீகரம் செய்து விட்டு ரத்தக் காட்டேரியாய் அணிவகுத்து நின்ற மூகாசாப் படை, ‘‘தாக்குங்கள்’’ என்ற அவனது பேய் குரலைக் கேட்டு, பிசாசுகள் போல பாய்ந்தது. தோப்பில் நின்ற மூன்று தேர்களுக்குத் தீ வைத்தது.  கோயில் கதவுகளை உடைத்தது. நாயகி நகராது நின்று கவனித்தாள். மெல்ல உக்கிரமானாள். கர்வக் கண்களோடு, இந்த பூமியை ஆளும் கூட்டத்தின் பிரதிநிதி என்ற திமிரோடு... கையில் வாளுடன் கோயில் உள்ளே  நுழைந்த மூகாசா, கருங்கல் படி தாண்டி பலி பீடத்தருகே வந்து நின்றான்.

அலட்சியமாய் கோயிலை நோட்டமிட்டான். இடிக்க எத்தனை நாள் ஆகும், எவ்வளவு செல்வம் தேரும் என்று மனசுக்குள் கணக்குப் போட்டான். இரண்டு நாளில் முடித்து விடலாம்  என்று முடிவு செய்து கொண்டு எகத்தாளமாய்  காலகற்றி நின்ற அவன் முன்னால் வந்து நின்ற அர்ச்சகர், ‘‘அய்யா... இந்த கோயிலை தாக்கும் எண்ணத்தை விட்டு விடுங்கள். அவள் கோபக்காரி. வீணாக அவளின் கோபத்திற்கு ஆளாக வேண்டாம்’’ என்று நடுங்கும் குரலில் சொன்னார், அர்ச்சகர். ‘‘இந்தக் கிழவனை அப்புறப்படுத்துங்கள்’’ என்ற ஒற்றைக் கட்டளையில் நிலவரத்தை கடுமையாக்கிய மூகாசா, தம் வாளால் பலிபீடத்தை ஓங்கி வெட்டினான். கவிழ்த்த தாமரையாய்... அழகாய் நிமிர்ந்து நின்ற பீடம் அசைய மறுத்தது. ஆவேசமாய் மீண்டும் மீண்டும் வெட்டினான். சில்லெனத் தெறித்து விழுந்தது தாமரை இதழ்களின் நுனி. எக்காளமிட்டான், மூகாசா. கோபமானாள் மங்கள நாயகி. தனது கையில் இருந்த வில்லில் நாணேற் றினாள். மூகாசா படையை நோக்கி எய்தாள். அது கண்ணுக்குத் தெரியாமல் சீறிவந்து மூகாசாவின் கண்களைக் குருடாக்கியது. அவனது கூட்டத்தாரின் பார்வையையும் பறித்துச் சென்றது.
 

கண் தெரியாத மூகாசா கதறினான். அவனது படையோ செய்வதறியாது திகைத்தது. ஓரமாய் அஞ்சி நின்ற அர்ச்சகர், சற்று உரத்தக் குரலில் சொன்னார்: ‘‘தளபதியாரே, நான் அப்போதே எச்சரித்தேனே... கேட்டீரா? அம்மா தண்டித்து விட்டாள் பார்’’ என்று கூற, மூகாசா நெடுஞ்சாண் கிடையாய் விழுந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். அம்மன் கனிவு கொண்டாள். மீண்டும் மூகாசாவும் அவனது படையினரும் பார்வை வரப் பெற்றனர். அவன் தம் படைகளுடன் திரும்பிச் சென்றான். வெள்ளையருடன் கூட்டுப் படை அமைத்திருந்த மைசூர் மன்னன் நவாப் முகமது அலி, தளபதி மூகாசா விவரித்த அனுபவத்திலிருந்து அன்னையின் சக்தி உணர்ந்தான். தனது தவறுக்கு பிராயச்சித்தமாக கோயிலுக்கு மானியமாக நிலங்களை எழுதித் தந்தான். அதை 'நவாப் மானியம்' என்று இன்றும் சொல்கிறார்கள் அப்பகுதி மக்கள். அதன் பிறகு மூகாசா, தமது படையுடன் பரூர் பாளையத்துடன் மோதி படுகாயமடைந்தான்.

தனது மரணத் தருவாயில் தமது நினைவாக ஏதேனும் செய்யும்படி பாளையக்காரரை வேண்டிக் கொள்ள, அந்த பாளையம் அமைந்த பரூர் என்ற ஊர், அன்று முதல் 'மூகாசா பரூர்' என்றே அழைக்கப்படும் என்றார் பாளையக்காரர். அப்படியே ஆனது. இன்றும் அரசு பதிவேடுகளிலும் பரூர், மூகாசா பரூர் என்றே அழைக்கப்படுகிறது.இந்தக் கோயில் பற்றி வரலாற்று ஆதாரம், ஆவணங்கள் பெரிய அளவில் இல்லை என்றாலும் கர்ண பரம்பரை கதைகளாக நிறைய சொல்கிறார்கள். அவை வரலாற்றோடு ஒட்டியிருக்கிறது என்பதுதான் சுவை.கண்ணகிக்கு கோயில் கட்ட சேரன் செங்குட்டவன் இமய மலையிலிருந்து இரண்டு  புனிதக் கற்களைக்  கொண்டு வந்த போது, தனக்கு மிகப் பெரிய அளவில் உதவிகளைச் செய்த பரூர் பாளையத்தைச் சேர்ந்த குறுநில மன்னன் மீது அன்பு கொண்டு, அவனது உதவிக்கு பதில் மரியாதை செய்யும் வண்ணம், தான் கொண்டு வந்த இரண்டு புனிதக் கற்களில் ஒன்றை அவனுக்கு தந்தான், சேரன் செங்குட்டுவன். அதைப் பெற்றுக் கொண்ட பரூர் பகுதி மன்னன், இப்புனிதக்  கல்லில்  உக்கிரமான தேவதையை எழுந்தருளச் செய்து, பாளையத்தின் எல்லை ஆரம்பிக்கும் பகுதியில் காவல் தெய்வமாய் அவள் நிற்கும் வகையில்  கோயில் கட்ட விரும்பினான். அச்செவ்வக் வடிவ கல்லில், எட்டு கரங்களுடன் தோன்றுகிறாள் அன்னை. மகிஷாசுரனைக் கொன்று, தன் காலால் அவனது தலையை மிதித்தபடி சங்கு, சக்கரம் ஏந்தி... வினையருக்க வாள் கொண்டு... வில், அம்பு, பாச அங்குசத்துடன் அபய கரம் காட்டி மகா விஷ்ணு அவதாரமாய் வடிவம் பெற்றாள். அன்னை வனதுர்க்கை என்பதால் அவள் பின்னால் மான் ஓடி விளையாடுகிறது.

இவளை 'விஷ்ணு பிடாரி' என்றும் போற்றி வணங்குகிறார்கள்.  கடலூர் மாவட்டத்தில், மங்கலம் பேட்டையில் அமைந்துள்ள இக்கோயில்,  உளுந்தூர் பேட்டையிலிருந்து விருத்தாசலம் செல்லும் சாலையில், 7&வது கிலோ மீட்டரில் இருக்கிறது. 1700 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலின் பெயராலயே இவ்வூர் 'மாடு வெட்டி மங்கலம்பேட்டை' என்று வழங்கலாயிற்று.வாருங்கள் கோயிலுக்குச் செல்வோம்...வன்னி, அரசு, வேம்பு ஆகிய தல விருட்சங்களில் இப்போது அரச மரம் மட்டுமே எஞ்சியுள்ளது. மேற்கு நோக்கியுள்ள கோயிலின்  முகப்பில் உள்ள உயர்ந்த மரக் கதவைத் தாண்டிச் சென்றால் பலி பீடம். இங்குள்ள இரண்டு பெரிய வாளால்தான் எருமை கடாக்களை வெட்டி பலி கொடுப்பது வழக்கமாக இருந்தது.  பலிபீடம் கவிழ்ந்த தாமரை போன்று காணப்படுகிறது. மூகாசா ஏற்படுத்திய சேதத்தை இன்றும் அதில் காணலாம். பலி பீடத்திற்கு முன்னால் சிம்மம் கர்ஜித்தபடி கம்பீரமாய் அமர்ந்திருக்கிறது. அலங்கார மண்டபத் தூண்களில், விளக்கு ஏந்திய பெண்கள், துறவி, மன்னன் என பலவித சிற்பங்கள் வரிசைக் கட்டி நிற்கின்றன. கர்ப்ப கிரகத்திற்கு மேல் அமைந்துள்ள உயர்ந்த விமானம் ஏராளமான சிற்ப வேலைகளோடு கலைநயத்துடன் காட்சி தருகின்றது.  
 
பிராகாரத்தை சுற்றி வந்தால் மடப்பள்ளி, கிணறு. அதைத் தாண்டி மங்கள விநாயகர்.  விநாயகர் கோயிலுக்கு மேலே மிகப் பெரிய வெண்கல மணி.  இதன் எடை சுமார் 120 கிலோ (400 சேர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.) இதன் முழக்கம் நிச்சயம் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு கேட்கும். யானை முக நாயகன் கிழக்கு நோக்கி அமர்ந்துள்ளார். அவரை வணங்கி அவரது அருள் பெற்று நகர, ஸ்தாபன மண் டபம். யாகங்கள் நடக்கும் இம்மண்டபம் வெப்பம் இல்லாதபடி குளிர்ச்சி தரும் விதமாய் அமைக்கப் பட்டுள்ளது. அதற்கடுத்து மகா மண்டபம், அர்த்த மண்டபம். அது கதகதப்பாய் தாயின் இளஞ் சூடாய் இருக்கிறது. மண்டபத்தினுள் மங்கள விநாயகர், மங்கள நாயகி அம்மன், மாகாளியம்மன், சூல பிடாரி அம்மன் ஆகிய உற்சவர்கள் இருக்கிறார்கள்.  அதற்கடுத்து கர்ப்ப கிரகம். கர்ப்ப கிரக வாயிலில் துவார பாலகிகளும், விநாயகரும், நாராயணனும் நம்மை அன்னையருகே செல்ல வழிகாட்டுகின்றனர். மேற்கு திசையைப் பார்த்தபடி மங்கள நாயகி விளக்கொளியில்  சூரியனாய் பிரகாசிக்கிறாள். ‘‘தாயே காப்பாற்று’’ என்று இவளின் பாதம் பற்றி, பணிந்து வேண்டுவோரின் துன்பங்களைத் துடைத்தெறிகிறாள்.
 
இந்தக் கோயிலில் சித்திரை மாதம், செவ்வாய்க் கிழமை இரவு காப்புக் கட்டுவார்கள். காப்பு கட்டிக் கொள்பவரை சாத்துக்காரர் என்கிறார்கள். காப்புக் கட்டிக் கொள்ள என்றே வழி வழியாய் சில குடும்பங்கள் உள்ளன. காப்புக் கட்டிக் கொள்பவரின் மனைவி, விரதமிருந்து, ஊர்ப் பெண்களின் முன்னால் அடுப்பு வைத்து, எண்ணெய் காய்ச்சி, அதில் வடைத் தட்டி போட்டு வெந்தவுடன் வெறும் கையாலே அள்ள வேண்டும். எந்த பாதிப்பும் இல்லாமல் அள்ளினால் மட்டுமே அவரது கணவன் காப்புக் கட்டிக் கொள்ள முடியும். காப்புக் கட்டிக் கொண்டவர் மங்கள நாயகியாகவே கருதப்படுகிறார். அவருக்கு பெண் வேடமிட்ட உதவியாளர் ஒருவர் உண்டு. கோயிலின் எதிரே உள்ள அரச மரத்தின் கீழேதான் தங்குவார்கள். சாத்துக்காரர் ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே சாப்பிடுவார். அந்த சாப்பிடும் தாளிக்காத சாம்பாரோடுதான்.  அப்போது காகம் கத்தினாலோ, யாராவது பேசினாலோ அன்று சாப்பிட மாட்டார். அதிகாலை எழுந்து கர்னத்தம், விசலூர், பில்லூர், பள்ளிப்பட்டு, கோயிலானூர், குறும்பூர், பூவனூர் ஆகிய ஏழு ஊர் எல்லை களை அவர் மிதித்துவிட்டு வருவார். காப்புக் கட்டிய பின் யாரும் வெளியூரில் இரவு தங்கக் கூடாது. தேர் திருவிழாவிற்கு பிறகு காப்பு அவிழ்க்கும் வரை இந்த கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படுகின்றன.

16 நாட்கள் நடைபெறும் உற்சவத்தில் அனைத்து சமூக மக்களும் பங்கெடுத்துக் கொள்கிறார்கள்.
  கோயில் கர்ப்ப கிரகத்திலிருந்து மூகாசா பரூர் அரண்மனைக்கு, சுமார் நான்கு கிலோ மீட்டர் தூரத்திற்கு சுரங்கப் பாதை உள்ளதாம். சுரங்கப் பாதையில் நடந்து செல்லும்போது வழியில் ஓய்வெடுக்க, வெளியே வந்து அகரம் கிராமத்தில் உள்ள ஒரு பிள்ளையார் கோயிலில் தங்கிச் செல்வார்களாம். பிறகு கீழிறங்கி சுரங்கப் பயணத்தைத் தொடர்வார்களாம். இப்படி மூச்சு வாங்கிக் கொள்ள இடம் கொடுத்த பிள்ளையாரை 'மூச்சுப் பிள்ளையார்' என்று அழைத்தனராம். இன்றும் அதே பெயர் அவருக்கு.  மூகாசாப் படையினரால் மூன்று தேர்கள் எரிக்கப்பட்டன. பின்னாளில் பொது மக்களின் பங்களிப்போடு 250 ஆண்டுகளுக்கு முன்பு பொன்னம்பல கச்சிராயரார் உருவாக்கிய தேர்  தற்போது  பக்தர்களின் முயற்சியால் புதுப் பொலிவு அடைந்துள்ளது. கோயில் சீர் செய்யப்பட்டு அழகாய் காட்சி தருகிறது. இத்தலத்தின் திருத்தேர் திருவிழா இன்று நடைபெற்றது. தீய சக்தியை அழித்து நல்லவர்களைக் காக்கும் தாய்... மங்கள நாயகியை கண்ணாரக் கண்டு வணங்கினால் தாயன்போடு அரவணைத்துக் கொள்கிறாள். அமைதியான, நல்வாழ்வைத் தருகிறாள். பிரார்த்தனைகளை உடனே நிறைவேற்றி வைக்கிறாள்.  அச்சம் நீக்கி, அரவணைக்கும் மங்கள நாயகியை தரிசித்து வாருங்கள். உங்கள் வாழ்வு நிச்சயம் மலரும்.  

எஸ்.ஆர்.செந்தில்குமார்
படங்கள்: கதிரவன்
வீடியோ : நேதாஜி

Tags : festival ,Mangalam Naayi Temple ,Thirumala ,
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...