×

மரண பயம் போக்கும் பாடலீஸ்வரர்

கடலூர்

கடல் நீர் தெளிக்கும் வங்கக் கடலோரம் உள்ள தலம் திருப்பாதிரிப் புலியூர். தற்போது கடலூர் என அழைக்கப்படுகிறது. இத்தல இறைவன் பாடலீஸ்வரர். இறைவி சமேத அருந்தவநாயகி.கயிலையில் ஈசனின் லீலைகள் தொடங்கி விட்டன என்பதனை அந்தச் சொக்கட்டான் விளையாட்டு காட்டியது. ஒவ்வொரு விளையாட்டின் போதும் பிரபஞ்சத்தில் மாற்றங்கள் உருவாவதை தேவர்கள் அறிந்திருந்தனர். ஒவ்வொரு முறையும் வெற்றி தோல்வியைத் தாண்டி பார்வதி, ஈசனை பிரிந்து விடுவோமோ என கவலையுறுகிறாள். சக்தியும் சிவனும் என்றும் பிரியாது என உறுதியளிப்பார் சிவன். தவம் புரியுமாறு சக்தியை பூலோகம் அனுப்புவார். அப்படி சக்தி தவம் இருந்த தலம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கயிலாயமாகிவிடும்! இம்முறையும் அப்படியே சொக்கட்டான் உருட்டப்பட்டது. சிவன் விளையாட்டாகத் தோற்றார். ஆனாளும் வெற்றி தனதே என்றார். தேவி எழுந்து, விளையாட்டுக் கோபத்துடன் ஈசனின் கண்களை மூடினாள்.

உடனே உலகம் இருட்டு போர்வைக்குள் முடங்கியது. கயிலைநாதன் உண்மையாகவே கோபம் கொண்டார். பார்வதி, அவர் கண்களை மூடியது ஒரு கணம்தான். ஆனால், உயிர்களுக்கு அது பல யுகங்களாக நீண்டது. அதைக் கண்டு தாங்கொணாத் துயரில் ஆழ்ந்தாள் தேவி. உயிர்கள் படும் அல்லல்களைப் பார்த்து கண்ணீர் விட்டாள். ‘விளையாட்டு விபரீதமானதே. உயிர்களை காக்க வேண்டுமே’ என ஈசனிடமே கேட்டாள். பரிகாரம் சொன்னார் பரமன். ‘‘நான் எழுந்தருளியிருக்கும் தலங்கள் ஒவ்வொன்றாக தரிசித்து வா. எத்தலத்தில் உன் இடது தோளும், இடது கண்ணும் துடிக்கின்றதோ அங்கே அமர்ந்து சிலகாலம் பூஜித்து வந்தால் நீ மறுபடியும் என்னை அடையலாம் உலகமும் ஒளி பெறும்.’’ என்றார்.சப்த மாதாக்களையும் துணைகொண்டாள் பார்வதி தேவி. கயிலையை விட்டு வெளியேறினாள்.

வங்கக் கடலோரம் பயணித்தாள். பாதிரி மரங்கள் நிறைந்த அடர்ந்த காட்டைக் கடந்தபோது, மணம் கமழும் பாதிரி மரங்களினூடே அருட்பாலிக்கும் பாடலேஸ்வரனை ரிஷிகளும், ஐந்தறிவு கொண்ட கிளி போன்ற பறவையினங்களும், ஏனைய விலங்குகளும் வணங்கித் துதித்திருக்கும் காட்சியை கண்டு அதிசயித்து ஆனந்தமடைந்தாள். கெடில நதியின் தெளிந்த நீரில் மூழ்கி எழுந்தாள். பெண்ணை நதி மற்றும் பாலோடை நதிகளில் நீராடினாள்.  தேவியின் இடது கண்ணும் இடது தோளும் துடிக்கத் துவங்கின. இவ்விடமே தவம் செய்ய சிறந்த இடமென உறுதியோடு அமர்ந்தாள். தெய்வத்தன்மை கொண்ட பாதிரிமரம், தேவியின் அருந்தவத்திற்காக பல பூக்களையும், பூஜைக்குரிய பொருட்களையும் ஈன்றது. அன்றாடம் தேவியுடன் வந்த சப்தமாதர்களும் பூஜைக்கு வேண்டிய ஆயத்தங்களை செய்து வைத்தார்கள். உருவமேதும் கொள்ளாமல் காற்றில் கலந்த நிலையில் ஈசனை நோக்கி கடுந்தவம் மேற்கொண்டாள் தேவி. உடல் இனி வேண்டாம் என்று நினைத்து இயற்றிய உக்கிரதவம் அது.

திருமாலாலும், அருமைப் பிள்ளைகளான முருகன், விநாயகராலும்கூட  அம்பிகையைக் காண இயலவில்லை. சிவத்தோடு, சக்தியாவிலும் உறைந்து நிற்கும் உயர்நிலையைக் காட்டினாள். ரிஷிகளும், மாமுனிகளும், மானிடர்களும், தேவர்களும் அந்த அருவ அம்பாளை உள்ளத்தில் இருத்தி தியானித்தனர். இப்பொழுதும் இங்கு அம்பாள் சந்நதியில் அம்பாளை அருவுருவில்தான் தரிசிக்க முடியும். சிதம்பர ரகசியம்போல இது திருப்பாதிரிபுலியூர் ரகசியமோ என்னவோ! திருப்பாதிரிப்புலியூர் என்ற இத்தலத்தின் பெயரில் ‘புலியூர்’ என்ற பெயர்வரக் காரணம் உண்டு. புலிக்காலை வேண்டி வரம்பெற்ற வியாக்ரபாதர் பூஜித்த தலமாக இது விளங்குகிறது.  பாதிரி மரங்கள், மற்றும் புலிநகக் கொன்றை மரங்கள் அடர்ந்த இவ்வனத்தில் அருளாட்சி செய்வதால் திருபாதிரிப்புலியூர் என்ற திருநாமம் விளங்கப் பெறலாயிற்று. விநாயகப் பெருமான் அங்குசம் - பாசத்திற்குப் பதிலாக தமது திருக்கரங்களில் பாதிரி மலர்களை ஏந்தி, பிரமாண்ட ரூபமாக வாயிற்படி அருகில் அமர்ந்து அருட்பாலிக்கின்றார். பெரிய கோயில். சிற்பங்களும், இறை உருவங்களும் காண்போரை மயங்கச் செய்கின்றன. மகிமைமிக்க இத்தலத்தின் வரலாறோ புராணத் தொன்மை வாய்ந்ததாக இருக்கிறது. மொத்தத்தில் இத்தலத்தை கயிலை என்றே சொல்லலாம்.

அம்பாள் கருவறையை ஆவலுடன் நெருங்குகிறோம். உருவமற்ற அருவாய் தவமிருப்பதால் அம்பாளுக்கு அருந்தவநாயகி என்ற திருநாமம். அம்பிகை இங்கு தனிக்கோயிலில் ஆறடி உயரத்தில் பெரியநாயகி எனும் திருநாமத்தோடு எழுந்தருளியிருக்கிறாள். விசேஷ நாட்களில் இந்த தேவிக்கு தங்ககவசம் சாத்தி வழிபடுவது வழக்கம். தவமிருந்து ஈசனிடம் வரம் வாங்கியதால் அதை தன்னை தரிசிப்போருக்கும் கொடுத்துப் பெருமகிழ்ச்சி அடையும் அன்னை இவள். அடுத்து தலமரமான பாதிரி மரத்தை தரிசிக்கிறோம். அருந்தவநாயகி சிவபிரானை நோக்கி தவம் செய்த இப்பாதிரி மரத்தின் மகிமையும் எண்ணற்றது. அதன் வேர் - நாதம், தழைகள் - நான்கு வேதங்கள், பூக்கள் - ஆகமங்கள், பூக்களின் சுகந்தம் - ‘சிவாய நம’ என்ற ஐந்தெழுத்து மந்திரமாகும். காமதேனுவைப் போல கேட்டதை அளித்திடும் வல்லமை இந்த விருட்சத்திற்கு உண்டு. சிவநெறிச்சீலரான நாவுக்கரசரும் பாடலேசனின் திருவருள் பெற்று உய்வடைந்த பெருந்தலம் இது.

ஐந்து, ஆறாம் நூற்றாண்டுகளில் இப்பகுதியில் சமணத்துறவிகளும் அரசர்களும் செங்கோலோச்சி வந்தார்கள். திருவாமூரில் அவதரித்த நாவுக்கரசர் இளமை பிராயத்தில் சமண சமயத்தின்மீது பற்று கொண்டிருந்தார். திருநாவுக்கரசர் தருமசேனன் என்ற பெயருடன் விளங்கி வந்த காலம் அது. இவரது தமக்கை திலகவதிக்கு, தருமசேனன் சமண சமயத்தைப் பின்பற்றுவதில் மிகுந்த மனவருத்தம். திருவதிகை ஈசனிடம் முறையிட்டுப் புலம்பிய வண்ணம் இருந்தபோது, தருமசேனனை சூலைநோய் தாக்கியது. சமணர்களால் இந்நோயைக் குணமடையச் செய்ய முடியாது போயிற்று. தமக்கை திலகவதியாருடன் திருவதிகை சென்று, அங்கு ஈசனைத் துதித்து, ‘காற்றாயினவாறு’ என்ற பதிகம் பாடி திருநீறு பூசியவுடன் சூலைநோய் மாயமாய் மறைந்தது. இதற்குப் பின்னரே தருமசேனன், சிவனடிப் போற்றித் துதிக்கலானார்;திருநாவுக்கரசரானார். தருமசேனன் சமணத்தை விட்டு அகலுவதை பொறுக்காத சமணர்கள் அவரைக் கல்லுடன் கட்டி கடலில் எறிந்தனர். பரமனை நோக்கி, ‘சொற்றுணை வேதியன்’ என்ற பதிகத்தை மனமுருகப் பாடினார். கல் அழகிய தெப்பமாக மாறியது. நாவுக்கரசரைக் கரை சேர்த்தது. கல்லில் அமர்ந்த நிலையில் நாவுக்கரசரின் அபூர்வ சிலாவடிவத்தை இக்கோயிலில் தனிச் சந்நதியில் தரிசிக்கலாம்.

திருநாவுக்கரசருக்கு அருளியதுபோல் இத்தல ஈசன் மாணிக்கவாசகருக்கும் அருளினார். ஒருமுறை சித்தர் வடிவு கொண்டு ஈசன், மாணிக்கவாசகரை வடபுலியூர் என்றழைக்கப்படும் திருப்பாதிரிப்புலியூரில் சந்தித்தார். மாணிக்கவாசகர் அவ்விடத்திற்கு வந்த நேரத்தில் அங்குள்ள கெடிலநதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. சித்தர் உருவிலிருந்த சிவம் மாணிக்கவாசகர் முன் தோன்றி, வெள்ளத்தின் மீது நடந்து வரச் சொன்னார். நம்பி வருவதற்கு யோசித்தார். ஆனாலும், நாதன் விடவில்லை. தயங்கி நின்ற மாணிக்கவாசகரை ‘‘ ஒரு கணம் கண்மூடி நில்’’ என்றார். கண்மூடி நின்ற நேரத்தில் கையிலேந்திய கழி ஒன்றினால், தென்திசையில் ஓடிக்கொண்டிருந்த கெடிலநதியை வடதிசைக்குத் திருப்பி விட்டார், இறைவன். தென்திசையில் நீர் வடிந்தது. மாணிக்கவாசகர் திருப்பாதிரிப்புலியூரை அடைந்தார். இங்குள்ள சிவகரதீர்த்தமானது சிவசக்தி ஐக்கியமான புனித நீரானதால், முக்தியே இனி இல்லை என்போருக்குக்கூட சிவபதம் அளித்திடும் சக்தி கொண்டது. இன்றும், மாசி மகமும் பௌர்ணமி நன்னாளும் கூடிவரும் திருவிழா நாளில் கங்கையே சிவகரதீர்த்தத்தில் மூழ்கி எழுந்து அவளது கலைகளில் ஒரு பங்கினை இங்கு விட்டுச் செல்கின்றாள் என்று ஆன்றோர்கள் சொல்கிறார்கள். கார்த்திகை சோமவாரத்தில் பக்தகோடிகள் ஏற்றும் பல தீபங்களைப் பார்ப்பதே பெரும் புண்ணியமாகும். கார்த்திகை சோமவார விழாக்கள் இதனாலேயே இத்தலத்தில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
இந்த ஆலயம் கடலூர் நகரத்தின் நடுவே உள்ளது.

Tags : songwriter ,
× RELATED பாடலாசிரியர் ஆனார் கிரிக்கெட் வீரர்!