×

மன்னருக்கு அருள் தந்த வீர அழகர் பெருமாள்

சிவகங்கையிலிருந்து 18 கிமீ தொலைவில் உள்ளது மானாமதுரை. பண்டைய காலத்தில் ‘வானர வீர மதுரை’ என்று இந்த ஊர் அழைக்கப்பட்டுள்ளது. பண்டைய காலத்தில் சீதையை தேடி ராமர் இலங்கைக்கு செல்லும் வழியில், இங்கிருந்த ஒரு பழத்தோட்டத்திற்கு  வானர வீரர்களுடன் வந்தார். அங்கு மரத்திலிருந்த பழங்களை பறித்து சாப்பிட்ட வானர வீரர்களுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதனையறிந்த ராமர் அவர்களை மயக்கத்திலிருந்து மீட்டார் என்பது புராணம். இந்த நிகழ்வுக்கு பின்னர் அப்பகுதி ‘வானர வீர மதுரை’ என்று அழைக்கப்பட்டுள்ளது. காலப்போக்கில் மானாமதுரை என்று மருவியதாக கூறப்படுகிறது. இங்கு பழமையான வீர அழகர் பெருமாள் என்று அழைக்கப்படும் சுந்தர்ராஜ பெருமாள் கோயில் உள்ளது. தேவி, பூதேவி சமேதராய் சுந்தர்ராஜப்பெருமாள் அருள் பாலிக்கிறார். தாயார் சவுந்தரவல்லி என்ற மகாலட்சுமிக்கு தனி சன்னதி உண்டு. மீனாட்சியம்மன், ஆஞ்சநேயர் சிலைகள் உள்ளன. கோயிலில் கொடிமரம் உள்ளது. கோயிலுக்கு சொந்தமான அலங்கார தீர்த்தம் உள்ளது.

தல வரலாறு:

நீண்ட காலங்களுக்கு முன்பு மானாமதுரை பகுதியை மாவலி வாணாதிராயர் என்ற மன்னர் ஆட்சி புரிந்தார். மன்னருக்கு, மதுரை அழகர்கோயிலில் வீற்றிருக்கும் சுந்தர்ராஜப்பெருமாளிடம் மிகுந்த பக்தி உண்டு. பெருமாளை தரிசிக்காமல், எந்த ஒரு காரியத்தையும் அவர் செய்ய மாட்டார். ஒருநாள் உடல்நலக்குறைவு காரணமாக, சுந்தர்ராஜபெருமாளை மன்னர் தரிசனம் செய்ய முடியவில்லை. இதனால் மன்னர் மிகுந்த வேதனையடைந்தார். அன்றிரவு அவரது கனவில் தோன்றிய பெருமாள், ‘‘மன்னா இப்பகுதியில் உள்ள வைகையாற்றின் தென்கரையில் எனக்கு கோயில் கட்டி வழிபடு. இதனால் மதுரை அழகர்கோயிலில் உள்ள சுந்தர்ராஜ பெருமாளை வழிபட்ட புண்ணியம் உனக்கு கிடைக்கும்’’ என்று கூறி மறைந்தார்.

மன்னரும் இறைவன் கூறியபடி கோயிலை கட்ட நினைத்தான். ஆனால் எந்த இடத்தில் கோயில் கட்டுவது என அவருக்கு குழப்பம் ஏற்பட்டது. அன்றிரவு மீண்டும் மன்னர் முன்பு தோன்றிய பெருமாள், ‘‘ஒரு எலுமிச்சம்பழத்தை இரண்டாக நறுக்கி வைகையாற்றில் விட்டு விடு. எலுமிச்சம்பழத்தின் ஒரு பகுதி எந்த இடத்தில் கரை சேர்கிறதோ அங்கு கோயிலை எழுப்பு. மறுபாதி கரை சேரும் பகுதியில் கோயில் குளத்தை கட்டு’’ என்று கூறி மறைந்தார். இதன்படி மன்னரும் வீரராகவ அழகர் கோயில் மற்றும் குளத்தை கட்டினார் என்று கூறப்படுகிறது.

மதுரை அழகர்கோயிலை போன்று இங்கும் சித்திரை மாதம் 10 நாள் விழா நடக்கிறது. விழா முக்கிய நிகழ்ச்சியாக 4ம் நாள் அழகர் எதிர்சேவையும், 5ம் நாள் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவமும் நடக்கிறது. ஆடி பவுர்ணமி பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி, ராப்பத்து, பகற்பத்து ஆகியவையும் முக்கிய விசேஷங்களாகும். வறுமை நீங்க, இங்குள்ள மகாலட்சுமிக்கு பக்தர்கள் தாமரைத்திரியால் விளக்கிட்டு வணங்குகின்றனர்.

இவ்வாறு வழிபட்டால் செல்வம் கொழிக்கும் என்பது ஐதீகம். மேலும் திருமணத்தடை நீங்க வேண்டி ஆஞ்சநேயருக்கு வியாழக்கிழமைகளில் வெற்றிலை மாலை அணிவிக்கின்றனர். காரியத்தடை நீங்க வியாழன் மற்றும் சனி கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு எலுமிச்சை மாலையணிவித்து வழிபடுகின்றனர். கோயில் நடை தினமும் காலை 7 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

Tags : Veera Azhakar Perumal ,king ,
× RELATED மன்னர் சார்லஸ் இறந்ததாக வெளியான...