×

தனம், கல்வி தருவார் தத்தாத்ரேயர்

சேலையூர், சென்னை

புதுக்கோட்டை ஜட்ஜ் சுவாமிகளின் சீடர் ஸ்வயம்பிரகாசர். அவரது சீடர் சாந்தானந்த சுவாமிகள். 1921ல் அவதரித்த அவரது இயற்பெயர் சுப்ரமணியம்.  அவரால் ஸ்தாபிக்கப்பட்ட தலங்கள் ஸ்கந்தாஸ்ரமம் என பெயர் பெற்றன. அவரால் எழுப்பப்பட்ட ஸ்கந்தாஸ்ரமம் எனும் அற்புத ஆலயம் சென்னை -  சேலையூரில் உள்ளது. பிரமாண்ட முறையில் கண்களைக் கவரும் சிற்ப வேலைப்பாடுகளுடன் விளங்கும் இறையுருவங்களை இத்தலத்தில் தரிசிக்கலாம்.ஆலயத்தில் நுழைந்ததும் பஞ்சமுக ஹேரம்ப கணபதியை தரிசிக்கலாம். இவரை வலம் வரும்போது கோஷ்டத்தில் பாலகணபதி, ஹேரம்பகணபதி, லட்சுமி கணபதி ஆகியோரின் சுதை உருவங்களையும் தரிசிக்கலாம்.

ஆலயத்தினுள் நுழைந்ததும் கருவறையில் 6 அடி உயரத்தில் புவனேஸ்வரி அருள்கிறாள். இத்தேவியை வலம் வரும்போது கோஷ்டங்களில்  தசமகாவித்யா தேவியர்களையும் ஒருசேர தரிசிக்கலாம். இந்த புவனேஸ்வரி தேவி. அன்னைக்கு வலப்புறம் தல கணபதியான கமலசித்தி விநாயகர்  கோயில் கொண்டுள்ளார். இடப்புறம் சாந்தானந்தரின் சந்நதி உள்ளது. தன் குருநாதர்களோடு அவர் திருவருள் புரிகிறார். புவனேஸ்வரி தேவியின் சந்நதிமுன் பூரண மஹாமேரு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ‘  தேவிக்கு வலப்புறம் உள்ள சந்நதியில் சரபேஸ்வரர் அருள்கிறார். நாராயணனே எல்லாம், அவனே எங்கும் உளன் என்பதை தன் மகன் கூறியதைக் கேட்ட ஹிரண்யன், அகந்தையால் இறையடி பணிய மறுத்தபோது நரசிம்மமூர்த்தி அவனைக் கொன்று ஆரவாரித்தார்.

அவரது ஆரவாரத்தால் உலகமே அழிந்துவிடுமோ என அனைவரும் அதிர்ந்தபோது ஈசன், சரபேஸ்வர அவதாரம் எடுத்தார். தன் இறக்கைகளாலும் கால்களாலும் நரசிம்மரை கட்டி அணைத்து அவர் சினம் தணித்து இந்த உலகைக்காத்தார் என காஞ்சிபுராணம் கூறுகிறது.  பட்சிகளின் அரசனாக‘ஸாலுவேசன்’ எனும் திருநாமமும் இவருக்கு உண்டு. பத்தடி உயரத்தில் பஞ்சலோகத்தினாலான சரபேஸ்வரர் தன் திருக்கரங்களில் மான், மழு, சர்ப்பம், தீ ஏந்தியுள்ளார். கொடிய பகைவரை அழித்து தீராத இன்னல் தீர்த்து சரணடைந்தோர்க்கு அபயமளிக்கும் தெய்வம் சரபமூர்த்தி என வேதங்கள் போற்றுகின்றன. பகைவர், நோய், வனத்தில் பயம், பாம்பு போன்ற விஷஜந்துக்களால் வரும் ஆபத்துகள், தீவிபத்து, யானை, கரடி போன்ற விலங்குகளின் தொல்லை, பஞ்சபூதங்களால் வரும் ஆபத்து போன்றவற்றிலிருந்து சரபேஸ்வரர் காப்பார் என அதர்வண வேத மந்திரம் குறிப்பிடுகிறது. பிரதோஷ  வேளைகளிலும் ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால வேளையிலும் இவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. இவரது பிராகார சுற்றுச் சுவர்களில் பைரவரின் பல்வேறு மூர்த்தங்கள் சுதைச் சிற்பங்களாக விளங்குகின்றன.

தமிழகத்தில் அறுபடை வீடுகள் கொண்டு அருளாட்சி செய்துவரும் முருகனை ஸ்வாமிநாதனாக, 10 அடி உயரத்தில் எழில் கொஞ்சும் திருவடிவில்  இத்தலத்தில் தரிசிக்கலாம். மிகவும் வரப்ரசாதி இவர். புவனேஸ்வரி தேவியின் நேர் எதிரே இவர் சந்நதி உள்ளது. தாயின் பார்வையில் எப்போதும்  இருப்பதால் இந்த முருகப்பெருமான் கருணையில் வடிவாகவே அருட்காட்சியளிக்கிறார். இவரது பிராகார சுற்றுச் சுவர்களில் அறுபடை வீட்டு  முருகப்பெருமான்களும், கதிர்காம முருகனும், பாலமுருகனும் சுதை வடிவில் அருள்கின்றனர். சரபேஸ்வரரின் நேர் எதிரே ப்ரத்யங்கிரா தேவி  அருளாட்சி புரிகிறாள். சதி எனும் பார்வதியின் கோபமே ப்ரத்யங்கிராவாக உருவெடுத்ததாக மந்திர சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்திரஜித் இந்த ராம-லட்சுமணரை வெல்ல இந்த ப்ரத்யங்கிரா தேவியைக் குறித்தே நிகும்பலா யாகம் செய்தான். அந்த யாகம் நிறைவு பெற்றால் அவனை யாராலும் அழிக்க முடியாது என்பதற்காக லட்சுமணன் அவனை அழித்ததாக புராணங்கள் பகர்கின்றன. அனுமானை இத்தலத்தில் பஞ்சமுகங்களோடு தரிசிக்கலாம். சுதர்சனர் 28 அடி உயரத்தில் பஞ்சலோகத்தால் உருவாக்கப்பட்டு இத்தலத்தில் கிழக்கு நோக்கி அருள்கிறார். அவரின் பின்புறம் லட்சுமி நரசிம்மர் பிரகலாதனோடு காட்சி தருவது எங்குமே காண இயலாத அற்புதம். இவருக்கு எதிரே 5 அடி உயரத்தில் சுதைச் சிற்பமாக திருமலையில் அருளும் வெங்கடாஜலபதியை தரிசிக்கலாம்.

 ஐயப்பன், இங்கே 5 அடி உயர பஞ்சலோக மூர்த்தியாய் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். இவர். ஆலய பிராகாரத்தில் மகாலட்சுமி, மகாசரஸ்வதி, மகாதுர்க்கை மூவரும் ஓருருவாக அஷ்டதசபுஜமகாலக்ஷ்மியாய் அருள்கின்றனர். ராகு கிரகத்தால் வணங்கப்பட்டதால் ராகுகால துர்க்கை  எனவும் மங்களசண்டி எனவும் இத்தேவி வழிபடப்படுகிறாள். 10 அடி உயரத்தில் ஸஹஸ்ரலிங்கத்தையும் 6 அடி உயரத்தில் நந்தியம் பெருமாளையும் தரிசிக்கலாம்.அடுத்து காகத்தின் மேல் தன் வலக்காலை வைத்து எழிலார்ந்த கோலத்தில் பத்தடி உயர சனிபகவானை தரிசிக்கலாம். அவரை அடுத்து மனிதர்களின் அறியாமையிருள் நீக்கி, ஞான ஒளிபெற தத்தகீதையை அருளிய தத்தாத்ரேயரை 12 அடி உயர மூர்த்தியாக தரிசிக்கலாம். கார்த்தவீர்யார்ஜுனன் எனும் ஆயிரம் கைகள் கொண்ட மன்னன், தத்தாத்ரேயரை உபாசித்து அவரருளால் பல வரங்களைப் பெற்றவன். சாந்தானந்த சுவாமிகளும் தத்த பரம்பரையில் வந்த பெருமை பெற்றவர். ஞானம் வேண்டுவோர் வணங்க வேண்டிய இறை ஆசான், இந்த தத்தாத்ரேயர். ஆலய கோபுரங்கள் ஒடிஸா மாநில பாணியில் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் அமைதியாக தியானம் செய்ய தியான மண்டபமும் இத்தலத்தில் உள்ளது.

- சி.லட்சுமி


Tags : Daddy ,Dattatreya ,
× RELATED பாஜக ஆளும் அரியானா மாநிலத்தின் முதல்வராக நயாப்சிங் சைனி பதவியேற்பு..!!