×

கோயிலின் சிறப்புகள் சில

குழந்தை வரம் தரும் க்ஷேத்ர பாலகர்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் சக்கரத்தாழ்வார் சந்நதி முன்பு ஒரு பெரிய கல் நடப்பட்டுள்ளது. இதை ‘‘க்ஷேத்ர பாலகர்’’ என கிராம மக்கள் அழைக்கின்றனர். தங்கள் காவல் தெய்வமாக நம்புகின்றனர். இவரை வணங்கினால் குழந்தை இல்லாதவர்களுக்கு மகப்பேறு வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.  

ஹைதர் அலி வணங்கிய சாமுண்டீஸ்வரி

மைசூரில் இருக்கும் சாமுண்டீஸ்வரி கோயில் மிகவும் பிரபலமானது. காளியின் மறு உருவமாக விளங்கும் இந்த சாமுண்டீஸ்வரியை வணங்காமல் மைசூரை ஆண்ட ஹைதர் அலியும், அவரது மகன் திப்பு சுல்தானும் எந்த செயலும் செய்யமாட்டார்கள் என்பது இக் கோயிலின் சிறப்பம்சம் ஆகும். ஹைதர் அலியும், அவரது மகன் திப்பு சுல்தானும் செய்யும் செயல்கள் சிறப்பாக நிறைவேறியதால் இந்த அம்மனுக்கு ஏராளமான நகைகளை வழங்கியிருக்கிறார்கள் என தல வரலாறு கூறுகிறது.

ஓடிவரும் அம்மன்

தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் காலைத் தூக்கிய நிலையில் ஓடி வருவதற்குத் தயாராக உள்ள அம்மன் காந்திமதி அம்மன். திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் இந்த அம்மன் அருட்பாலிக்கிறாள். தன்னை நாடி வரும் பக்தர்களின் குறைகளை ஓடி வந்து நிவர்த்தி செய்வாள் என்பதை குறிக்கும் வகையில் இந்த அம்மன் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

மூன்று முகத்தோற்றங்களில் சுந்தரரின் சிலைகள்

திருப்பூர் அருகிலுள்ளது திருமுருகன்பூண்டி. இங்குள்ள சிவனை முருகன் வணங்கியதால் ‘திருமுருகநாதர்’ என அழைக்கின்றனர். ஒரு சமயம் சுந்தரர், தனது நண்பர் சேரமானிடம் பரிசுகளைப் பெற்று இத்தலம் வழியாகத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, சிவன் தனது பூதகணங்களை அனுப்பி அவர் வைத்திருந்த பொருட்களைக் கவரும்படி செய்தார். கலங்கிய சுந்தரர் அங்கிருந்த விநாயகரிடம் முறையிட்டார். அவர் தனது தந்தைதான் அவரது பொருட்களைத் திருடச் செய்தார் என்று கூறி, அவர் மறைந்திருந்த இத்தலத்தையும் காட்டினார்.

இங்கு வந்த சுந்தரர், தன் பொருளைக் கவர்ந்த சிவனைத் திட்டி பதிகம் பாடி தனது பொருட்களை மீட்டார். பொருட்களைப் பறிகொடுத்தது, அதனை மீட்க சிவனிடம் முறையிட்டது, பொருட்களை மீட்டதும் மகிழ்ந்தது என மூன்று விதமான முகத் தோற்றங்களுடன் பொருட்களை
சுந்தரர் காட்சி தருகிறார்.

சிவனைக் காட்டிக் கொடுத்த நந்தி


சிவனுக்குக் காவலாக இருக்கும் நந்தி தேவரே அவரைக் காட்டிக் கொடுத்த தலம் பொள்ளாச்சி அருகிலுள்ள பெரிய களந்தையில் உள்ளது. தினமும் இங்குள்ள சிவனைத் துதித்துப் படிக்காசு புலவர் என்பவர் பாடுவார். அவரது பாட்டிற்குப் பரிசாக சிவன் ஒரு படி நிறைய காசு கொடுப்பார். ஒரு சமயம் அவர் பாடி முடித்தபோது, சிவன் அங்கில்லை. தன்னிடம் சிவன் விளையாடுகிறார் என்றுணர்ந்த புலவர், அங்கிருந்த நந்தியிடம், ‘சிவன் எங்கே?’ என்று கேட்டார்.

மனம் இரங்கிய நந்தி சுவாமி இருக்கும் திசையை நோக்கித் தனது தலையைத் திருப்பிக் காட்டிக் கொடுத்ததாம். எனவே இங்குள்ள நந்தி ‘காட்டிக் கொடுத்த நந்தி’ எனப்படுகிறது. இங்குள்ள பெரிய நாயகி அம்பாள், ரிஷபத்தின் மீது அமர்ந்தகோலத்தில் இருக்கிறாள். சிவனைக் காட்டிக் கொடுத்ததால், நந்தியை அம்பாள் தனது கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வந்து அதன் மீதுஅமர்ந்திருக்கிறாள் என்கிறார்கள்.

தொகுப்பு: கோட்டாறு ஆ.கோலப்பன்

Tags :
× RELATED சுந்தர வேடம்