×

திருமண தோஷம் நீக்கும் கூனிச்சம்பட்டு திரவுபதியம்மன்

புதுச்சேரி மாநிலம் திருக்கனூர் அருகே உள்ள கூனிச்சம்பட்டு கிராமத்தை குயில் கூவி துயில் எழுப்பும் கூனிச்சம்பட்டு என்று பாவேந்தர் பாரதிதாசன் பாடியுள்ளார். இங்கு காமாட்சி சமேத பூதநாதீஸ்வரர் கோயிலில் வலபுறத்தில் திரவுபதியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும்.

தல வரலாறு:

செஞ்சியில் உள்ள திரவுபதி அம்மன் கோயில் திருவிழாவில் கூனிச்சம்பட்டை சேர்ந்த ஒரு பெரியவர் மகாபாரத சொற்பொழிவு நிகழ்த்த சென்றுள்ளார். கோயிலில் அவர் படுத்து உறங்கியபோது, ஒரு பெண் தோற்றத்தில் வந்தவர் அவரை எழுப்பி நான் இக்கோயிலின் அம்மன், இங்கு இருக்க பிடிக்கவில்லை, என்னை உங்களது ஊருக்கு அழைத்து செல்லுங்கள் என்று கூறியுள்ளார். இதையடுத்து அந்த பெரியவர் ஊரில் வந்து சொன்னபோது ஊர் மக்கள் கேலி பேசி உள்ளனர். மீண்டும் ஒருநாள் அம்மன் அவரிடம் என்னை அழைத்துச்செல் என்று கூறியதாம்.

பின்னர் அம்மன் சிலையை தூக்கி கொண்டு பெரியவர் செல்லும்போது, அவ்வூரை சேர்ந்தவர்கள் குதிரையில் துரத்தி வந்துள்ளனர். இதனை அவர் அம்மனிடம் தெரிவித்துள்ளார். உடனே சங்கராபரணி ஆற்றில் ஓடும் தண்ணீரில் என்னை வைத்துவிடு என்று கூறியதால் அவ்வாறே அவரும் செய்துள்ளார். பின்னர், ஆற்றின் நடுவே இருந்த மலையில் அம்மனும், அவரும் ஒதுங்கியுள்ளனர். அங்கு அம்மன் சிலை குழந்தையாக மாறி விடுகிறது. ஆற்றில் இருந்து கொக்குகள் அம்மனையும், அந்த நபரையும் சூழ்ந்து கொண்டன.

செஞ்சியிலிருந்து குதிரையில் துரத்தி வந்தவர்கள் மலையில் யாரும் இல்லாததால் திரும்பி சென்றனர். அதன் பிறகு, அந்த நபரிடம் நீங்கள் உங்க ஊரில் சொல்லி, காப்பு கட்டி, பொங்கல் வைத்து என்னை அழைத்து செல்லுங்கள். உங்களது ஊரை நான் செழிப்பாக வைத்து கொள்கிறேன் என அம்மன் கூறியுள்ளது. அவரும் ஊர் பெரியவர்களிடம் கூறி காப்பு கட்டி, பொங்கல் வைத்து அம்மனை வைத்து சென்றனர். தொடர்ந்து, அங்கு அம்மனுக்கு கோயில் அமைத்து வழிபட்டு வருகின்றனர்.

இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் 18 நாட்கள் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் 17வது நாள் தேரோட்டமும், 18ம் நாள் தீ மிதி திருவிழாவும் நடக்கிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருளை பெறுகின்றனர். மேலும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், திருமண தோஷம் நீங்கவும், நீண்டநாள் நோய் தீரவும் இங்கு வந்து பக்தியுடன் அம்மனை வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம்.

செல்வது எப்படி?

புதுச்சேரி பேருந்து நிலைத்திலிருந்து 26 கி.மீ தொலையில் இக்கோயில் உள்ளது. புதுவையிலிருந்து செட்டிப்பட்டு செல்லும் பேருந்தில் ஏறினால் கூனிச்சம்பட்டில் இறங்கி, அங்கிருந்து சிறிது தூரம் நடந்து சென்றால் இத்திருத்தலத்தை
அடையலாம்.

முத்தால் ராவுத்தர் வழிபாடு:

இக்கோயிலில் முத்தால் ராவுத்தர் என்ற முஸ்லீம் பெரியவர் சிலை இருக்கிறது. முதலில் அவரை வணங்கிவிட்டு, அதன் பிறகே திரவுபதி அம்மனை பக்தர்கள் வணங்கும் பழக்கம் இருந்து வருகிறது. மேலும் துர்க்கை அம்மன், விநாயகர், செங்கேணி மாரியம்மன், புற்று மாரியம்மன், சந்திர மவுலிஸ்வரர், ஐயப்பன், முருகன் மற்றும் 63 நாயன்மார்கள், சனீஸ்வர பகவான், தட்சணாமூர்த்தி உள்ளிட்ட சன்னதிகளும் உள்ளன.

Tags : Wedding ceremonies ,
× RELATED கட்டுப்பாடுகளை மீறும் திருமண...