×

எமன் பாச கயிற்றை வீசிய சிவாலயம்

குமரி மாவட்டம் கல்குளம் வட்டம் மேலாங்கோட்டில் அமைந்து இருக்கிறது காலகாலர் சிவன் கோயில். பிரசித்தி பெற்ற சிவாலய ஓட்ட கோயில்களில் 8வது கோயில் ஆகும். நாகர்கோவில்-திருவனந்தபுரம் சாலையில் இருக்கும் குமாரகோயில் ஊருக்கு செல்லும் வழிப்பாதையில் 2 கிலோ மீட்டர் தொலைவில் மேலாங்கோடு அமைந்துள்ளது. அக்கா, தங்கை என இரண்டு இசக்கிகளின் கோயில்கள் இங்கே உள்ளன. அக்கா கோயிலின் அருகே தான் சிவன் கோயில் அமைந்துள்ளது. மேலாங்கோடு என்ற பெயர் இரு இசக்கிகளுடன் தொடர்பு உடையது ஆகும். இசக்கி கோயிலின் அடையாளம் கேட்டு சிவன் கோயிலுக்கு செல்லலாம். இந்த சிவன் கோயில் மார்க்கண்டேயன் கதையுடன் இணைத்து பேசப்படுகிறது. மிருகண்ட முனிவருக்கு குழந்தை இல்லை. இதனால் அவர் சிவனிடம் தவமிருந்தார். சிவன் 16 வயது மட்டுமே வாழும் அறிவுள்ள, பக்தி உள்ள ஒரு ஆண் வேண்டுமா? அல்லது அறிவில்லாத பல குழந்தைகள் வேண்டுமா என கேட்டார். மிருகண்டர் ஒரு குழந்தை போதுமென்று கூறினார்.

குழந்தையும் பிறந்தது. மார்க்கண்டேயன் என்று பெயர் வைத்தார். மார்க்கண்டேயனுக்கு 16 வயது ஆனது. எமன் அவனை நெருங்கிய போது சிவன் கோயிலுக்குள் நுழைந்து சிவலிங்கத்தை பிடித்துக் கொண்டார். சிவன் சூலத்தால் எமனை குத்தினார். மார்க்கண்டேயன் பிழைத்தான். எமன் சிறு பாச கயிற்றை வீசினான். லிங்கம் சரிந்தது. இதனால் இந்த சிவன் காலனின் காலன் என அழைக்கப்பட்டார். இந்த கோயிலில் மேற்கு திசையில் தோரண வாயில் உண்டு. கிழக்கு வெளிப்பிரகார வாசலில் பலி பீடம் உள்ளது.இதையடுத்து இருக்கும் சிறிய முன் மண்டபம் கல்லால் ஆனது. ஸ்ரீகோயில் திறந்த வெளிகள் பிரகாரங்களையும், சுற்று மண்டபத்தையும் கொண்டது. உட்பிரகாரத்தின் தென் கிழக்கில் மடப்பள்ளி, ஸ்ரீ கோயில் நந்தி மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என்னும் மூன்று பகுப்புகளை கொண்டது. கருவறை மேல் விமானம் கொண்டதாகும். இந்த கோயில் உட் கோயில் கட்டுமானப்படி கிபி 15, 16ம் நூற்றாண்டினது எனலாம். சுற்று மண்டபம் 18ம் நூற்றாண்டு சார்ந்ததாகும். கருவறை மூலவர் காலகாலர் எனப்படுகிறார். லிங்க வடிவம் 60 சென்டி மீட்டர் உயரம் ஆகும். லிங்கத்தின் உச்சிப்பகுதி சற்று குவிந்த வடிவம் ஆகும். உட்பிரகாரத்தின் தென் மேற்கில் விநாயகர் இருக்கிறார். மேலும் நாகர், பூதத்தான் உருவங்கள் வெளிப்பிரகாரத்தில் உள்ளன. இந்த கோயிலுக்குரிய ஒரே விழா மகா சிவராத்திரி ஆகும். இங்கு நேர்ச்சைக்காக வெடி போடுவதாக வேண்டி கொள்கிறார்கள்.

Tags : Shiva Temple ,
× RELATED 16ம் நூற்றாண்டை சேர்ந்த சிவகாசி சிவன்...