×

இருப்பிடத்தை தானே கூறிய இருக்கன்குடி மாரியம்மன்

இருக்கன்குடி, விருதுநகர்

இருக்கன்குடி கிராமத்தில் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் சிலர் மாட்டு சாணம் எடுப்பதற்காக காட்டுப்பகுதிக்கு சென்றனர். அப்போது பெண்களுடன் சென்ற 12 வயது சிறுமி சாணம் அள்ளிய கூடையை தூக்கிய போது அவளால் அதை நகர்த்த முடியவில்லை. சிறுமிக்கு திடீரென அருள் வந்து ‘‘நான் மாரி. இந்த இடத்தில்தான் இருக்கிறேன். என்னை தினமும் பூஜை செய்து வணங்குங்கள்,’’ என்று அருள் வாக்கு கூறினாள். சிறுமியின் வாக்குப்படி அங்கு கோயில் எழுப்பப்பட்டதாக வரலாறு கூறுகிறது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு போன்ற நாட்களில் தவறாது வந்து அம்மனை தரிசனம் செய்கின்றனர்.

 கோயில் தினமும் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் அம்மனுக்கு அக்னிசட்டி, ஆயிரம் கண் பானை, கயிறுகுத்து, மாவிளக்கு உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்துகின்றனர். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கோயிலின் வடக்கு பகுதியில் விநாயகரும், சங்கரேஸ்வரியும் சேர்ந்து இருக்கும் கோயில் மரத்தில் தாங்கள் உடுத்தி வந்த சேலையின் ஒரு பகுதியை கிழித்து தொட்டில் கட்டி வணங்குகின்றனர்.

திருமணம் நிறைவேறாமல் காலதாமதமாகும் பெண்கள் கோயிலின் கிழக்கு பகுதியில் உள்ள அரச மரத்தில் மஞ்சள் கயிறு கட்டி வழிபாடு செய்கின்றனர். கால்வலி வந்து எந்த மருந்தாலும் சரியாகாமல், இங்கு வந்து நேர்ந்துகொண்டவர்கள், குணமானபின் தம் நேர்த்திக் கடனாக, மரத்தால் ஆன கால்களை சமர்ப்பிக்கிறார்கள். அதேபோல அம்மை நோய்வந்து குணமானவர்கள், தீச்சட்டி, ஆயிரங்கண் பானை ஏந்துதல், கயிறு குத்துதல் என்று தம் நன்றிக்கடனை நிறைவேற்றுகிறார்கள்.  கண்களில் உபாதை வந்து நீங்கியவர்கள் கண்மலரை அம்மனுக்கு செலுத்துகின்றனர்.தை, பங்குனி, ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமைகளில் திருவிழாக்கள் நடக்கின்றன.

ஆடி கடைசி வெள்ளி திருவிழா 3 நாட்கள் நடைபெறும். அப்போது இருக்கன்குடி கிராமத்தில் உள்ள மூலவர் கோயிலுக்கு அம்மன் அர்ச்சுனா நதி வழியாக வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். கோயில் நிர்வாகம் சார்பில் சக்தி இல்லம், பராசக்தி இல்லம், மீனாட்சி, தேவி, மாரி ஆகிய தங்கும் விடுதிகளும், சாத்தூர் நகரில் சுற்றுலாத்துறை ஓட்டல்களும் உள்ளன.மதுரையில் இருந்து திருமங்கலம், விருது நகர் சாத்தூர் வழியாக இருக்கன்குடிக்குச் செல்லலாம். அரசுப் பேருந்துகள் சாத்தூரில் இருந்து அதிகாலை 5 மணி முதல் இரவு 10.30 மணி வரை இயக்கப்படுகிறது.விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் இருந்து 8 கி.மீ. தூரத்தில் இருக்கன்குடி கிராமத்தில் வைப்பாறு மற்றும் அர்ச்சுனா நதிகள் சந்திக்கும் இடத்தில் இருக்கன்குடி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது.

Tags : Mariamman ,place ,
× RELATED நாட்டார்மங்கலத்தில் மாரியம்மன் வீதி உலா