×

வேண்டுபவர்களுக்கு ஐஸ்வர்யம் அருளும் அழகாபுத்தூர் படிக்காசுநாதர்

தஞ்சை மாவட்டம் அழகாபுத்தூரில் அமைந்துள்ளது படிக்காசுநாதர் திருக்கோயில். மூலவர்   படிக்காசுநாதர் ( சொர்ணபுரீஸ்வரர்), உற்சவர்      சோமாஸ்கந்தர். தாயார்  அழகம்மை. இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 129வது தேவாரத்தலமாகும். பிரம்மா கைலாயத்திற்கு சென்றபோது, அங்கிருந்த முருகனை அவர் கவனிக்காமல் சென்றார். உடனே பிரம்மாவை அழைத்த முருகன், நீங்கள் யார்  எனக் கேட்டார். பிரம்மா அவரிடம் தன்னை அறிமுகப்படுத்தியதோடு, தானே உலகை படைப்பவன் என்று கர்வத்துடன் கூறினார். முருகன் அவரிடம் எந்த மந்திரத்தின் அடிப்படையில் படைக்கிறீர்கள் என கேட்டார். ஓம்  என்னும் பிரணவ மந்திரத்தின் அடிப்படையில் தான்  என்றார் பிரம்மா. முருகன்  அம்மந்திரத்திற்கு விளக்கம் கேட்டார். அவருக்கு தெரியவில்லை. எனவே அவரது தலையில் குட்டி பதவியை பறித்தார்.

இதையறிந்த சிவன் முருகனிடம், பிரம்மாவிடம் பதவியை கொடுக்கும்படி கூறினார். முருகன் கேட்கவில்லை. சிவன், பிரணவத்தின் விளக்கம் சொல்லும்படி முருகனிடம் கேட்கவே, அவரும் விளக்கினார். பின்பு, சிவன் அவரை சமாதானம் செய்யவே, மீண்டும் பிரம்மாவிடம் பதவியை ஒப்படைத்தார்.பிரணவத்தின் பொருள் தெரியாவிட்டாலும் வயதில் பெரியவரான பிரம்மாவை தண்டித்ததற்கு வருந்தினார் முருகன். எனவே தவறுக்கு மன்னிப்பு வேண்டி இத்தலத்தில் தவமிருந்தார். சிவன், அவருக்கு காட்சி தந்து  தவறை யார் வேண்டுமானாலும் சுட்டிக்காட்டலாம், தவறில்லை. ஆனால், தண்டிக்கத்தான் கூடாது என்று அறிவுரை கூறினார். இவரே இங்கு சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார்.படிக்காசு பூஜை:  புகழ்த்துணை நாயனார் பிறந்து, வளர்ந்து, முக்தியடைந்த தலம் இது. தற்போதும் இவரது தலைமுறையினரே இங்கு பூஜை செய்கின்றனர். படிக்காசுநாதர் சன்னதியில் இரண்டு காசுகளை வைத்து வேண்டிக்கொண்டு, ஒன்றை மட்டும் வீட்டிற்கு எடுத்துச் சென்று பூஜிக்கின்றனர். இதனால், குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை.

திருவிழா  மாசிமகம், மகாசிவராத்திரி, கிருத்திகை, ஆவணி ஆயில்யம் நட்சத்திரத்தில் நாயனார் குருபூஜை ஆகிய திருவிழாக்கள் நடைபெறுகிறது.     இத்தலத்து படிக்காசுநாதனை வணங்கினால் தவறை தட்டிக்கேட்கும் மனப்பான்மையும், துன்பங்களைத் தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவமும் உண்டாகும் என்பது நம்பிக்கை.

சங்கு, சக்கர முருகன்

அசுரர்களின் தொல்லை அதிகரிக்கவே அவர்களை அழிக்க சிவன் இங்கிருந்த முருகனை அசுர வதத்திற்கு கிளம்பும்படி கூறவே, முருகனும் கிளம்பினார். அப்போது சிவனும், தேவர்களும் அவருக்கு பல ஆயுதங்களை கொடுத்தனர். அப்போது திருமால் தனது சங்கு, சக்கரத்தை கொடுத்தார். ஆயுதங்களுடன் சென்ற முருகன், அசுரர்களை சம்ஹாரம் செய்தார். இந்த நிகழ்வின் அடிப்படையில் இங்குள்ள முருகன், கைகளில் கேடயம், வில், அம்பு, சாட்டை, கத்தி, சூலாயுதம், வஜ்ரம் மற்றும் திருமாலின் ஆயுதங்களான சங்கு, சக்கரத்துடன் காட்சி தருகிறார். சங்கு, சக்கரமே இவரது பிரதான ஆயுதமாக இருக்கிறது.

இந்திர மயில் மீது அமர்ந்த கோலத்தில் இருக்கும் முருகர்  கல்யாணசுந்தர சண்முகசுப்பிரமணியர் என்று அழைக்கப்படுகிறார். அருகில் வள்ளி, தெய்வானையும் இருக்கின்றனர். இவரது திருவாச்சி ஓம்  வடிவில் அமைக்கப்பட்டிருப்பது விசேஷம். அருகில் மகாலட்சுமி சன்னதி இருக்கிறது. திருமாலின் ஆயுதங்களுடன் முருகனையும், அருகில் மகாலட்சுமியையும் ஒரே சமயத்தில் தரிசிப்பது இக்கோயிலின் தனிச்சிறப்பாகும்.

Tags : Aishwarya Arumal ,invigator ,
× RELATED தெளிவு பெறுவோம்