×

திருப்பனந்தாள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த பருத்தி ஏலத்தில் நல்ல விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி

திருவிடைமருதுார் : திருவிடைமருதுார் அருகே திருப்பனந்தாள் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று 4வது வாரமாக நடந்த பருத்தி மறைமுக ஏலத்தில் நல்ல விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.திருவிடைமருதூர் வட்டாரத்தில் திருமங்கலகுடி, இடையாநல்லுார், சூரியமூலை, திருலோக்கி, முட்டக்குடி, சிற்றிடையாநல்லூர், மணிக்குடி, கட்டாநகரம், அணைக்கரை, தத்துவாஞ்சேரி, சாத்தனூர், பட்டம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிற்கு இந்த ஆண்டு பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.திருவிடைமருதூர் தாலுக்காவிற்கு திருப்பனந்தாளில் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. இங்கு போதிய இடவசதி இல்லாத காரணத்தினால் தற்காலிகமாக கட்டாநகரம் கிராமத்தில் வாடகை இடத்தில் தகர கூரை வேயப்பட்டு ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்படுகிறது.கடந்த ஜூன் 9ம் தேதி முதல் பருத்தி கொள்முதல் தொடங்கப்பட்டு 3 வாரத்தில் ஆயிரத்து 200 குவிண்டால் விவசாயிகளிடம் இருந்து வாங்கப்பட்டது. கடந்த ஜூன் 30ம் தேதி 4வது வாரத்தில் நடக்க வேண்டிய மறைமுக ஏலம் நடக்கவில்லை.இந்நிலையில் நேற்று 4வது வாரமாக நடந்த மறைமுக ஏலத்திற்கு ஆயிரம் குவிண்டாலுக்கும் அதிகமான பருத்தி மூட்டைகளை கொண்டு வந்து விவசாயிகள் சேர்த்துள்ளனர். இதனால் குடோனில் இருப்பு வைக்க முடியாமல் வெளியிலும் மூட்டைகளை அடுக்கி வைத்து விவசாயிகள் காத்திருந்தனர்.போதிய இடவசதி இல்லாத காரணத்தினால்,மழையில் நனையாமல் பாதுகாக்கும் வகையில் .இனி அடுத்த அடுத்த வாரங்களில் பருத்தியை கொண்டு வரும்படி விவசாயிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.கடந்த ஜூன் 23ம் தேதி நடந்த ஏலத்தின்போது குறைந்தபட்சம் ரூ.8 ஆயிரத்து 509க்கும், சராசரியாக ரூ.10 ஆயிரத்து 199, அதிகபட்சமாக ரூ.11 ஆயிரத்து 799 விலை நிர்ணயம் செய்யப்பட்டது.இந்நிலையில் நேற்று நடந்த மறைமுக ஏலத்தின்போது பண்ருட்டி, செம்பனார்கோவில், திருப்பூர், கும்பகோணம், தேனி பகுதிகளை சேர்ந்த 7 வியாபாரிகள் பருத்தி பார்வையிட்டனர்.பின்னர் நடந்த டெண்டர் மூலம் குறைந்தபட்ச விலையாக ரூ.8 ஆயிரத்து 889, சராசரியாக ரூ.9 ஆயிரத்து 500, அதிகபட்சமாக ரூ.10 ஆயிரத்து 279 என விலை நிர்ணயம் செய்யப்பட்டது.இதன் மூலம் விவசாயிகளிடம் இருந்து ரூ.1 கோடி மதிப்பிலான ஆயிரத்து 59 குவிண்டால் பருத்தி கொள்முதல் செய்யப்பட்டது. கடந்த வாரத்தைவிட குறைந்தபட்ச மற்றும் சராசரி விலை உயர்வாக இருந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்….

The post திருப்பனந்தாள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த பருத்தி ஏலத்தில் நல்ல விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Tiruppanandal Regulation Hall ,Tiruvidaimaruduar ,Tiruppanandal Agricultural Regulation Hall ,Dinakaran ,
× RELATED சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலை...