×

சிவனாகக் காட்சியளிக்கும் சௌரிராஜர்

* திருக்கண்ணபுரம் சௌரிராஜப்பெருமாள் - மும்மூர்த்தி தரிசனம் - 17:05:2019

1. மகாபாரதத்தில் ஒரு சம்பவம். அர்ஜுனன் தினமும் சிவபூஜை செய்து வந்தான். ஆனால், அவனது மகனான அபிமன்யு இறந்தநாளில் அவனால்  சிவபூஜை செய்ய இயலவில்லை. அதை எண்ணி அர்ஜுனன் வருந்திக் கொண்டிருந்த போது, கண்ணன் அவன் முன்னே தோன்றினான்.  சிவபெருமானுக்குச் சமர்ப்பிப்பதற்காக அவன் வைத்திருந்த பூக்களைத் தனது திருவடிகளில் சமர்ப்பிக்கச் சொன்னான். அர்ஜுனனும் அவ்வாறே  செய்தான். கண்ணன் திருவடிகளில் அர்ஜுனன் சமர்ப்பித்த அதே பூக்களை அணிந்த படி சிவபெருமான் அவனுக்குக் கனவில் காட்சி அளித்ததாக  வரலாறு. இதை நம்மாழ்வாரும்,

“தீர்த்தன் உலகளந்த சேவடிமேல் பூந்தாமம்
சேர்த்தி அவையே சிவன்முடிமேல் தான்கண்டு
பார்த்தன் தெளிந்தொழிந்த பைந்துழாயான் பெருமை
பேர்த்தும் ஒருவரால் பேசக் கிடந்ததே!” என்ற பாசுரத்தில் பாடியுள்ளார்.

2. உபரிசிரவஸ் என்ற மன்னன் வானில் தனது தேரில் பறந்து சென்று கொண்டிருந்தான். அப்போது அவன் சிவபூஜை செய்வதற்கான நேரம் வந்து  விட்டது. அருகில் ஏதேனும் சிவன் கோயில் இருந்தால் அங்கு சென்று சிவனைப் பூஜிக்கலாம் என்று கருதி அவன் தேடினான். ஆனால் அருகில் சிவன்  கோயில் எதுவும் தென்படவில்லை. கிழக்குக் கடற்கரைக் கரையிலே ஒரு பெருமாள் கோயிலைக் கண்டான். அதைச் சிவன் கோயில் என்று கருதி  அவன் உள்ளே சென்று பூஜைகள் செய்தான்.

பூஜைகள் செய்து விட்டுக் கோயிலில் இருந்து உபரிசிரவஸ் மன்னன் மகிழ்ச்சியுடன் வெளிவருவதைக் கண்ட மக்கள், “நீங்கள் சிவ பக்தராயிற்றே!  பெருமாள் கோயிலில் இருந்து வெளியே வருகிறீரே!” என்று வியப்புடன் அவனிடம் கேட்டார்கள். “இது சிவன் கோயில் தான். உள்ளே நான் சிவனைத்  தான் தரிசித்தேன்!” என்றான் உபரிசிரவஸ். உள்ளே ஊர் மக்கள் சென்று பார்த்த போது, வெள்ளை ஆடை உடுத்தியபடி பரமசிவனைப் போல் பெருமாள்  காட்சியளித்தார்.

இந்த இரண்டு வரலாறுகளையும் நினைவூட்டும் வகையில், நன்னிலம் - நாகப்பட்டினம் சாலையிலுள்ள திருக்கண்ணபுரத்தில் சௌரிராஜப்  பெருமாளுக்கு வெள்ளைச்சாத்தி உற்சவம் நடைபெறுகிறது. மூன்றே முக்கால் நாழிகை நடைபெறும் அந்த உற்சவத்தில் வெள்ளை ஆடை உடுத்திப்  பரமசிவனாகப் பெருமாள் காட்சியளிப்பார். வைகாசி மாத பிரம்மோற்சவத்தின் ஏழாம் திருநாளன்று இந்த வெள்ளைச் சாத்தி உற்சவம் நடைபெறுகிறது.  மாலை சூர்ணாபிஷேகத்தின் போது பிரம்மாவாகவும், இரவு புறப்பாட்டில் திருமாலாகவும், மறுநாள் அதிகாலையில் சிவபெருமானாகவும் சௌரிராஜப்  பெருமாள் காட்சி தருவதால், இது மும்மூர்த்தி தரிசனம் என்றழைக்கப்படுகிறது.

இவ்வருடம் மே மாதம் 10ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் பிரம்மோற்சவத்தின் 7ம் திருநாளாகிய மே 16ம் தேதி மாலையில் பெருமாளுக்குச்  சூர்ணாபிஷேகம் நடைபெறும். அந்தச் சமயத்தில், தர்ப்ப நாளங்களால் சூழப்பட்டுத் தாமரைப் பூவில் அமரும் பிரம்மாவைப் போல் சௌரிராஜப் பெருமாள் காட்சி தருவார்.  அன்று இரவு பெரிய திருவாட்சியில் புறப்பாடு கண்டருளுகையில், திருமாலாகக் காட்சி தருவார்.

அதற்கு மறுநாள், மே 17-ம் தேதி அதிகாலை 4 மணியளவில், நெற்றியில் சந்தனம் குங்குமம் அணிந்தபடி, வெள்ளை ஆடை உடுத்திக் கொண்டு,  சாளக்கிராம மாலைகள் (அவை ருத்ராட்ச மாலைகளைப் போலவே இருக்கும்) அணிந்து கொண்டு பரமசிவனைப் போலக் காட்சியளிப்பார். அந்நியப்  படையெடுப்புக் காலத்தில், திருச்சிராப்பள்ளிக்கு அருகிலுள்ள திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் சந்நதியில் சௌரிராஜப் பெருமாளைச்  சிவனடியார்கள் பாதுகாத்ததாகச் சொல்லப்படுகிறது. அந்தச் சிவனடியார்களின் வேண்டுகோளுக்கு இணங்க, பெருமாள் ஒவ்வொரு வருடமும் மூன்றே  முக்கால் நாழிகை சிவனாகக் காட்சியளிப்பதாகவும் கூறுகிறார்கள்.

காரணம் எதுவாயினும்,

“விஷ்ணு: ஆத்மா பகவத: பவஸ்ய அமித தேஜஸ:”
என்ற மகாபாரத ஸ்லோகத்தின் படியும்,
“முனியே! நான்முகனே! முக்கண்ணப்பா!”
“நளிர்மதிச் சடையன் என்கோ? நான்முகக் கடவுள் என்கோ?”
என்று நம்மாழ்வார் பாடியபடியும், அனைத்துலகையும் உடலாக உடைய திருமால், பிரம்மாவையும் சிவனையும் கூட தனக்கு சரீரமாகக் கொண்டு  உள்ளே அந்தர்யாமியாக உறைகிறார் என்ற வேதாந்த தத்துவத்தை விளக்கும் இந்த உற்சவத்தைக் கண்டு களித்து இறையருள் பெறுவோமாக!

- குடந்தை உ.வே. வெங்கடேஷ்

Tags : Chauriarajar ,Shiva ,
× RELATED முருகப் பெருமான் சிவபூஜை செய்து கொண்டிருக்கும் தலங்கள்