×

வாரணவாசி ஊராட்சியில் அகற்றியதற்கு பதிலாக புதிதாக சமுதாயக்கூடம் கட்டித்தர வேண்டும்: கிராமமக்கள் கோரிக்கை

வாலாஜாபாத்: வாரணவாசி ஊராட்சியில் அகற்றப்பட்ட சமுதாய கூடத்திற்கு பதிலாக புதிதாக கட்டித்தர பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்தில் வாரணவாசி ஊராட்சி உள்ளது. இங்கு, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் நடுநிலைப்பள்ளி, ஆரம்பப்பள்ளி, ஆரம்ப சுதாகர் சுகாதார நிலையம், கிராம நிர்வாக அலுவலகம், தொழிற்சாலைகள் என தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் செயல்படுகின்றன. மேலும், இந்த வாரணவாசி சுற்றிலும்  அகரம், தாழையம்பட்டு, வாரணவாசி, தொள்ளாழி உள்பட 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இங்கு உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு வந்துதான் இங்கிருந்து வாலாஜாபாத், காஞ்சிபுரம், ஒரகடம், தாம்பரம், வண்டலூர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு நகர் பகுதிகளுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் தொழிற்சாலை மற்றும் அரசு பணிகளுக்காக சென்று வருகின்றனர். மாணவ – மாணவிகளும் காஞ்சிபுரம், ஓரகடம், தாம்பரம், படப்பை உள்பட பல்வேறு நகர்புற பகுதிகளில் செயல்படும் பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், எப்பொழுதுமே மக்கள் நடமாட்டம் நிறைந்த இந்த வாரணவாசி ஊராட்சியில் சமுதாயக்கூடம் ஒன்று இருந்தது. இதில், சுற்றுவட்டார கிராம மக்கள் நிச்சயதார்த்தம், மஞ்சள் நீராட்டு விழா, பிறந்தநாள் விழா, காதணி விழா, திருமண வரவேற்பு நிகழ்ச்சி என பல்வேறு நிகழ்ச்சிகளை ஏழை, எளிய மக்கள் நடத்தி வந்தனர். தற்போது, ஆறு வழிச்சாலையாக மாற்றப்பட்டநிலையில் இந்த சமுதாயக்கூடம் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் இடிக்கப்பட்டது. இடிக்கப்பட்ட நாளிலிருந்து இதுநாள் வரை மாற்று கட்டிடம் கட்டித் தர எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என சமூக ஆர்வலர்களும், கிராமமக்களும் குற்றம் சாட்டுகின்றனர்.  இது குறித்து வாரணவாசி பொதுமக்கள் கூறுகையில், ‘வாரணவாசி மற்றும் அதனை சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமில் உள்ளவர்கள் ஏழை, எளியவர்கள் சுப நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். எனில் தனியார் திருமண மண்டபங்களை  நாடினால் பல ஆயிரங்கள் செலவு செய்யும் நிலையில் உள்ளன. இதனை கருத்தில் கொண்டு வாரணாசி ஊராட்சியில் செயல்பட்டு வந்த சமுதாயக்கூடத்தை பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தோம். இதில், சிறு சிறு சுப நிகழ்ச்சிகளை நடத்தி வந்தநிலையில் தற்போது திடீரென மாநில நெடுஞ்சாலை துறையினர் சமுதாய கூட்டத்தை இடித்தனர். மேலும் சமுதாயக்கூடத்தை தமிழக அரசு கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பலமுறை அரசு அதிகாரிகள் கலந்து கொள்ளும் கூட்டங்களிலும் வலியுறுத்தி உள்ளோம். ஆனால், மாவட்ட அதிகாரிகளும் சமுதாயக்கூடத்தை கட்டி தர நடவடிக்கை மேற்கொள்வதில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் நிதி ஒதுக்கீடு செய்து இப்பகுதியில் அதிநவீன சமுதாயக்கூடத்தை கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர். இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் பிரேமா மோகனசுந்தரம் கூறுகையில், ‘சமுதாயக்கூடம் கட்டித் தர வேண்டும் என வலியுறுத்தி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்’ என்றார்….

The post வாரணவாசி ஊராட்சியில் அகற்றியதற்கு பதிலாக புதிதாக சமுதாயக்கூடம் கட்டித்தர வேண்டும்: கிராமமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Varanavasi Purachi ,Valajabad ,Varanavasi ,Kanchipuram District, Wallajabad ,Varanavasi Uradashi ,
× RELATED தேவரியம்பாக்கம் ஊராட்சியில் பாலர் சபை கூட்டம்