×

வன உயிரின சட்டத்தை மீறி கிளி ஜோசியத்தில் ஈடுபட்ட 7 பேரிடம் அபராதம் வசூல்

மாமல்லபுரம்: வன உயிரின சட்டத்தை மீறி பச்சை கிளிகளை மரப்பெட்டி கூண்டுகளில் அடைத்து சுற்றுலா பயணி, பொதுமக்களிடம் கிளி ஜோசியத்தில் ஈடுபட்ட 7 பேர் பிடித்து அவர்களிடம் வனச்சரக அலுவலர்கள்  அபராதம் வசூலித்தனர். மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம் சாலை கடற்கரை செல்லும் சாலை, கோவளம் சாலை, வெண்ணெய் உருண்டை பாறை, அர்ச்சுணன் தபசு, ஐந்துரதம், கடற்கரை கோயில், கடற்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பச்சை கிளிகளை மரப்பெட்டிக்குள் அடைத்து வைத்து ஜோசியம் பார்க்கப்படுகிறது. மேலும், மாமல்லபுரம் அடுத்த எச்சூர், கடம்பாடி, திருப்போரூர் அடுத்த இள்ளலூர், சிறுதாவூர், மானாம்பதி உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள  காடுகளில் இருந்து பச்சை கிளிகள் பிடித்து வரப்படுகிறது. அது பறக்க முடியாமல் இருக்க அதன் இறக்கைகஙள வெட்டப்பட்டுகிறது.  பின்னர், மரப்பெட்டி கூண்டுகளில் அடைத்து வைத்து கிளிகளை ஜோசியக்காரர்கள் துன்புறுத்துவதாக செங்கல்பட்டு மாவட்ட வனத்துறைக்கு தொடர்ந்து புகார்கள் சென்றது. இதனை தொடர்ந்து, திருப்போரூர் வனச்சரக அலுவலர் கல்யாண் தலைமையில் வனவர்கள் பிரகாசம், சரவணகுமார், வனக்காப்பாளர் பெருமாள், வனக்காவலர் கணேஷ்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர்,  மாமல்லபுரத்தில் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கடற்கரை செல்லும் சாலை,  வெண்ணை உருண்டை பாறை, அர்ச்சுணன் தபசு உள்ளிட்ட இடங்களில் சாலையோரத்தில் 7 பேர் தனித் தனியாக பச்சை கிளிகளை மரப்பெட்டி கூண்டில் அடைத்து சுற்றுலா பயணிகள், பொதுமக்களிடம் கிளி ஜோசியத்தில் ஈடுபட்டது தெரிந்தது. இதையடுத்து, திருப்போரூர் வனத்துறையினர் 7 பேரை பிடித்து ஜீப்பில் ஏற்றி திருப்போரூர் வன அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து, அவர்களிடம் நடத்திய விசாரணையில் கிளி ஜோசியக்காரர்கள் சுப்பிரமணியன் (60), தங்கமாரி (50), வள்ளிநாயகம் (29), மாரியப்பன் (43), முப்பூடாதி (36), குமார் (40), பரமசிவன் (55) ஆகியோர் என தெரிய வந்தது. மேலும், 7 பேர் மீதும் வனத்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஒரு குறிப்பிட்ட தொகை அபராதமாக வசூலித்து பின்னர் விடுவிக்கப்பட்டனர். பிறகு கிளி ஜோசியக்காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 7 பச்சை கிளிகளை திருப்போரூர் அடுத்த இள்ளலூர் காட்டில் விட்டனர். …

The post வன உயிரின சட்டத்தை மீறி கிளி ஜோசியத்தில் ஈடுபட்ட 7 பேரிடம் அபராதம் வசூல் appeared first on Dinakaran.

Tags : Parrot Josium ,Mamallapuram ,Dinakaran ,
× RELATED மின்சாரம் பாய்ந்து மயில் உயிரிழப்பு