×

சரும நோய் போக்கும் பரஞ்சோதி ஈஸ்வரர்

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது தஞ்சாக்கூர். பண்டைய காலத்தில் ‘ஆதிவில்வவனம்’ என்று இந்த ஊர் அழைக்கப்பட்டுள்ளது. இங்கு தொன்மையான ஞானாம்பிகை சமேத பரஞ்சோதி ஈஸ்வரர் கோயில் உள்ளது. மூலவராக பரஞ்சோதி ஈஸ்வரர் என்று அழைக்கப்படும் சிவபெருமான் வீற்றிருக்கிறார். மூலவர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஞானாம்பிகை தாயாருக்கு தனி சன்னதி உள்ளது. கோயிலில் கொடிமரம், தீர்த்த குளம் உள்ளது.

தல வரலாறுஒரு முறை கைலாயத்தில் சிவபெருமானை சந்தித்த பிரம்மா, விஷ்ணு, இந்திரன் மற்றும் தேவர்கள் ‘இறைவா! தினமும் உங்களை நாங்கள் பூஜித்து வருகிறோம். எங்களுக்கு உங்களது எதார்த்த வடிவமான பரஞ்சோதி தரிசனத்தை காட்டியருள வேண்டும்’ என வேண்டினர். இதற்கு சிவபெருமான், ‘வில்வவனத்தில் நான் அரூபமாக உள்ளேன். நீங்கள் அங்கு சென்று பூஜித்தால், உங்களுக்கு பரஞ்சோதி தரிசனம் கிடைக்கும்’ என்றார். இதன்படி பிரம்மா, விஷ்ணு உள்ளிட்டோர் திருப்பாச்சேத்தி அருகே உள்ள வில்வவனத்திற்கு ெசன்றனர். அங்கிருந்த வில்வ மரத்தடியில் ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வணங்கினர். பின்னர் அந்த சிலைக்கு அபிஷேகமும், பூஜையும் செய்தனர். சிலை அருகில் புனித குளம் ஒன்றையும் உருவாக்கினர்.

பூஜையின்போது, அவர்களது பக்தியை பரிசோதிக்க எண்ணிய சிவபெருமான், முதலில் ஒரு தேவகன்னியையும், பின்னர் காளியம்மனையும் அனுப்பினார். ஆனால் பூஜை தடைபடாமல் நடந்தது. இதையடுத்து முதியவர் வேடத்தில் அங்கு சென்ற சிவபெருமான், பூஜை நடைபெறாமல் இருக்க இடையூறு செய்தார். இவற்றை கண்டு கொள்ளாத தேவர்கள் தொடர்ந்து பூஜையில் ஈடுபட்டனர். அவர்களது மனஉறுதியை கண்டு சிவபெருமான் மகிழ்ச்சியடைந்தார். பின்னர், அந்த தலத்தில் ஆவணி மாதம் சோமவாரத்தில் தேவர்கள் விரும்பியபடி பரஞ்சோதி தரிசனம் அருளினார். பரஞ்சோதி தரிசனத்தை காண்பதற்காக பார்வதி, லட்சுமி, சரஸ்வதி, விநாயகர், முருகன் ஆகியோரும் அங்கு வந்து வழிபாடு செய்தனர். அவர்களை தொடர்ந்து இந்திராணி, ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர், அகத்தியர், கவுதம முனிவர் ஆகியோரும் அங்கு வந்து தரிசனம் செய்தனர் என்பது புராணம்.

********
இங்கு மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை உள்ளிட்டவை விசேஷ தினங்களாகும்.புலமையில் சிறந்து விளங்க நினைப்பவர்கள், இங்கு வந்து வழிபாடு செய்கின்றனர். சரும நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இங்குள்ள புனித குளத்தில் நீராடி இறைவனை வழிபடுகின்றனர். இவ்வாறு வழிபட்டால், விரைவில் சரும நோய் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. வேண்டுதல் நிறைவேறியவர்கள் மூலவர், அம்மனுக்கு அபிஷேகம் செய்து புத்தாடை அணிவித்து வழிபடுகின்றனர். பொய்யா மொழிப்புலவர் தன் வறுமை நீங்க, இங்குள்ள மூலவரை வழிபட்டு புலமையிலும், பொருளாதாரத்திலும் மேன்மையடைந்தார் என்று பக்தர்களால் கூறப்படுகிறது.கோயில் நடை தினமும் காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை மணி 5 முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.


Tags : Paranjothi Ishwara ,
× RELATED தெளிவு பெறுவோம்