×

அரவின் மேல் ஆடும் அரன்

திருவாசி

திருப்பாச்சிலாச்சிராமம் (தற்போது திருவாசி என்று வழங்கப்படுகிறது. ஈசன் மாற்றுரைவரதீஸ்வரர். இறைவியின் பெயர் பாலாம்பிகை எனும் பாலசுந்தரி. இப்பகுதியை ஆண்டு வந்த கொல்லிமழவனின் மகளுக்கு முயலகன் (வலிப்பு நோய்) எனும் தீராத நோயிருந்தது. மன்னன் எவ்வளவோ வைத்தியம் செய்து பார்த்தும் மகளை குணப்படுத்த முடியவில்லை. எனவே, பெரியவர்களின் ஆலோசனைப்படி, பெருமான் அருள் புரியும் கோயிலில் அவளைக் கிடத்தி, அவள் பிணியை குணப்படுத்தும் பொறுப்பை பெருமானிடமே விட்டுவிட்டுச் சென்றான். அச்சமயத்தில் திருஞானசம்பந்தர் பல தலங்களை தரிசனம் செய்து கொண்டு மழவ நாட்டைச் சார்ந்த திருப்பாச்சிலாச்சிராமம் என்ற இத்தலத்திற்கு எழுந்தருளினார். இதையறிந்த மன்னன் அன்புடன் சம்பந்தரை வரவேற்றுத் தன் மகளின் நோயை நீக்கியருள வேண்டினான்.

அருள் உள்ளம் கொண்ட சம்பந்தர் சிவனை வேண்டி துணிவளர் திங்கள் துலங்கி விளங்க எனும் பதிகம் பாடி இறைவனை வணங்க நோய் நீங்கி மன்னன் மகள் குணமடைந்தாள். சிவபெருமான் அவளது நோயை ஒரு பாம்பாக மாற்றி, அதன் மீது நின்று ஆடினார். இதன் அடிப்படையில் இங்குள்ள நடராஜர் காலுக்கு கீழே முயலகன் உருவம் இல்லாமை அறியத்தக்கது. திருவடியின் கீழ் அதற்குப்பதில் ஒரு சர்ப்பத்தின் மீது நடனமாடுகின்றார். நரம்புத் தளர்ச்சி, வாதநோய், வலிப்பு நோய், சர்ப்ப தோஷம், மாதவிடாய் பிரச்னைகள் முதலியன இத்தல இறைவனை வழிபட குணமாகும். இவ்வாலயத்திலுள்ள ஆவுடையாப்பிள்ளை மண்டபத்தில் கொல்லி மழவன் மகளுக்கு சம்பந்தர் நோய் நீக்கிய வரலாற்றை விளக்கும் சிற்பங்கள் உள்ளன.

திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி நாயனார், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோரால் பாடப்பட்ட இத்தலத்தில் வைகாசி விசாகத்தில் திருத்தேர் உலா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. இங்கே சுவாமிக்கு தினசரி நான்கு கால வழிபாடுகள் நடைபெறுகின்றன. தொடர்ந்து 48 நாட்கள் இத்தலத்திலுள்ள நடராஜருக்கு அர்ச்சனை செய்து வந்தால் தீராத நோய்கள், வயிற்று வலி, பித்தம், வாதம் போன்ற நோய்கள் நீங்கப் பெறலாம். கோயிலில் உள்ள மாற்றுரைவரதேஸ்வரரை திங்கள் கிழமைகளில் இலுப்பை, நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் பொருளாதார நிலை உயரும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.

Tags : Aravan ,
× RELATED 10ம் நூற்றாண்டை சேர்ந்த அலம்பூசன் சிற்பம் கண்டுபிடிப்பு