×

சிவ சக்தி ஐக்கிய லிங்கம்

காஞ்சிபுரம்

மகிஷனை வதம் செய்தபிறகு, காஞ்சிபுரத்தில் முதன் முதல் பாதம் பதித்த தலம், ‘ஆதி பீடம் என வழங்கப்படுகிறது. இத்தலத்தில் உருவாகியிருக்கும் கோயில், ஆதிபீட பரமேஸ்வரி  ஆலயம் எனவும், ஆதிபீட பரமேஸ்வரி காளிகாம்பாள் திருக்கோயில் எனவும் வழங்கப்படுகிறது. அவள் தவம் செய்த இடம் காமாட்சி அம்மன் ஆலயம்  எனவும்,  மணல் லிங்கம் அமைத்து வழிபட்ட இடம், ஏகாம்பரநாதர் ஆலயம் எனவும் அழைக்கப்படுகின்றன. ஆதிசக்தி குடிகொண்ட இத்திருத்தலம்  அமைதியாக,ஆரவாரமின்றி,வந்து வணங்கும் மக்களுக்கு அருளை வாரி வழங்குகிறது.

இந்த ஆதிபீட பரமேஸ்வரி காளிகாம்பாள் கோயில், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்திற்கு வெகு அருகில் அமைந்துள்ளது. மூலஸ்தானத்தில்  அமர்ந்திருக்கும் பரமேஸ்வரி, மேல் வலக்கரத்தில் பாசமும் இடக்கரத்தில் அங்குசமும், வலது கீழ்க்கரம் அபயஹஸ்தத்துடனும் இடது கீழ்க்கரத்தில்  அன்ன பாத்திரத்தை வைத்துக்கொண்டும் இருக்கிறாள். பத்மாசனத்தில், பத்ர பீடத்தின் மேல் அமைக்கப்பட்ட பத்ம பீடத்தில் சரஸ்வதி, லட்சுமி  அருகில் நிற்க, உற்சவராக, நின்ற கோலத்தில் அருட்பாலிக்கிறாள்.

மண்டபத்தில், இருகரங்களுடன் அன்னபூரணியாக நின்ற கோலத்திலும், பிராகாரத்தில் மேற்குப்புற பார்வையாக பன்னிரு கரங்களுடன், காலால்  மகிஷனை மிதித்துக் கொண்டு, மகிஷன் கழுத்தில் கத்தியை வைத்து அறுக்கும் மகிஷாசுரமர்த்தினி கோலத்திலும் தோற்றமளிக்கிறாள். வடக்குப்  புறத்திலே ஆதி காளிகாம்பாளாக, விரிந்த சடையும் அங்குசம், பாசம் ஏந்திய மேல் வலது கரங்களுடனும், கீழ்க்கரங்களில் அபயம், கபாலத்துடன்  வலது காதில் சவக்குண்டலத்துடனும், இடது காதில் பத்ர குண்டலத்துடனும், பத்மாசனத்தில் கமல பீடத்தில் வீற்றிருக்கிறாள்.

முன்புறம் அமைந்துள்ள சக்திலிங்கம் மிகச் சிறப்பானது. சக்தியும் சிவனும் ஒன்றாக இணைந்த அபூர்வ காட்சி. பொதுவாக, லிங்க அமைப்பு, பீடம்,  ஆவுடையார் என இருபகுதிகளைக் கொண்டதாக இருக்கும். ஆனால், ஆவுடையாரில் உருவங்கள் இருப்பது அரிது. இந்தத் திருக்கோயிலில்,  மூலஸ்தானத்தில் பரமேஸ்வரியாய் வந்து தங்கிய சக்தி, அன்னம் பாலிக்கும்  அன்னபூரணியாகி, இறைவனை அடைந்ததை விளக்கும் கருத்தாக,  இந்த சக்திலிங்க ரூபம் அமைந்துள்ளது.

Tags : Shiva Shakti United Linga ,
× RELATED தெளிவு பெறுவோம்