×

விருச்சிகப் பிள்ளையார்

மருத்துவக்குடி

மருத்துவாசுரனால் மிரண்டுபோன இந்திரன், பரமனின் பாதத்தை இறுக்கப் பிடித்துக் கொண்டான். உடனே, கரிய நிறமாய், எண்கரங்களிலும் ஆயுதம்  ஏந்தி சிவனின் அம்சாவதாரமான அகோர மூர்த்தி அந்த மருத்துவாசுரனின் முன்பு நின்றார். திகைத்தான் அசுரன். ஆனாலும், ஆவேசமாய்த் தாக்கினான்.  அகோரமூர்த்தி மருத்துவாசுரன் மார்பில் சூலத்தைப் பாய்ச்ச மிகப்பெரிய அலறலோடு பூமியில் விழுந்தான்.

மருத்துவாசுரனின் வதம் நிகழ்ந்ததால் இத்தலம் ‘மருத்துவக்குடி’ என்று பெயர் பெற்றது. புராணப் பெருமைமிக்க இக்கோயிலின் ராஜகோபுரம்  நெடிதுயர்ந்து விளங்குகிறது. கோயிலுக்கு இடப்புறம் அம்பாள், அபிராமி எனும் திருநாமத்தோடு நின்ற கோலத்தில் அருள் பொழிகிறாள். திருஆனைக்கா  அகிலாண்டேஸ்வரி காதில் தாடங்கம் எனும் ஆபரணம் அணிந்து ‘தாடங்க பீடேஸ்வரி’ என்று விளங்குவது போல், இத்தல அபிராமி, ஒட்டியாண  ஆபரணம் ஏற்று ‘ஒட்டியாண அபிராமி’யாகத் திகழ்கிறாள். மூலவர் சந்நதியில், ஐராவதத்தால் பூஜிக்கப்பட்ட ஐராவதேஸ்வரர் அருள் வெள்ளம்  பெருக்குகிறார். வெண் யானை பூஜித்ததால் லிங்கத் திருமேனி இன்னும் வெண்மையாகவே உள்ளது.

மருத்துவக்குடியின் மகிமை சொல்லும் இன்னொரு விஷயம், இங்குள்ள விருச்சிகப் பிள்ளையார். சந்திரன் சுய ஒளியை இழந்து மங்கித் தேய்ந்து  வந்தபோது, இத்தல ஈசனை வழிபட்டு தீர்த்தம் உண்டாக்கினான். மூலநாயகனான பிள்ளையாரையும் நிறுவி பூஜித்தான். விநாயகரின் உடலமைப்பு  தேள்போன்று வரிவரியாகத் திகழ்கிறது.  ஜோதிட ரீதியாகவும் சந்திரன் நீசமானது விருச்சிக ராசியில்தான். ஆகவே, விருச்சிகத்தில் மங்கித்  தேய்ந்தவன், இங்கு விருச்சிகப் பிள்ளையாரை நிறுவி பூஜித்திருக்கிறான்.  விருச்சிக ராசிக்காரர்கள் இந்தப் பிள்ளையாரை வணங்க, அவர்கள் வாழ்வு  விண்ணுயரும் என்பது உறுதி. இத்தலம் கும்பகோணத்திற்கு அருகேயுள்ள ஆடுதுறையிலிருந்து மூன்று  கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

Tags : Sculpture Ganesha ,
× RELATED ALP ஜோதிடம் ஓர் அறிமுகம்