×

வெயிலை விரும்பும் வேட்டைக்கார சாமி

* கீழப்பாவூர், நெல்லை

கீழப்பாவூர். நெல்லை மாவட்டத்தில் மேற்கு பகுதியில் இருக்கும் வளமான ஊர்களில் ஒன்று. இந்த ஊரில் வேட்டைக்கார சாமி வந்தமர்ந்ததை பார்ப்போம். தென்காசியிலிருந்து வந்த சுடலைமாடன் ஆசாத்நகரில் நிலையம் கொண்டு அங்கிருந்து கீழப்பாவூருக்கு வருகிறார். அந்த காலத்தில் கீழப்பாவூரில் விவசாயிகள் நெல், சோளம் பயிரிட்டு வந்தனர். திடீரென்று பெரும் கோடை நிலவியது. ஆறு, குளம், குட்டைகள் நீரின்றி வறண்டு போயிருந்தது.

குடிக்க தண்ணீரின்றி அவதிப்பட்டனர். ஒரு மாலை வேளை, ஊரில் உள்ள பெரியவர்கள் சிலர், ஊருக்கு தெற்கு பக்கமிருந்த குளத்தாங்கரையில் ஆலமர அடிவாரத்தில் கூடியிருந்து பேசி கொண்டிருந்தனர். அப்போது ஊர் தலைவர் கூத்தன்நாடார், “இப்படி, எத்தனை நாளைக்குத்தான், நம்ம பொண்டாட்டி, பிள்ளைங்க கஷ்டப்படறது. ஆளாளுக்கு ஏதாவது போட்டு ஒரு கிணத்தை வெட்ட பார்ப்போம்பா... யேய் என்னப்பா சொல்லுதியோ.’’ உடனிருந்த ஒருவர் “அண்ணன் சொல்லது சரிதான், இருந்தாலும், சட்டு, புட்டுன்னு முடிவு எடுக்கிற காரியமா, நாலு பேர் கொண்ட விஷயம், எல்லாரு கிட்டயும் கலந்துக்குனும்..” இவ்வாறு பேசிக்கொண்டு இருந்தவர்களில் மற்றொருவர் “பொழுது சாய்ஞ்ச்சிட்டு, கண்ணு வெளிச்சத்துல வூடு போய் சேருவோம்’’ என்று கிளம்புகிறார்கள்.

ஊர்தலைவர் மட்டும் “சரி நீங்க போங்கப்பா, நான் கொல்லப்புறம் போயிட்டு வாரேன்னு” சொல்லிக்கொண்டு செல்கிறார். அந்தி நேரம் குளத்தின் கரையோரம் ஊர்தலைவரைப் பார்த்து பெயரை கூறி ஒருவர் அழைக்கிறார். திரும்பி பார்த்தவரிடம், “கூத்தன் நாடாரே, வாரும், கவலையை விடுங்க, மழை பெய்யும், குளம் குட்டைகள் நிரம்பும், வேளாண்மை பெருகும். தலைமுறையே சிறக்கும். ஆனா, அறுவடையான உடனே எனக்கு கொடுக்கிறத கொடுக்கணும்.”

“அய்யா, நீ யாரு, நல்ல வார்த்தையெல்லாம் சொல்லுத, அது பலிக்குமா.’’ “நிச்சயம், பலிக்கும், நீ வீட்டுக்கு போ, நான் சொன்னது நடக்கும்.” “சரி, அய்யா! நீ கேக்கிறத கொடுக்க முடியாதப்பா, அந்தளவுக்கு எங்கிட்ட வசதியில்லையப்பா.’’ “நீ என்ன சாப்பிடுவியோ, அத எனக்கு கொடு, எந்த ஆடம்பரமும், ஆரவாரமும் எனக்கு வேண்டாம். உனக்கு செலவே வைக்கமாட்டேன் போதுமா. என் பேரு சுடலை, எனக்கு ஏணி வைத்து மாலை சாத்தும் வகையில் மண்பீடம் அமைத்து, அறுவடையான முதல் நெல்லை எடுத்து எனக்கு படைக்கிற அன்னைக்கு அவிச்சு குத்தி, அரிசியாக்கி படையிலிடு, என் நாமம் சொல்லி அழைத்தால், நான் வருவேன்.

உங்களில் ஒருவரிடம் நான் வந்திறங்கி, உன் குற்றம் குறைகளை சுட்டிகாட்டி, வேண்டியதை பெற்றுக்கொள்வேன்.  நீ கூப்பிட்டால், நான் குரல் தருவேன். என்னை தொழுது வந்தால், உனக்கு மட்டுமல்ல, என்னை அடிபணியும் யாவருக்கும், அவர்கள் சந்ததிக்கும் எல்லா வளமும், நலமும் அளித்து காத்து நிற்பேன்.” என்றார். அதற்கு கூத்தன் நாடார் “அய்யா, நான் அதன்படியே செய்யுறேன்.’’ என்றார். சரி, “நான் வேட்டைக்கு போக சமயமாச்சு. நீ வீட்டுக்கு போ” என்று கூறியவர், சிறிது நேரத்தில் மாயமானார்.

கூத்தன் நாடார், மனதுக்குள் சந்தோஷம் கொண்டவராக, ஏதோ ஒரு வித மனபயமும், ஆச்சரியமும் கலந்தவாறாக வீட்டுக்கு வந்தார். மனைவியை அழைத்தார். “ஏ. தங்கம்மா...,’’  “பொறுங்க தண்ணி கொண்டு வாரேன்.”  “தண்ணியெல்லாம் வேண்டாம்புள்ள நான் சொல்றத செத்த கேளு’’ என்று பேச முயற்சித்த போது இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சந்தோஷம் கொண்டார் கூத்தன்நாடார்.

அவர் மட்டும் இந்த சந்தோஷத்தை பெறவில்லை, கீழப்பாவூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களும் மட்டற்ற மகிழ்ச்சியும், வியப்பும் கொண்டனர். கொண்டவளிடம் தான் கண்ட அந்த மாடனைப்பற்றி கூறினார். மழையின் காரணமாக குளம் குட்டைகள் நிரம்பியது. ஆறுகளில் பெருவெள்ளம் அடுத்த நாள் முதல் விவசாயப்பணிகள் தொடங்கியது. சோர்ந்திருந்த மக்கள் விவசாய பணிகளில் வேகம் காட்டினர். விளைச்சல் அமோகமாக இருந்தது.

அறுவடை ஆனதும். களத்து மேட்டில் நின்ற, மகனிடம் கூத்தன்நாடார் “ ஏலே, ஒரு மூடையை தனியா எடுத்துவை’’ என்று உத்தரவிட்டார். “அய்யா, எதுக்கு எடுத்து வைக்க சொல்லுதியோ,” “ஏலே, சொன்னது செய்வியா, அத வுட்டுப்புட்டு கேள்வி கேள்விகேட்டிக்கிட்டுருக்க.’’ என்றார் கோபத்துடன். தந்தையின் கட்டளைக்கு ஏற்ப நெல் ஒரு மூடையை எடுத்து வைத்தார் அவர்.

அறுவடை முடிந்த அடுத்த வாரம் ஊருக்கு தெற்கு பக்கம், மையான கரையோரம் வேட்டைக்கார சாமி சுடலைமாடனுக்கு சுண்ணாம்பு கலவையால் மண் பீடத்தை நாடார் அமைத்தார். அன்று காலையில் நெல்லை அவித்து, தனது தாயின் கையால் இடித்து அரிசியாக்கி சமைத்து, சுவாமிக்கு படையல் போட்டார். தனது மனைவி, மக்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரையும் பூஜைக்கு அழைத்திருந்தார். சுவாமிக்கு படையல் போடப்பட்டு, பூஜை நடந்தது. அப்போது கூத்தன் நாடாரின் தம்பி சுவாமி அருள் வந்து ஆடினார்.

அப்போது பூஜையை தான் ஏற்றுக் கொண்டதாக கூறிய அவர், “எனக்கு மஞ்சனை அதிகம் பிடிக்கும். இனி பூஜை செய்யும் போது, மஞ்சனையை அதிகம் கொண்டு வா, பூஜை முடிஞ்சதும் நான் வேட்டைக்கு போகனும். அதற்கு அறையில் கறுப்பு நிற கச்சை கட்டணும். தலையிலே சிகப்பு வஸ்திரம் அல்லது குல்லா வைக்கனும், ஒரு கையில் தீப்பந்தம், மறு கையில் திருநீர் கொப்பரையும், தோளில் திரள கொடுக்கும் உணவுகளை சுமந்து செல்வேன். அதை நீ அடுத்த பூஜையிலிருந்து செய். ம்ம்... நான் சென்று வரும் வரை என் கோட்டையில் எந்த சத்தமும் கேட்க கூடாது.

ம்... புரியுதா,  எனக்கு படைத்த உணவை கோயிலில் வைத்து உண்டு செல்லவேண்டும். இது எல்லாம் மூன்றாம் ஜாமத்துக்குள் முடித்து அவரவர் வீடு போய் சேர வேண்டும். அதன் பின் சூரிய உதயம் காணும் முன் யாரும், என் கோட்டைக்கு திரும்ப வரகூடாது” என்று கூறியுள்ளார். அதன்படியே இன்றும் அப்படிதான் பூஜை முறைகள் இக்கோயிலில் மேற்கொள்ளப்படுகிறது.

பூஜை முடிந்த நாள் முதல் அவ்வூரில் வேளாண்மை சிறந்து விளங்கியது, சில ஆண்டுகள் போனது, ஊர் பெரிதானது, மக்கள் தொகை அதிகமானது. ஒவ்வொரு இனத்தவரும், இந்த வேட்டைக்கார சாமிக்கு தனி பீடம் அமைத்து, கோயில் கட்டி வழிபட்டு வருகின்றனர். இப்படி ஏழு சமுதாயத்தினருக்கு தனித்தனி கோயிலாக சுடலைமாட சாமிக்கு ஏழு கோயில்கள் அருகருகே அமைக்கப்பட்டுள்ளது.

 எல்லா கோயிலிலும் ஒரே போல்தான் உருவமில்லாத பீடம் அமைக்கப்பட்டுள்ளது. காரணம் கற்சிலை வடிவத்தையோ, உருவம் வடிவமைக்கப்பட்ட வேறு விதமான சிற்பத்தையோ வேட்டைக்கார சாமி ஏற்றுக்கொள்ளவில்லை.  நெல், சோளம் பயிரிட்டு வந்த இவ்வூரில், தற்போது, நெல், மிளகாய், எள், கடலை, பல்லாரி வெங்காயம், என பல்வேறு தானிய வகைகள் பயிரிடப்பட்டு, விவசாயம் சிறப்புற்று, ஊரும் பேரு, புகழுடன் திகழ்கிறது. வேட்டைக்காரன், சுடலைமாடன் அருளால் விவசாயமும், வணிகமும் நல்ல முறையில் நடைபெற்று வருகிறது. மக்கள், ஆரோக்யத்துடனும், நல்ல வளத்துடனும் வாழ்ந்து வருகிறார்கள்.

கீழப்பாவூர் சுடலைமாடசுவாமி கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் 2வது செவ்வாய்க் கிழமை கொடைவிழா நடை பெறுகிறது. கோயிலில் சுடலைமாடன், வேட்டைக்காரன், பேச்சியம்மன், இசக்கியம்மன் ஆகிய தெய்வங்கள் உள்ளது. கோயிலில் மூன்று ஆலமரமும், நான்கு வேப்பமரமும் உள்ளது. கோயிலின் வடக்கு பக்கம் இருக்கும் பனைமரத்தில் பைரவர் நிலையம் கொண்டுள்ளார். சுடலைமாட சுவாமி கோயிலில் கொடைவிழா என்றால் மகுடம், வில்லிசை, நையாண்டி மேளம், தாரை, தப்பட்டை, உருமி, கருங்கொம்பு, உடுக்கை முதலான இசைக்கருவிகள் முக்கிய இடம் பெறும். அதுமட்டுமன்றி வண்ண விளக்குகளால் அலங்காரம், செய்யப்பட்டு விழாக்கோலம் பூண்டியிருக்கும் கொடைவிழா. ஆனால் இந்தக்கோயிலில் மட்டும் இவற்றிற்கு மாறாக விழா நடைபெறுகிறது.

கொடை விழா அன்று காலை 6 மணிக்கு, கோயிலில் விழா பணி செய்ய விரும்பும் பக்தர்கள், சுமார் 50க்கும் மேற்பட்டோர், கோயிலுக்கு வந்து தலையில் நல்லெண்ணெய் வைத்து தேய்த்து குளிப்பார்கள். அதன் பின்னர் கோயிலில் அடுப்பு கூட்டி நெல் அவிப்பார்கள். குறிப்பாக ஆண்டு தோறும் பத்து மூடை, பதினைந்து மூடை என்று இருக்கும். ஆண்டுக்கு ஆண்டு கூடுமே தவிர குறைவதில்லை. இந்த ஆண்டு கூட பதினைந்து மூடை (ஆயிரத்து ஐநூறு கிலோ) அரிசி உணவாக்கப்பட்டு சுவாமியின் படையலுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அவித்த நெல்லை, மாலை நேரத்திற்குள் காய வைத்து, அதை குத்தி அரிசியாக்கி அந்த அரிசியில் உணவு சமைக்கப்பட்டு, சுவாமிக்கு படையல் செய்யப்படும். இந்த படையலில் எல்லா வகை காய்களும் இடம் பெற்றிருக்கும். சமைக்கப்பட்ட உணவை, சுவாமிக்கு படைக்கும் போது, அப்பணியில் ஈடுபடுபவர்கள் வாய், மூக்கு சேர்த்து வெள்ளைத் துணியை கொண்டு கட்டியிருப்பார்கள்.

காரணம் அந்த உணவின் வாசனையை நுகர கூடாது என்பதற்காக, சேவலை பலி கொடுத்து அதையும் சமைத்து உணவு படைப்பார்கள், முட்டை, முருங்கைக்காய், அப்பளம் முதலான அனைத்து வகை உணவு பதார்த்தங்களும் அதில் இடம்பெற்றிருக்கும். பூஜையின் போது கோயில் முழுவதும் சாம்பிராணி புகை மண்டலமாக, வாசனையாக இருக்கும். அந்த நேரம் தன்னை மெய் சிலிர்க்க வைத்து, தன் அருகிலே, தாயாய், தந்தையாய், கூப்பிட்டால் குரல் கொடுக்கும் அப்பன் சுடலைமாடன் இருப்பது போல பிரம்மயை நமக்குள் ஏற்படுத்தும்.

எல்லா குறைகளையும், பிணிகளையும், அய்யன் கோயில் திருநீறு தீர்க்கும். படையலின் பல்வேறு வகையான பழங்களும் இடம்பெற்றிருக்கும். குறிப்பாக வாழைப்பழம் அதிகமாக இடம்பெறும். சுமார் 2 ஆயிரம் தேங்காய்களை இரண்டாக உடைத்து வைத்திருப்பார்கள். நடு ஜாமம், நள்ளிரவு 12 மணிக்கு பூஜை நடக்கும். அசையும் மரமும் அசையாமல் நிற்கும். அழுத குழந்தையும் அமைதி காக்கும்.

மயானம் அருகே அமைதி நிறைந்திருக்கும் அந்த வேளையில் பூசாரி அப்பாத்துரை கையில் இருக்கும் மணியின் ஓசை மட்டுமே தொடர்ந்து ஒலிக்கும். சாம்பிராணி வாசனையும் புகையுமாக நிறைந்திருக்கும். பக்தர்கள் நிறைந்து இருக்கும் கோயில் காம்பவுண்ட் சுவர்களை இளசுகள் ஆக்கிரமித்திருக்கும். பனை ஓலை விரித்து, பயபக்தியோடு விழாவை காணும் முதுமை நிறைந்தவர்கள் ஒருபுறம், பேரன், பேத்திகள் அரவணைப்பில் ஆண்டவனை மனமுருக வேண்டி இருக்கும் தாய்குலங்கள் ஒருபுறம், அத்தனை மக்கள் கூட்டம் இருந்தும் அமைதி நிலவியிருக்கும்.

பேச்சியையும், இசக்கியையும் மூச்சாய் நினைத்திருக்கும் அம்மக்கள் மூச்சு விடும் ஓசை கூட கேட்பதில்லை. மேள, தாளம் எதுவும் இன்றி இருக்கும் அந்த வேளையில் ஓ...ஓ...என்று ஆதாளி குரல் மட்டும் கேட்கும். புகை மூட்டத்தினிடையே கூர்ந்து பார்த்தால், கோமரத்தாடி(சாமியாடுபவர்) பொன்னையன் அருள் வந்து ஆடிக் கொண்டிருப்பார். சுவாமியின் முன் இருக்கும், மஞ்சனை எடுத்து தனது முகத்தில் பூசிக்கொள்வார். அந்த நேரம் அமைதி மாறி சப்தம் எழ துவங்கும், ஆம். தமிழ் கிராம பெண்களின் வாய்க்குள், தில்லை கூத்தன் நடராஜனைப்போன்று நாக்கு நடனமிட்டு ஓசை எழுப்பும், அந்த குலவை சத்தம் வேகமாக கேட்கும்.

அந்த ஓசையே! அய்யன் சுடலைமாடனுக்கு இன்பமான இசையே! பூசாரி மாலை அணிவித்ததும், ஒருவர் கோமரத்தாடியின் மேனியில் சந்தனம் பூசுவார். உடனே வாலிபர்கள் வந்து கச்சையை(சிறு மணிகள், இணைக்கப்பட்டிருக்கும் கறுப்பு நிற டவுசர்) எடுத்து கோமரத்தாடிக்கு கட்டி விடுவார்கள். தலையில் குல்லாவும், வலது கையில் தீ பந்தமும், திரளுச்சோறும் கொண்டு கோமரத்தாடி மயான வேட்டைக்குச் செல்வார். அவர் சென்று வரும் வரை கோயிலில் நிசப்தம் நிலவும். அவர் வந்ததும்.

நீராடுவார். முதலில் அலங்கார பூஜையும், அடுத்த அன்னபடைப்பு பூஜையும் நடைபெறும். அந்த பூஜையில் மீண்டும் சாமியாடும் கோமரத்தாடி, பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறுவார். அருள்வாக்கு உத்திரவாதத்துடன் இருக்கும். குறிப்பாக சொன்னால் குழந்தை வரம் வேண்டி வருபவரிடம். அடுத்து கொடைவிழாவிற்கு மகனுடன் வருவாய், அப்படி வரும் அய்யன் சுடலைக்கு விளக்கு எடுத்துட்டு வா என்று கூறுவர். மாடன் அருளால் மழலை வரம் பெற்ற தம்பதியினர் திருவிளக்குடன் விழாவுக்கு வருவதுண்டு. கொடைவிழா நிறைவு பெற்றதும், உணவு பரிமாறப்படும். எல்லாம் 3 மணிக்கு முன்னதாகவே முடிந்து, அனைவரும் அவரவர் இல்லம் சென்று விடுவர். வேளாண்மையை பெருகச் செய்ததோடு, வேண்டிய வரம் அளிக்கும் வேந்தனாக திகழ்கிறார் இந்த வேட்டைக்கார சாமி.

இந்த சாமிக்கு பாத்தியப்பட்ட பக்தர்கள் பலர் பெரிய வணிகர்களாகவும், தொழிலதிபர்களாகவும் திகழ்கிறார்கள். வேட்டைக்கார சாமி சுடலைமாடனுக்கு அழகான சிலை அமைத்து பெரிய கோபுரத்துடன் கோயில் கட்ட வேண்டும் என்று முடிவு செய்து, விழாக்குழு, திருப்பணிக்குழு என பணிகளை முனைப்புடன் முடிக்கும் வகையில் தயாரானார்கள்.
ஒரு கொடைவிழாவின் போது சாமி கொண்டாடி(அருள் வந்து ஆடும் அருளாளி)யிடம் கேட்டனர்.

அப்போது சுடலைமாடன், எனக்கு சிலை வேண்டாம், அலங்காரம் வேண்டாம், அபிஷேகம் வேண்டாம். கோயிலும் வேண்டாம், கோபுரமும் வேண்டாம். சுட்ட சுண்ணாம்பு பீடம் போதும். எண்ணெய் மஞ்சனை போதும். சுற்றுச்சுவர் கட்டுங்கள். வெயில் இருப்பதை விரும்புகிறேன். கோபுரம் எழுப்பி அதை தடுத்து விடாதீர்கள் என்று கூறியவாறு அவர் ஆதாளி(ஓ,ஓ வென குரல் எழுப்புவது) போட்டு விட்டு சாந்தமானார்.அதன் பின்னர் வெயிலை விரும்பிய வேட்டைக்கார சாமிக்கு கோயில் கட்டவில்லை.

சு.இளம் கலைமாறன்
படங்கள்: முத்தாலங்குறிச்சி காமராசு


Tags : Hunters ,
× RELATED பிரதமர் மோடி வருகை எதிரொலி: சென்னையின்...