×

வெற்றியை தந்தருள்வார் வெயில் உகந்த உடையார்

நம்ம ஊரு சாமிகள் : வேய்ந்தான்குளம், திருநெல்வேலி

அரனுக்கும், அரிக்கும் பிறந்த மைந்தன் அரிஹரன். இவர் மூன்று அவதாரங்களை எடுத்தார். முதல் அவதாரம் சாஸ்தா, அய்யனார், ஐயப்பன். இந்த அவதாரங்களில் முதன்மை அவதாரமாக திகழ்ந்த சாஸ்தாவே கிராமம் தொட்டு பட்டணம் வரை பரவலாக வீற்றிருக்கிறார். ஐயப்பன் அவதாரத்தில் பந்தளத்து அரண்மனையில் வளர்ந்து வந்த வளர்ப்பு மகன் மணிகண்டனுக்கு முடிசூட்ட எண்ணினார் பந்தள ராஜா. இதற்கு எதிராக ராணியின் உறவினரான ஒரு அமைச்சர் சதி செய்தார். அதன்படி ராணி கோப்பெரும்தேவி வயிற்று வலியால் துடிக்க, அரண்மனை வைத்தியரின் ஆலோசனைப்படி புலிப்பால் இருந்தால் தான் வலியை குணமாக்க முடியும் என்ற நிலை உருவானது. தாயின் மீதிருந்த பாசத்தாலும், தான் அவதரித்த நோக்கத்திற்காகவும், தந்தை பந்தள மன்னன் தடுத்தும் புலிப்பால் கொண்டு வர ஐயப்பன் காட்டிற்கு விரைந்தார். புலி கூட்டத்துடன் அரண்மனைக்கு வந்தார். தான் யார் என்பதை உணர்த்தினார்.

தெய்வீகத்தன்மையுடனான ஹரிஹரன், தனது மகனாக தன் மடியில் தவழ்ந்தானா! அமைச்சரின் பேச்சைக்கேட்டு தவறு இழைத்துவிட்டேனே என்று தப்பை உணர்ந்த ராணி, ஓடி வந்து மணிகண்டனிடம் மன்னிப்பு கோரினாள். மணிகண்டன் ‘‘ அம்மா, நீங்கள் என்னை பெறாவிட்டாலும், வளர்த்து எடுத்த தாயல்லவா, மகனிடத்தில் மன்னிப்பு கேட்கலாமா? என்று கூறினார். மன்னன் ராஜசேகரனோ நடந்தது நடந்தாகட்டும். மணிகண்டா, நீ, இனி எங்களோடு இருந்து இந்த நாட்டை ஆள வேண்டும் என்று கூறினார். அதற்கு மணிகண்டன் தான் வந்த நோக்கம் முடிந்தது. தந்தையே எனக்கு நீங்கள் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தால், உங்கள் ராஜ்யத்துக்குட்பட்ட எல்லையில் ஓர் இடம் கொடுங்கள். என்று கேட்க, உனக்கு எந்த இடம் வேண்டுமோ அதை நீ விரும்பிய படியே எடுத்துக்கொள். இந்த ராஜ்யமே உனக்கு சொந்தம் என்றார் மன்னர். அப்போது மணிகண்டன் நான் இங்கிருந்து அம்பு எய்துகிறேன். அது எங்கு போய் விழுகிறதோ அங்கே எனக்கு கோயில் எழுப்புங்கள் என்று கூறிய மணிகண்டன் அம்பு எய்தார். அந்த இடத்தில் கோயில் கட்டப்பட்டது. அது தான் சபரிமலை.

சபரிமலை வந்து என்னைப் பாருங்கள் என்ற ஐயப்பன், ‘‘என்னை காண வருபவர்கள் நாற்பத்தியோரு நாட்கள் விரதம் இருந்து கருப்பு அல்லது நீல நிற ஆடை அணிந்து இருமுடிக்கட்டி வரவேண்டும். அவ்வாறு வருபவர்களுக்கு ஜோதியாக காட்சியளிப்பேன்’’ என்றுரைத்தார். ‘‘அப்படியானால் உன்னை குடும்பத்தோடு காண வழியில்லையா? என்ற பந்தளமன்னரிடம், ‘‘நான் அவதரித்த பங்குனி உத்திரத்தன்று நீர் நிரம்பிய ஆறு, குளம், கண்மாய், ஏரி கரையோரங்களில் ஏதேனும் மரம் ஒன்றின் கீழ் என்னை நினைத்து ஒரு கல்லை வைத்து வழிபட்டாலும் அவ்விடம் நான் வந்து அருட்பாலிப்பேன். அங்கே ஐயப்பனாக வராமல், சாஸ்தாவாக, அய்யனாராக எழுந்தருள்வேன். இவ்விரு நாமங்களில் ஏதேனும் ஒன்றில் என்னை அழைத்து மனமுருக வேண்டுபவர்களுக்கு அருள் வழங்கி ஆசிர்வதிப்பேன். என்னை அவ்வாறு வணங்கும் நபர்கள் குடும்பத்தோடு தான் வந்து பூஜிக்க வேண்டும்’’ எனக்கூறினார். அதன்படி நீர்நிலைகளின் கரையோரம் சாஸ்தா நிலை கொண்டார்.

திருநெல்வேலி தற்போதைய புதிய பஸ்நிலையம் மற்றும் அதனை சுற்றி பெரிய குளம் இருந்தது. அந்த குளத்தின் கரையோரம் மாடுகள் மேய்த்துக் கொண்டிருந்தனர் தற்போதைய குலவணிகர்புரம் பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள். அது ஒரு கோடைகாலம். ஏழு சிறுவர்களில் இரண்டு பேர் பன்னிரெண்டு வயதை தொட்டவர்கள். மீதமுள்ள ஐந்து பேரும் பதினான்கு வயது உடையவர்கள். இந்த ஐந்து பேரும் வெப்பம் தாங்க முடியாத நிலையில் குளத்துக்குள் இறங்கி, அக்னியின் தாக்கத்திலிருந்து விடுபட்டனர். இது நாள்தோறும் தொடர்ந்தது. அக்னி நட்சத்திரம் தொடங்கிய பின்னர் அப்பகுதியில் எந்த குளத்திலும் நீர் இருக்காது. காரணம் வெயிலின் வேகத்தில் குளத்து நீரெல்லாம் உறிஞ்சப்பட்டு நிலத்திலெல்லாம் வெடிப்பு ஏற்பட்டு வானம் பார்த்த பூமியாக குளம் காட்சி அளிக்கும்.ஒரு நாள் மாடுமேய்க்கும் சிறுவர்கள் ஏழுபேரும் வெயிலின் கொடுமையிலிருந்து மீள, அங்கே இருந்த ஒரு பனை மரத்தின் கீழ் அமர்ந்து இருந்தனர். கிளைகள் உதிர்ந்த அந்த மரத்தின் கீழ் ஐந்துபேருக்கும் போதுமான நிழல் கிடைக்கவில்லை. இதனால் நான் தான் இதில் இருப்பேன்.

இந்த இடம் எனக்கு என அவர்களுக்கு உள்ளே முட்டல், மோதல் உருவானது. பின்னர் அவர்களுக்குள்ளேயே சமாதானமாகி கொண்டனர். அதில் ஒரு சிறுவன் குத்தாலநம்பி அங்கிருந்த கல் ஒன்றை எடுத்து மரத்தின் மீது உராய்த்துக்கொண்டிருந்தான். அப்போது. மரம் தளிர்த்தது. கிளைகள் விரிவடைந்தன. நிழல் மயமாக அவ்விடம் திகழ்ந்தது. வியப்பும், பயமும் கொண்ட சிறுவர்கள் எழுந்து நின்றனர். ஏதோ விபரீதம் நிகழ்கிறதோ என நடுங்கினர்.‘‘அர்ச்சுனா, அர்ச்சுனா’’ என்றனர். கூட்டத்திலிருந்த சிறுவர்கள் நால்வர். அவர்களுக்கு தெரிந்தது அது மட்டும் தானே, ஆம். இடி இடித்தால் இப்படி சொல்லுங்கள் என்று பெற்றோர் சொல்லிக் கொடுத்ததை மறக்காமல் எந்த ஆபத்து நிகழும் முன்னும் ஒப்புவிப்பார்கள். உடனே மாடுகளை அவரவர் தொழுவங்களுக்கு ஓட்டிச்சென்றனர். நடந்ததை வீட்டில் தெரிவித்தனர் சிறுவர்கள். சிறுவர்களின் பேச்சைக் கேட்ட அவர்களது பெற்றோர்கள் பெருமாள் கோயில் அர்ச்சகரிடம் சென்று கூறினர்.

பின்னர் அர்ச்சகருடன் சேர்ந்து அவர்களும் அவ்விடம் வந்து பார்த்தனர். சோழபோட்டு பார்த்தபோது சாஸ்தாவின் திருவிளையாடல் என்பது தெரியவந்தது. உடனே பூரண, புஷ்கலையுடன் கூடிய அமர்ந்த கோலத்தில் இருக்கும் சாஸ்தா திருமேனியை வைத்து வழிபட்டு வாருங்கள். நல்லதே நடக்கும் என்றார் அர்ச்சகர்.அர்ச்சகரின் கூற்றுக்கிணங்க அங்கே நின்று கொண்டிருந்த பனை மரத்தின் கீழே மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி சிலையை நிலை நிறுத்தி வணங்கி வந்தனர். மாதங்கள் பல கடந்த நிலையில் கோடை நெருங்கும் முன்னரே வெயிலின் தாக்கம் அதிகரித்தது. மாடு மேய்க்கும் சிறுவர்கள் சாஸ்தா சிலை முன்னே வந்து நின்றனர். மாடுகள் ஆங்காங்கே மேய்ந்து கொண்டிருக்க, சாமி முன்பு கூடி இருந்து ஏழு சிறுவர்களும், தூக்குச் சட்டியில் தாங்கள் கொண்டு வந்த கஞ்சியை உண்டனர். அப்போது சிறுவர்களில் ஒருவனான நயினார் கூறினான். ‘‘உச்சி வெயிலு உச்சந்தலையை பொளக்குது எங்களுக்கு. சாஸ்தா சாமி நீ மட்டும் மரத்து நிழலுல நல்லா உக்காந்திருக்க’’ என்றான். மறுநிமிடமே சாஸ்தா சிலை அருகே நின்ற பனை மரத்துக்கு மேலே இருந்த கிளைகளில் ஒன்றிரண்டு உதிர்ந்தன. சாஸ்தாவின் உச்சந்தலையில் வெயில் பட்டது.

இதைக்கண்ட சிறுவர்கள், கஞ்சி உண்டு கழுவாத கரத்தோடு இருந்தவர்கள், வியர்த்து விறு விறுக்க வேகம் கொண்டு எழுந்தனர். அப்போது ஆறுமுகம் என்ற சிறுவன், ‘‘சாஸ்தா சாமி, இந்த பய தெரியாம பேசிப்புட்டான். இவனை மன்னிச்சிடு சாமி. எங்களை காப்பாத்து என்று கூற, சிறுவர்கள் ஏழு பேரும் மண்டியிட்டு’’ வணங்கி சென்றனர். இந்தச் சம்பவம் குறித்தும் அன்றைய தினமே தங்களது பெத்தவங்களிடம் கூறினர் சிறுவர்கள். அப்போது ‘‘நம்ம குலதெய்வம் சாஸ்தா உங்களுக்கு துணையா இருக்கிறாரு, இனி பெரிய குளம் பக்கம் மாடு மேய்க்க போவாதிங்கல, குளத்துக்கு கிழக்கால மேய்ச்சலுக்கு மாடுகள பத்திக்கிட்டு போங்கல’’ என்று பெத்தவங்க சொல்ல, மறுநிமிடமே பேசலானான் குத்தாலநம்பி, ‘‘எப்பா, நம்ம குலதெய்வ சாஸ்தா, நமக்கு துணையா இருக்காருன்னு சொல்லுறியே, கஞ்சி குடிச்ச கைய கழுவ கூட கட்டாந்தர காட்டுல ஒரு சொட்டு தண்ணிகூட இல்ல, மாடு கண்ணுக தண்ணிக்கு தவியா, தவிச்சு அலையுதுங்க, சாஸ்தா மனசு வச்சு குளத்துல தண்ணிய வர வைக்கலாமுலா’’ என்றான்.

‘‘ஏலே, புத்திமதி சொன்னா கேக்கணும், இப்படி விதாண்டம் பேசப்பிடாது’’ என்று முடிக்குமுன்னே ஓ வென மழை பெய்தது. இரவு முழுக்க மழை கொட்டியது. எல்லாம் சாஸ்தாவின் அருள் தான் என உணர்ந்தனர். மறு வாரமே சாஸ்தாவிற்கு மண் சுவரால் கோயில் எழுப்பினர். பனை ஓலையால் கூரை அமைத்தனர். அப்போது கூரை காற்றில் பறந்தது. மீண்டும், மீண்டும் அமைக்க கூரை மட்டும் நிற்கவே இல்லை. அன்றிரவு ஊர் அர்ச்சகர் கனவில் தோன்றிய சாஸ்தா, மழையடித்தால் நனைவேன், வெயிலடித்தால் காய்வேன் எனக்கு கூரை வேண்டாம். வெயில் தான் வேண்டும். இனி என் தலைக்கு மேல கூரை போட விரும்பாதே என்றுரைத்தார். மறுநாள் பொழுது புலர்ந்ததும்  கூரை போடும் பணியை நிறுத்தினார் அர்ச்சகர். அன்றிலிருந்து இவ்விடமுள்ள சாஸ்தா, வெயிலு உகந்த உடையார் சாஸ்தா என்ற நாமத்தில் அழைக்கப்பட்டார்.

இந்த வெயிலுகந்த உடையார் சாஸ்தா என்ற பெயரே வெயிலுகந்த சாஸ்தா என்றும் வெயிலுகந்தான் என்றும் அழைக்கப்படலாயிற்று. இதன் பொருட்டே கோயில் அருகே இருந்த பெரியகுளம், அன்றிலிருந்து வெயிலுகந்தான் குளம் என்று அழைக்கப்பட்டது. அது மருவி வெயிந்தான் குளம் என்றும் வேய்ந்தான்குளம் என்றும் அழைக்கப்படலாயிற்று. இந்த வேய்ந்தான்குளம் எந்த கோடையிலும் வற்றாது. பெரும் கோடையானாலும் எங்கேனும் ஒரு பகுதியில் குட்டை அளவில் நீரைக் கொண்டிருக்கும். தாமிரபரணி ஆற்றின் மூலம் பெருகும் அணைக்கட்டுகளில் ஒன்றான அம்பாசமுத்திரம் அருகேயுள்ள பழவூர் அணையிலிருந்து பாளையம் கால்வாய் மூலம் இந்த வேய்ந்தான்குளத்துக்கு தண்ணீர் வருகிறது. வெயிலுகந்த உடையார் சாஸ்தா கோயில் கடந்த 2004ம் ஆண்டு புணரமைக்கப்பட்டது. அப்போது கருவறையின் மேற்கூரை கான்கிரீட் தளத்தால் அமைக்கப்பட்டது.

அப்போது உடைப்பு ஏற்பட்டு, பெயர்ந்து விழுந்தது. அதன் பின்னரும் கட்டுமான பணியை முன்னின்று நடத்தியவர் தொடர்ந்து கான்கிரீட்டால் கூரை அமைத்தார். பணியாட்களை கட்டாயப்படுத்தி கூரையை அமைத்ததன் விளைவு அவர் விபத்துக்குள்ளானார். காரணம் அறிய கோயில் திருப்பணிக்குழுவினர் ஆரூடம் பார்க்கச் சென்றபோது சாஸ்தா நாமமே வெயிலு உகந்த உடையார் என்றிருக்க வெயிலை தடுக்கும் வண்ணம் நீங்கள் கூரை அமைக்க கூடாது என்று வந்தது. இதையடுத்து ஏற்கனவே அமைக்கப்பட்ட கான்கிரீட் கூரையில் வெயில் வரும் அளவுக்கு துளைகள் இடப்பட்டது. அதன் வழியே வெயில் வருகிறது. சாஸ்தாவின் தலையில் வெயில் விழுகிறது. கருவறையில் சாஸ்தா பூரண, புஷ்கலையுடன் அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். அவர் எதிரே அவரது வாகனமான யானை இரண்டரை அடி உயரத்தில் நிற்கிறது. அதனைத் தொடர்ந்து காவல் தெய்வமாக சுடலைமாடன் அருட்பாலிக்கின்றார்.

சு.இளம் கலைமாறன்

படங்கள்: ஆர்.பரமகுமார்

Tags : winner ,
× RELATED கரூரில் அதிமுக-வினர் பிரச்சாரத்தில் பணப்பட்டுவாடா!!