×

வேண்டும் வரம் அருளும் அற்புத வரத ஆஞ்சநேயர்

பெரணமல்லூர்: பெரணமல்லூரில் 200 வருடங்கள் பழமை வாய்ந்த ஆஞ்சநேயர், சிறு குன்றின் மீது கோலோச்சுகின்றார். நன்செய் நிலங்கள் நிறைந்த இவ்வூரில் வாழ்ந்த ஒரு தம்பதிக்கு நெடுநாட்களாக குழந்தைப் பேறு இல்லை. தங்களுக்கு சொந்தமான நிலத்தில் ஒருநாள் ஏர் உழுதபோது கல் ஒன்று ஏர் கலப்பையில் இடிபட்டது. அவ்விடத்தை அகழ்ந்து பார்த்தபோது, அங்கே அற்புதமான அனுமன் சிலை ஒன்று கிடைத்தது. அதை அருகே இருந்த சிறு குன்றின் மீது ஸ்தாபித்து சிறிதாக ஆலயமொன்று எழுப்பி வழிபட்டனர். அதன் பின்னர் அவர்களது குறை நீங்கி, பிள்ளைப்பேறு கிட்டியது. அது முதல் இவ்வூர் மக்களும் அனுமனை வழிபட்டு இடர்கள் நீங்கப்பெறுகிறார்கள்.

சென்னை-நங்கநல்லூரில் உள்ள புகழ்பெற்ற ஆஞ்சநேயர் சிலை செய்ய, ஒரு பெரும் பாறை தேவைப்பட்டது. அதை பல இடங்களிலும் தேடினர். இறுதியில் இந்த பெரணமல்லூரைச் சேர்ந்த இஞ்சிமேடு என்கிற பகுதியில் ஒரு பெருங்(கருங்)கல் தேர்வு செய்யப்பட்டது. அதை எடுத்து வரும் வழியில் பல இடையூறுகள். அப்போது வழியில் இருந்த இந்த வரத ஆஞ்சநேயர் ஆலயத்தில் மனமுருக பிரார்த்தித்தனர். உடனே தடைகள் ஏதுமின்றி அதனை சென்னைக்கு எடுத்துச் சென்றனர். மகிமை மிக்க இந்த அனுமன் கோயில் கிழக்கு நோக்கியிருப்பினும் அனுமன் வடக்கே முகம் காட்டி தரிசனம் அளிக்கிறார்.

அபயமளிக்கும் வலக்கரம், கதையேந்திய இடக்கரம், நீண்டு தலைக்கு மேல் வளைந்து நிற்கும் வால் என அருட்காட்சி நல்கும் இவரை வீர ஆஞ்சநேயர் என்றும் வரத ஆஞ்சநேயர் என்றும் போற்றுகின்றனர்.அமாவாசைதோறும் இங்கு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகளும் ராமநாம கோஷத்துடன் கிரிவலமும் நடைபெறுகின்றன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இத்தலம் வந்து அனுமனை தரிசித்து வரம் பெற்றுச் செல்கின்றனர். பொதுவாக மாருதி வழிபாடு புத்தி, பலம், புகழ், தைரியம், பேச்சுவன்மை, நோயற்ற வாழ்வு, வெற்றி ஆகியவற்றை பெற்றுத் தரும். அந்தவகையில் வேண்டுவன அத்தனையும் அளிக்கிறார் இந்த அற்புத வரத ஆஞ்சநேயர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியிலிருந்து 20 கி.மீ. தொலைவிலும், வந்தவாசியிலிருந்து 22 கி.மீ. தொலைவிலும் பெரணமல்லூர் அமைந்துள்ளது. ஆலயத் தொடர்புக்கு: தொலைபேசி எண்: 9790387313.

Tags : Anjaneya ,
× RELATED சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயில்...