×

அனந்தனுக்கு 1000 நாமங்கள்

150. ஜேத்ரே நமஹ (Jethrey namaha)

இந்திரனின் சபைக்கு நாரதர் சென்ற போது, நாரதரைச் சீண்டிப் பார்க்கும் நோக்கில், “முக்கண்ணனான ருத்திரனுக்கு நிகரான தெய்வமில்லை!” என்றான் இந்திரன்.  அதைக் கேட்ட நாரதர், “திருமாலுக்கு மூன்றாவது கண் இல்லாவிட்டாலும் அவர் அனைத்தையும் அறிந்தவர்! அவருக்கு யாரும் நிகரில்லை!” என்றார்.  “ருத்திரனே வலிமையானவர்!” என்றான் இந்திரன். “திருமாலே அனைத்திலும் வல்லவர்!” என்றார் நாரதர். இப்படியே வாக்குவாதம் முற்றிப்போக, “இந்திரா! நீ  ருத்திரனிடம் சென்று திருமாலோடு போர் புரிய அவர் தயாரா என்று கேள்!” என்று கூறினார். “ஆஹா! இது நல்ல வாய்ப்பு!” என்று சொன்ன இந்திரன்,  சடக்கெனத் தேவலோகத்திலிருந்து புறப்பட்டுக் கைலாயத்துக்குச் சென்றான்.

இந்திரனை வரவேற்ற ருத்திரன், “என்ன விஷயமாக வந்திருக்கிறாய்?” என்று கேட்டார். நடந்தவற்றைச் சொன்ன இந்திரன், “நீங்கள் திருமாலோடு போர் புரியத்  தயாரா?” என்று கேட்டான். “நான் எப்போதும் ராம நாமத்தை ஜபம் செய்து கொண்டிருக்கிறேன். நான் எப்படித் திருமாலை எதிர்த்துப் போர் புரிய முடியும்? அது  முறையல்ல!” என்றார் ருத்திரன். ஆனாலும் இந்திரன் விடவில்லை. “உங்களை நம்பி நான் நாரதரிடம் வாக்களித்து விட்டேன். தயவு செய்து எனக்காக நீங்கள்  போர் புரிய வாருங்கள்!” என மன்றாடினான்.

திருமாலுடன் போர் புரியும் எண்ணம் இல்லாவிட்டாலும், இந்திரனின் வற்புறுத்தலால், “விஸ்வகர்மாவிடம் சொல்லி எனக்காக ஒரு புதிய வில்லைத் தயாரிக்கச்  சொல். அந்த வில்லைக் கொண்டு நான் போர் புரிகிறேன்!” என்றார் ருத்திரன். விஸ்வகர்மாவும் தனது மந்திர பலத்தால் பெரும் வில் ஒன்றைத் தயாரித்தார்.  அதை ஒரு வண்டியில் வைத்து முன்னூறு பேர் தள்ளிக்கொண்டு வந்தார்கள். அந்தப் பெரிய வில்லை அனாயாசமாக எடுத்து நாண் ஏற்றினார் ருத்திரன். “இந்த  வில் மிகச்சிறப்பாக உள்ளதே!” என விஸ்வகர்மாவைப் பாராட்டினார்.

“எங்கள் ருத்திரன் போருக்குத் தயாராகிவிட்டார். உங்கள் திருமால் தயாரா?” என்று நாரதரிடம் கேட்டான் இந்திரன். நாரதர் திருமாலைத் தேவலோகத்துக்கு  அழைத்து வந்தார். அவரிடம், “உங்களுக்கும் ருத்திரனுக்கும் வில் யுத்தம் வைத்துப் பார்த்து, உங்களில் யார் பெரியவர் என்று அறிய விரும்புகிறேன்!” என்றான்  இந்திரன். அனாவசியமான இந்தப் போரைத் தவிர்க்க எண்ணிய திருமால், “ருத்திரன் இப்போருக்குச் சம்மதம் தெரிவித்தாரா?” என்று கேட்டார். “அவர்  வில்லுடன் தயாராக இருக்கிறார்!” என இந்திரன் சொல்லவே வேறு வழியின்றித் திருமாலும் சம்மதித்தார்.

“திருமாலே! நீங்கள் உங்களது வில்லான சார்ங்கத்தை இப்போரில் பயன்படுத்தக் கூடாது. அதற்குப் பதில் விஸ்வகர்மா ஒரு வில்லைத் தயாரித்துத் தருவார்.  அதையே நீங்கள் பயன்படுத்த வேண்டும்!” என்றான் இந்திரன். அதற்கும் சம்மதித்தார் திருமால். திருமாலை எதிர்த்துப் போர்புரியும் மனமில்லாமல் ருத்திரனும்,  ருத்திரனை எதிர்த்துப் போர்புரியும் மனமில்லாமல் திருமாலும் போர்க்களத்துக்கு வந்தார்கள். ருத்திரன் தனது வில்லைத் தூக்கிப் பிடித்து அதில் அம்பைப்  பூட்டினார். இந்த யுத்தம் எப்படியாவது நடைபெறாமல் நின்றுபோக வேண்டுமென மனதாற எண்ணினார் ருத்திரன்.

விஸ்வகர்மா தந்த வில்லைத் தன் கையில் எடுத்த திருமால், நாணேற்றி, அந்த நாணை இழுத்தார். அந்த நாணிலிருந்து எழும்பிய ‘டங்கார’ ஒலியால் ருத்திரன்  கையில் இருந்த வில் முறிந்து விட்டது. “திருமால் வெற்றி பெற்றார்!” எனத் தேவர்கள் தீர்ப்பளித்தார்கள். “நல்ல வேளை! போர் நடைபெறாமல் நின்று  போனது!” என ருத்திரனும் மனம் மகிழ்ந்தார். அந்தப் போரில் ருத்திரன் கையிலிருந்த வில் தான் பின்னாளில் ஜனகனிடம் வந்து சேர்ந்தது.

அந்த வில்லை முறித்து ராமன் சீதையை மணம் புரிந்தான் என்பது வரலாறு. இவ்வாறு ருத்திரன், பிரம்மா, இந்திரன் போன்ற அனைத்துத் தேவர்களையும்  வீழ்த்தக்கூடிய வல்லமை படைத்தவராகத் திருமால் விளங்குவதால், அவர் ‘ஜேதா’ என்றழைக்கப்படுகிறார். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 150-வது  திருநாமம். ‘ஜேதா’ என்றால் அனைவரையும் வெல்பவன் என்று பொருள். “ஜேத்ரே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் பக்தர்கள், தங்கள் வாழ்வில்  மேற்கொள்ளும் எல்லாச் செயல்களிலும் வெற்றி பெறும்படித் திருமால் அருள்புரிவார்.

151. விச்வயோனயே நமஹ (Vishwayonayey namaha)

பதின்மூன்றாம் நூற்றாண்டு. கடலூரை அடுத்து உள்ள திருவஹீந்திரபுரத்தில் வேதாந்த தேசிகன் வாழ்ந்த காலம். அவ்வூரில் உள்ள ஒரு வேத பாடசாலையில்  தேவநாதன் என்ற சிறுவன் வேதம் கற்று வந்தான். அவனது ஆசிரியர்கள் எவ்வளவோ பயிற்சிகள் அளித்தும், தேவநாதனால் சரிவர வேதத்தை உச்சரிக்க  முடியவில்லை. ஒரு நிலையில், “தேவநாதா! பிரம்மா உன்னைப் படைக்கும் போது, உன் தலையெழுத்தைச் சரியாக எழுதவில்லை! உனக்குக் கல்வி அறிவே  உண்டாகாது என்றும் உன் வாயில் வேதமே வராது என்றும் அவர் உன் தலையில் எழுதிவிட்டார் போலும்! அந்தத் தலையெழுத்தை மாற்றுவது என்பது யாராலும்  இயலாத காரியம். எனவே இனிமேல் நாங்கள் எவ்வளவு பயிற்சிகள் அளித்தாலும் பயனில்லை!” என்று கூறி அவனைப் பாடசாலையிலிருந்து வெளியேற்றி  விட்டார்கள்.

அவன் அழுது கொண்டே திருவஹீந்திரபுரத்திலுள்ள ஔஷதகிரி என்னும் மலைக்குச் சென்றான். அந்த மலைக்குமேல் திருமால், குதிரை முகத்துடன் லட்சுமி,  ஹயக்ரீவராகக் கோயில் கொண்டுள்ளார். அந்த லட்சுமி, ஹயக்ரீவர் சந்நதியின் பிராகாரத்தில் அமர்ந்து கொண்டு தேவநாதன் அழுது கொண்டிருந்தான். “என்  தலையெழுத்தை மாற்ற வழியே இல்லையா?” எனப் புலம்பினான்.

அப்போது அங்கு வந்த வேதாந்த தேசிகன், “குழந்தாய்! ஏன் அழுகிறாய்?” என்று அவனிடம் கேட்டார். நடந்தவற்றையெல்லாம் சொன்னான் தேவநாதன்.  “இவ்வளவு தானே? பிரம்மா எழுதிய தலையெழுத்தை மாற்ற வழியுள்ளது. உன்னைப் படைக்கும் போது பிரம்மா தலையெழுத்தைச் சரியாக எழுதவில்லை என்று  நீ சொன்னாய் அல்லவா? பிரம்மாவையே படைத்தவர் ஒருவர் இருக்கிறார். அவர்தான் திருமால். அவருடைய அருள் இருந்தால், பிரம்மா எழுதிய  தலையெழுத்தையே மாற்றிவிடலாம்!” என்று அவனிடம் சொன்னார் தேசிகன். சிறுவன் முகத்தில் புன்னகை தவழத் தொடங்கியது. லட்சுமி ஹயக்ரீவர் சந்நதிக்கு  தேவநாதனை அழைத்துச் சென்றார் தேசிகன். “உனக்குக் கல்வி அறிவு உண்டாகவேண்டுமென ஹயக்ரீவரிடம் மனதாறப் பிரார்த்தனை செய்துகொள்!” என்று  அவனிடம் கூறினார். அவனும் இறைவனிடம் மனமுருகி வேண்டினான்.

ஹயக்ரீவரைப் பார்த்து தேசிகன் ஒரு ஸ்லோகத்தைச் சொன்னார்:

விலுப்த மூர்தன்ய லிபி க்ரமாணாம்
ஸுரேந்த்ர சூடாபத லாலிதானாம் |
த்வதங்க்ரி ராஜீவ ரஜ: கணானாம்
பூயான் ப்ரஸாதோ மயி நாத பூயாத் ||

இதன் பொருள்- யாருடைய பாத தூளியைத் தேவர்களும் தங்கள் தலையில் தாங்க நினைக்கிறார்களோ, யாருடைய பாத தூளி பிரம்மா எழுதிய  தலையெழுத்தையே மாற்ற வல்லதாக இருக்கிறதோ, அத்தகைய ஹயக்ரீவப் பெருமாளின் பாத தூளி எப்போதும் என் தலையில் இருந்து, பிரம்மா எழுதிய  தலையெழுத்தை மாற்றி அருளட்டும். அப்போது அர்ச்சகர் சிறுவனின் தலையில் ஹயக்ரீவரின் பாதுகையான சடாரியை வைத்தார்.

“இப்போது நீ பாடசாலைக்குச் செல்!” என்று சொன்னார் தேசிகன். மலையிலிருந்து இறங்கிப் பாடசாலைக்கு அவன் சென்றவாறே, அவனது குருமார்கள் அவனது  முகத்தில் புதுப்பொலிவு தென்படுவதைக் கண்டார்கள். அவனைப் பாடசாலையிலிருந்து விரட்டிய அவர்களே மீண்டும் சேர்த்துக் கொண்டார்கள். மறுநாள் முதல்  மிகச் சரியான ஸ்வரத்தோடும் உச்சரிப்போடும் வேதம் சொல்லத் தொடங்கினான் தேவநாதன். அவனது ஆற்றலைக் கண்டு அனைவரும் வியந்தார்கள்.

“தலையெழுத்து சரியில்லை”, “தலையெழுத்து சரியில்லை” என எல்லாரும் அச்சிறுவனைப் பற்றிச் சொன்னார்களே! அந்தத் தலையெழுத்து எப்படி மாறியது?  ராமனின் பாதுகையிலுள்ள தூளி பட்டவுடன் எப்படி அகலிகையின் தலையெழுத்து மாறியதோ, அதுபோல் ஹயக்ரீவரின் பாதுகை எப்போது சிறுவனது தலையில்  பட்டதோ, அப்போதே அவனது தலையெழுத்தும் மாறிவிட்டது!

இவ்வாறு படைப்புக் கடவுளான பிரம்மாவையே படைத்தவராகவும், பிரம்மா எழுதிய தலையெழுத்தையே மாற்றவல்லவராகவும் திருமால் திகழ்வதால் அவர்  ‘விஸ்வயோனி:’ என்றழைக்கப்படுகிறார். விஸ்வம் என்பது உலகைப் படைத்த பிரம்மாவைக் குறிக்கிறது. அந்த பிரம்மாவுக்கும் யோனியாகத் (காரணமாக)  திருமால் விளங்குவதால் ‘விஸ்வயோனி:’ என்று ஸஹஸ்ரநாமத்தின் 151-வது திருநாமம் அவரைத் துதிக்கிறது. “விச்வயோனயே நமஹ” என்று தினமும்  சொல்லி வரும் அன்பர்களின் தலையெழுத்தை நல்ல விதத்தில் திருமால் மாற்றியருளுவார்.

152. புநர்வஸவே நமஹ   (Punarvasavey namaha)

தாரகன் என்ற அசுரனுக்குத் தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என மூன்று மகன்கள் இருந்தார்கள். அவர்கள் பிரம்மாவைக் குறித்துக் கடுந்தவம் புரிந்து,  வானில் பறக்கும் மூன்று மாநகரங்களைப் பெற்றார்கள். மேலும், தங்கள் மூவருக்கும் சாகா வரம் வேண்டுமென்றும் பிரம்மாவிடம் வேண்டினார்கள். ஆனால் சாகா  வரம் என்று ஒரு வரமே இல்லையெனக் கூறி பிரம்மா மறுக்கவே, வானில் பறந்து கொண்டிருக்கும் மூன்று நகரங்களும் ஒரே நேர்க்கோட்டில் வரும் போது, ஒரே  அம்பினால் மூவரையும் தாக்கினால் மட்டுமே தங்களுக்கு மரணம் ஏற்பட வேண்டுமென வரம் பெற்றார்கள்.

அந்த மூன்று அசுரர்களும் தேவர்களையும் முனிவர்களையும் சொல்ல வொண்ணாத துயருக்கு உள்ளாக்கினார்கள். அதனால் தேவர்களும் முனிவர்களும்  சிவபெருமானின் உதவியை நாடினார்கள். “சரியான தருணம் வரும்போது அந்த மூன்று அசுரர்களையும் நான் அழிப்பேன்!” என்று சிவபெருமான் அவர்களுக்கு  உறுதியளித்தார். அந்த மூன்று நகரங்களும் ஒரே நேர்க்கோட்டில் வரும் சமயம் நெருங்கியது. அப்போது சிவபெருமான் பூமியைத் தனது தேராக்கினார்.  பிரம்மாவைத் தேரோட்டியாக அமர்த்தினார். சூரியனையும் சந்திரனையும் தேர்ச்சக்கரங்களாக ஆக்கினார். மேரு மலையை வில்லாக்கினார். வாசுகியெனும் பாம்பை  அதில் நாணாகக் கட்டினார்.

அந்த வில்லில் பூட்டுவதற்குரிய சரியான அம்பு அவருக்குத் தேவைப்பட்டது. அந்த அம்பு எப்படி இருக்கவேண்டும் என்றால், சேராத பொருள்களையும் சேர்க்க  வல்லதாக இருக்க வேண்டும். அப்போது தான் தனித்தனியே பறந்து செல்லும் இந்த நகரங்களை ஒன்றாகச் சேர்த்து அந்த அம்பால் வீழ்த்த முடியும். அவ்வாறு  சேராததைச் சேர்க்கும் அம்புக்கு எங்கே செல்வது என யோசித்தார் சிவபெருமான். திருமாலுக்குத் தான் சேராதவற்றைச்  சேர்க்கும் ஆற்றல் உண்டு.

“நல்குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமுமாய்
வெல்பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய்ப்
பல்வகையும் பரந்த பெருமான் என்னை ஆள்வானைச்
செல்வம் மல்குகுடி திருவிண்ணகர்க் கண்டேனே”

என்று எதிர்மறையான பொருள்களையும் திருமால் இணைப்பதாக நம்மாழ்வார் பாடியுள்ளார். எனவே திருமாலையே தனது வில்லில் அம்பாக இருக்கும்படிப்  பரமசிவன் வேண்டத் திருமாலும் சம்மதித்தார். மூன்று நகரங்களும் ஒரே நேர்க்கோட்டில் வந்தன. அப்போது மேருவெனும் வில்லில் வாசுகியெனும் நாணோடு  இணைத்துத் திருமாலை அம்பாகப் பூட்டினார் சிவபெருமான். அப்போது சிவபெருமானுக்குள் திருமால் நுழைந்தார். அனைத்துலகங்களையும் உயிர்களையும்  படைத்த போது, அவற்றின் ஆதாரமாக இருந்து அவற்றைத் தாங்குவதற்காகத் திருமால் அவற்றுக்குள் நுழைந்தார். அவ்வாறு நுழைந்த திருமால் பிரம்மா, சிவன்,  இந்திரன் தொடங்கி அனைத்து உயிர்களுக்குள்ளும் திருமால் உறைகிறார்.

இது அவரது முதல் நுழைவாகும். இப்போது முப்புரங்களை எரித்தலாகிய குறிப்பிட்ட இந்தச் செயலுக்காக இரண்டாவது முறையாக சிவபெருமானுக்குள்  நுழைந்தார் திருமால். அவ்வாறு உள்ளே நுழைந்த திருமால் தந்த வல்லமையால், திருமாலையே அம்பாகப் பரமசிவன் எய்திட, அந்த அம்பு முப்புரங்களாகிய  அம்மூன்று நகரங்களையும் அழித்தது. திரிபுர சம்ஹாரம் எனப்படும் இச்சரித்திரத்தைத் திருமங்கையாழ்வார்,

“குழல்நிற வண்ண நின் கூறு கொண்ட
தழல்நிற வண்ணன் நண்ணார் நகரம்
விழ நனி மலை சிலை வளைவு செய்து அங்கு
அழல் நிற அம்பு அது ஆனவனே”

என்று பாடியுள்ளார். ‘வஸு:’ என்றால் உள்ளே நுழைந்து வாசம் செய்பவன் என்று பொருள். எல்லா உயிர்களுக்குள்ளும் திருமால் வசிக்கிறார் என்பதை இது  குறிக்கிறது. ஏற்கெனவே அனைத்துயிர்களுக்குள்ளும் தான் இருந்தாலும், திரிபுர சம்ஹாரம் போன்ற குறிப்பிட்ட செயல்களை நிறைவேற்றுவதற்காகப் பரமசிவன்  போன்ற தேவர்களுக்குள் இரண்டாவது முறையாகத் திருமால் நுழைகிறார். ‘புன:’ என்றால் மீண்டும் என்று பொருள். அப்படி மீண்டும் தேவர்களுக்குள் நுழைந்து  தான் விரும்பிய செயலைச் சாதிப்பதால் ‘புனர்வஸு:’ என்று திருமால் அழைக்கப்படுகிறார். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 152-வது திருநாமமாகும்.  “புனர்வஸவே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு எதையும் தாங்கும் உடல்வலிமையையும் மனவலிமையையும் திருமால் தந்தருள்வார்.

153. உபேந்த்ராய நமஹ  (Upendraaya namaha)

(‘உபேந்த்ர:’ என்ற 153-வது திருநாமம் தொடங்கி, ‘நியம:’ என்ற 163-வது திருநாமம் வரையிலுள்ள 11 திருநாமங்கள் திருமாலின் வாமன அவதாரத்தின்  பெருமையை விளக்க வந்தவை) ஆயர்கள் இந்திரனுக்கு விழா எடுப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார்கள். அப்போது குறுக்கிட்ட கண்ணன்,  “எதற்காக இந்த விழா எடுக்கிறீர்கள்?” என்று கேட்டான். “இந்திரன் தான் நமக்கு மழை தருகிறான். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இவ்விழா  அனுசரிக்கப்படுகிறது!” என்றார் நந்தகோபர்.

அதற்குக் கண்ணன், “மழை பொழிய வேண்டியது இந்திரனின் கடமையாயிற்றே! அதற்காக நீங்கள் ஏன் விழா என்ற பெயரில் கையூட்டு வழங்குகிறீர்கள்?” என்று  கேட்டான். ஆயர்கள் பதில் உரைக்க முடியாமல் திகைத்தனர். “இவ்வாறு இந்திரனுக்கு விழா எடுப்பதற்குப் பதிலாக கோவர்த்தன மலைக்கு விழா எடுங்கள். அந்த  மலை இருப்பதால் தான் மேகங்கள் இங்கு வந்து மழை பொழிகின்றன. நம் ஆடு, மாடுகள் அந்த மலைக்குத் தான் மேய்ச்சலுக்குச் செல்கின்றன. சிறுவர்களான  நாங்களும் அங்கு சென்று தான் விளையாடுகிறோம். இப்படிப் பலவிதமான நன்மைகள் செய்யும் அந்த கோவர்த்தன மலைக்குப் படையல் இடுவதே  சிறந்ததாகும்!” என்று சொன்னான் கண்ணன்.

கண்ணனின் பேச்சை அப்படியே பின்பற்றி, ஆயர்கள் கோவர்த்தன மலைக்குப் பூஜை செய்தார்கள். கண்ணனே ஒரு பேருருவம் எடுத்துக் கொண்டு, “நான் தான்  கோவர்த்தன மலைக்கு அதிபதியான தேவதை!” என்று சொல்லி, அவர்கள் படையலிட்ட அனைத்துப் பண்டங்களையும் உண்டான். ஆயர்களும் மகிழ்ச்சியாக வீடு  திரும்பினார்கள். சிறிது நேரத்தில் மழைத் தூறல் போடவே ஆயர்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தார்கள்.

“கோவர்த்தன மலைக்குப் பூஜை செய்த சிறிது நேரத்திலேயே மழை வருகிறதே!” என மனம் மகிழ்ந்தார்கள். ஆனால் போகப் போக அந்தத் தூறல் கல் மழையாக  மாறத் தொடங்கியது. தனக்குச் செய்ய வேண்டிய பூஜையைச் செய்யாததால், ஆயர்கள் மேல் கோபம் கொண்டு இந்திரன் பொழிந்த கல் மழை அது என அவர்கள்  உணரத் தொடங்கினார்கள். கண்ணனின் திருவடிகளைச் சரண்புகுந்தார்கள்.

ஆயர்களையும் ஆநிரைகளையும் காக்கும் பொருட்டுக் கண்ணன் கோவர்த்தன மலையைக் குடையாகத் தூக்கிப் பிடித்தான். இந்திரன் ஒரு வாரம் கடும் மழையைப்  பொழிவித்தான். ஒரு வார காலமும் கண்ணனும் கோவர்த்தனக்கிரியைத் தாங்கிக் கொண்டு ஆய்ப்பாடியைக் காத்தான். அதற்குமேல் மழை பொழிவிக்க  இந்திரனிடம் தண்ணீர் இல்லை. அந்நிலையில் தனது தவறை உணர்ந்தான் இந்திரன். “திருமாலின் அவதாரமாகிய கண்ணனிடத்தில் பிழை இழைத்து  விட்டோமே!” என்ற அச்சத்தில் காமதேனுவுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு ஆய்ப்பாடிக்கு வந்தான் இந்திரன்.

காமதேனுவைப் பார்த்துக் கண்ணன் முகம் மலர்ந்த அளவில், இந்திரனும் கண்ணனின் கால்களைப் பிடித்துக் கொண்டு தன்னை மன்னிக்கும்படி வேண்டினான்.  கண்ணனும் இந்திரனை மன்னித்தான். கோவர்த்தன மலையைக் கீழே வைத்தான். அப்போது இந்திரன், ஆயர்களையும் ஆநிரைகளையும் காத்துத் தந்த  கண்ணபிரானைக் கௌரவிக்கும் விதமாகக் கண்ணனுக்குக் கோவிந்த பட்டாபிஷேகம் செய்து வைத்தான். அத்தோடு மட்டுமின்றி, ‘உபேந்திரன்’ என்ற  பட்டத்தையும் கண்ணனுக்கு அளித்தான் இந்திரன். “ஆஹா! அருமையான பட்டம்!” என்று சொல்லிக் கண்ணனும் ஏற்றான்.

ஆனால் சற்று சிந்தித்த இந்திரன், “கண்ணா! மீண்டும் ஒரு பிழை செய்து விட்டேன்! ‘உபரீந்திரன்’ (உபரி+இந்திரன்) - அதாவது ‘இந்திரர்களுக்கெல்லாம்  இந்திரன்’ என்று பட்டமளிக்க நினைத்தேன். ஆனால் பதற்றத்தில், ‘உபேந்திரன்’ (உப+இந்திரன்) - ‘இந்திரனின் உதவியாளன்’ என்று உளறி விட்டேனே!  என்னை மீண்டும் மன்னித்து விடு!” என்றான்.அதற்குக் கண்ணன், “தவறில்லை இந்திரா! நான் வாமனனாக உன் தாய் அதிதியின் வயிற்றில் பிறந்தேன்  அல்லவா? அந்த அவதாரத்தில் நீ எனக்கு அண்ணன்.

நான் உனக்குத் தம்பி. ‘உப’ என்ற சொல்லுக்குத் தம்பி என்ற பொருளும் உண்டு. உபேந்திரன் என்றால் இந்திரனின் தம்பியான வாமன மூர்த்தியைக் குறிக்கும்.  நீ அளித்த பட்டம் எனது முன் அவதாரத்தைக் குறிப்பிடுவதாக நான் எடுத்துக் கொள்கிறேன்! நீ வருந்தாதே!” என்றான். கண்ணன் கூறியது போல், இந்திரனின்  தம்பியான வாமன மூர்த்தியாக அவதரித்தமையால் ‘உபேந்த்ர:’ என்று திருமால் அழைக்கப்படுகிறார். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 153-வது திருநாமம்.  “உபேந்த்ராய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு எப்போதும் திருமால் பக்கபலமாக இருந்து அருள்புரிவார்.

154. வாமனாய நமஹ (Vaamanaaya namaha)

இந்திரனின் தலைமையில் தேவர்களும், மகாபலி தலைமையில் அசுரர்களும் ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போர் புரிந்தார்கள். அந்தப் போரில் இந்திரனின்  வஜ்ராயுதத்தால் தாக்கப்பட்டு மகாபலி இறந்தான். இறந்து போன மகாபலியின் சடலத்தை அசுரர்கள் தங்கள் குருவான சுக்கிராச்சாரியாரிடம் கொண்டு  சென்றார்கள். சுக்கிராச்சாரியார் தமது மந்திர பலத்தால் இறந்து போன மகாபலியை மீண்டும் உயிர்த்தெழச் செய்தார். மகாபலிக்காகப் பெரும் வேள்வி செய்தார்  சுக்கிராச்சாரியார். அந்த வேள்வித் தீயில் இருந்து ஆயுதங்களும், தேர்களும், படைகளும் உருவெடுத்து வந்தன. புதிய உத்வேகத்துடன் ஃபீனிக்ஸ் பறவையைப்  போலப் புறப்பட்டு இந்திரனைத் தாக்க வந்தான் மகாபலி.

அவன் வரும் வேகத்தைக் கண்டு அஞ்சிய தேவர்கள், தேவலோகத்தை விட்டு ஓடினார்கள். “இனி நானே அனைத்துலகுக்கும் அரசன்!” என்று சொன்ன மகாபலி,  இந்திரனின் ஆசனத்தில் அமர்ந்து கொண்டான். தேவர்களின் தாயான அதிதி தேவி, தன் கணவரான கச்யப முனிவரிடம், “நம் மகன்களான தேவர்கள் எங்கு  சென்றார்கள் என்றே தெரியவில்லையே! அவர்களின் இருப்பிடத்தை எவ்வாறு கண்டறிவது? மேலும், மகாபலியை வீழ்த்தி தேவலோகத்தைத் தேவர்கள்  கைப்பற்றி, இழந்த செல்வத்தை மீண்டும் பெற என்ன வழி?” என்று கேட்டாள்.

“நீ பன்னிரண்டு நாட்களுக்குப் பால் மட்டும் அருந்தி பயோ விரதம் என்ற விரதத்தை அனுஷ்டித்தால், அதனால் திருமால் மனமுகந்து உனக்கு அருள்புரிவார்!”  என்றார் கச்யபர். அதிதி தேவியும் அவ்வாறே பயோ விரதத்தைப் பன்னிரண்டு நாட்கள் அனுஷ்டித்தாள். விரதம் பூர்த்தியானதும் திருமால் அவளுக்குக்  காட்சியளித்து, “நான் உனக்கு மகனாக அவதரிப்பேன்!” என்று வாக்களித்தார்.

புரட்டாசி மாதம் திருவோண நட்சத்திரத்தில் அதிதியின் மகனாகக் குள்ளமான உருவத்துடன் திருமால் அவதாரம் செய்தார். குள்ளமான தோற்றம்  கொண்டிருந்தமையால் ‘வாமனர்’ என்று அவர் அழைக்கப்பட்டார். கையில் கமண்டலமும் மார்பில் மாந்தோலும் ஏந்தியபடி மகாபலியின் யாக சாலைக்குச்  சென்றார் வாமனர். நர்மதா நதிக்கரையில் மகாபலிச் சக்கரவர்த்தி யாகம் செய்து கொண்டிருந்தான். யாசகம் கேட்டு வந்த பிரம்மச்சாரியாக உள்ளே நுழைந்த  வாமனரின் திருமேனி ஒளியைக் கண்டு, அங்கிருந்த அனைவரும் பிரமித்துப் போனார்கள். “வாருங்கள்! வாருங்கள்! நீங்கள் வந்தமையால் என் யாகம் வெற்றி  அடைந்தது!” எனச் சொல்லி அவரை வரவேற்று அவருக்கு ஆசனம் அளித்த மகாபலி, அவரது கால்களைக் கழுவிவிட்டான். அவர் கால் கழுவிய தீர்த்தத்தைத்  தன் தலைமேல் தெளித்துக் கொண்டான்.

“உங்களுக்கு என்ன வேண்டுமென்று கேளுங்கள்! நான் தருகிறேன். என்னிடம் தானம் பெற்ற பின் நீங்கள் வேறு யாரிடமும் தானம் கேட்க வேண்டிய அவசியமே  ஏற்படக் கூடாது! கேளுங்கள்!” என்றான் மகாபலி. “எனக்கு என் காலால் மூன்றடி நிலம் மட்டும் போதும்!” என்றார் வாமனர். சிரித்தான் மகாபலி. மார்பைத்  தட்டிக் கொண்டு, “அனைத்துலகங்களுக்கும் சக்கரவர்த்தியான இந்த மகாபலியிடம் வந்து கேவலம் மூன்றடி நிலம் கேட்கிறீர்களே!” என்று ஆணவத்துடன்  சொன்னான். “முதலில் மூன்றடி நிலம் தாருங்கள்! அப்புறம் பார்க்கலாம்!” என்றார் வாமனர்.

தன் மனைவி விந்தியாவளியை அழைத்தான் மகாபலி. தங்கக் கமண்டலத்தில் அவள் தண்ணீர் எடுத்து வந்தாள். தாரை வார்த்துக் கொடுக்கப் போனான் மகாபலி.  அப்போது “நில்!” என்று தடுத்தார் அவனது குருவான சுக்கிராச்சாரியார். “வந்திருப்பவன் நாராயணன். அதை அறியாமல் நீ அவனுக்குத் தானம் செய்யப்  பார்க்கிறாய். நீ அனைத்துச் செல்வங்களையும் இழந்து விடுவாய்!” என எச்சரித்தார்.

ஆனால் மகாபலியோ, “பரவாயில்லை! நான் சொன்ன வாக்கை மீற மாட்டேன். இவருக்கு நான் தானம் செய்தால், திருமாலுக்கே தானம் செய்தவன் என்ற  பெருமை எனக்கு ஏற்படுமல்லவா? அதனால் தானம் கொடுத்தே தீருவேன்!” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தான். “நீ எல்லாச் செல்வங்களையும் இழப்பாய்!”  என்று சுக்கிராச்சாரியார் சபித்தார்.மகாபலி வாமன மூர்த்திக்குத் தாரை வார்த்துக் கொடுத்தான். அவன் தாரை வார்த்துத் தந்த தீர்த்தம் வாமன மூர்த்தியின்  கையில் பட்டவாறே, கிடுகிடுவென வளரத் தொடங்கினார் வாமனர்.

குள்ள வாமனராக வந்து, பின் திரிவிக்கிரமனாகப் பேருருவம் கொண்டு உலகை அளந்த விதத்தைப் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் என்னும் திவ்வியக்கவி மிக  அழகாக வர்ணிக்கிறார்:

“முன்னம் குடைபோல் முடிநாயக மணிபோல்
மன்னும் திலகம்போல் வாள் இரவி - பொன்னகலம்
தங்கு கௌத்துவம் போலும் உந்தித் தடமலர் போல்
அங்கண் உலகளந்தாற்கு ஆம்.”

முதலில் வாமன மூர்த்தியின் தலைக்கு மேல் குடைபோல் தெரிந்ததாம் சூரியன். வாமனர் வளர வளர, அவரது கிரீடத்தில் பதித்த மணிபோல் சூரியன் தெரியத்  தொடங்கியது. மேலும் அவர் வளரவே, அவர் நெற்றியிலுள்ள திலகம் போல் இருந்தது சூரியன். இன்னும் வளர்ந்திட, அவரது நெஞ்சில் அணிந்திருக்கும்  கௌஸ்துப மணிபோல் தெரிந்தது சூரியன். இன்னமும் வளர, அவரது நாபிக் கமலம் போல் தெரியத் தொடங்கியது சூரியன். இவ்வாறு உலகளந்த பெருமாள்  மெல்ல மெல்ல சூரியனைத் தாண்டி வளர்ந்து கொண்டே போனார் என்பதைக் கவி நயத்துடன் தெரிவிக்கிறார்.

ஓரடியால் மண்ணுலகையும், மற்றோர் அடியால் விண்ணுலகையும் அளந்து விட்டு, மூன்றாவது அடியை எங்கே வைப்பதென மகாபலியிடம் கேட்டார் திருமால்.  அப்போது மகாபலி, தான் அகங்காரத்தை விட்டதற்கு அடையாளமாகத் தன் தலையிலிருந்து கிரீடத்தை அகற்றி, “என் தலைமேல் வைத்திடுங்கள்!” என்று  உலகளந்த பெருமாள் முன் தலைகுனிந்து நின்றான். தன் திருவடியை அவன் தலைமேல் பதித்து அவனைப் பூமிக்குக் கீழே உள்ள சுதல லோகத்துக்கு  அனுப்பினார் திருமால்.

திருமால் வாமனாவதாரம் எடுக்கும் முன், கச்யபர் தேவர்களிடம், “வாமன மூர்த்தி இந்திரனின் யாகசாலைக்குச் செல்லும் போது அங்கே நீங்கள் புல், செடி,  கொடி, மரம், விலங்கு, பறவை என ஏதோ ஒரு வடிவில் இருங்கள்!” என அறிவுறுத்தியிருந்தார். அவ்வாறே தேவர்களும் பலவிதமான வடிவங்களில்  மகாபலியின் யாகசாலையில் ஒளிந்திருந்தார்கள். வாமன மூர்த்தியின் திருமேனி ஒளி செடி கொடி வடிவில் இருந்த தேவர்களின் மேல் பட்டவுடனேயே, அவர்கள்  இழந்த செல்வத்தையும், தேவலோக ராஜ்ஜியத்தையும் பெற்றுவிட்டார்கள்.

மகாபலி திருமாலால் தண்டிக்கப்பட்டதாக நாம் நினைக்கிறோம். அதுவும் தவறு. வாமனரின் திருமேனி ஒளி மகாபலி மேல் பட்டதன் விளைவாக, பூமிக்குக் கீழே  உள்ள சுதலம் எனும் லோகத்தில் சிறந்த பதவியைப் பெற்றான் மகாபலி. அவன் ஏழு சிரஞ்ஜீவிகளுள் ஒருவனுமானான். அடுத்த கல்பத்தில் இந்திரப் பதவியும்  அவனுக்குக் கிட்டும் என்று திருமால் உறுதி அளித்தார்.

‘வாமன:’ என்றால் ‘தன் திருமேனி ஒளியால் அனைவருக்கும் நன்மையை உண்டாக்குபவர்’ என்றும் பொருள். “த்ருஷ்ட்யா ஸ்வகாந்த்யா: வாமானி ஸுகானி  நயதீதி ய: ஸ வாமன:” என்கிறது வடமொழி நிகண்டு. (எனினும், ‘வாமன:’ என்ற சொல் உலக வழக்கில் ‘குள்ளமானவர்’ என்ற பொருளிலும்  வழங்கப்படுகிறது). தேவர்கள், அசுரர்கள் என்ற பாகுபாடு இன்றி அனைவருக்கும் நன்மையையே செய்தது வாமன மூர்த்தியின் திருமேனி ஒளி.

தேவர்களும் இழந்த செல்வத்தைப் பெற்றார்கள், மகாபலியும் சுதல லோகத்தில் நற்பதவியையும், சிரஞ்ஜீவியாக வாழும் பேற்றையும் பெற்றான். இவ்வாறு  அனைவருக்கும் நன்மை செய்யும் திருமேனி ஒளியை உடையவராக விளங்குவதால், திருமால் ‘வாமன:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே விஷ்ணு  ஸஹஸ்ரநாமத்தின் 154-வது திருநாமம்.“வாமனாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் தாங்கள் இழந்த செல்வங்கள் அனைத்தையும் மீண்டும்  பெறும்படித் திருமால் அருள்புரிவார்.

திருக்குடந்தை டாக்டர் உ வே வெங்கடேஷ்

(தொடர்ந்து நாமம் சொல்வோம்)

Tags : Ananthan ,
× RELATED அனந்தனுக்கு 1000 நாமங்கள்!