×

காஸ் விலை அதிரடி உயர்வு இனி விறகு அடுப்பு தான்; புலம்பும் இல்லத்தரசிகள்…

திருச்சி : வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை மாதந்தோறும் உயர்ந்து வருகிறது. இன்று அதிரடியாக ரூ.50 அதிகரிக்கப்பட்டது. புதிய விலை உயர்வுப்படி சென்னையில் ரூ. 1,068, திருச்சியில் ரூ.1,099ஆக விலை உயர்ந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மயிலாடுதுறை ஜெயந்தி: சிலிண்டர் விலையை இப்படி உயர்த்திக்கொண்டே போனால் ஏழை மக்கள் நாங்கள் என்ன செய்வது. சிலிண்டர் நான் வாங்க ஆரம்பிக்கும் போது, ரூ.410ஆக இருந்தது. இப்போது 3 மடங்கு உயர்ந்துவிட்டது. போதிய வருவாய் இல்லாததால் இதை சமாளிக்க முடியவில்லை. ஒன்றிய அரசு சலுகைகள் தருகிறோம் என்று கூறிவிட்டு அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தி வருகிறது. இதனால் விழிபிதுங்கி உள்ளோம். கரூர் ஜீவா: காஸ் சிலிண்டர் விலையை ஒன்றிய அரசு மாதந்தோறும் ரூ.50 உயர்த்தி வருகிறது. மானியத்தையும் நிறுத்தி விட்டது. எங்களுக்கு வருமானமும் குறைவு. ஒரு மூட்டை அரிசிக்கு இணையாக சிலிண்டர் விலையும் அதிகரித்து விட்டது. இப்படியே ஏறினால் விறகு அடுப்பை தான் பயன்படுத்த வேண்டும். ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கையால் ஏழை, நடுத்தர மக்களாகிய நாங்கள் தான் பாதிக்கப்படுவோம். தஞ்சை பூதலூர் சாந்தி: கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காலத்தில் தொழில், வேலை முடங்கி வருமானம் இன்றி  இருந்தோம். இப்போது வருமானம் குறைவாகி விட்டது. மற்ற பொருட்கள் விலையும் அதிகரித்து வருகிறது. இந்த விலை உயர்வை எங்களால் தாங்க முடியாது. சிலிண்டர் விலையை குறைக்க உடனடியாக ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்சி காமீலா: நான் ரூ.310லிருந்து சிலிண்டர் வாங்குகிறேன். கடந்த 4 வருடத்தில் சிலிண்டர் விலை பல மடங்கு உயர்ந்து இன்று ரூ.1099ஆக உயர்ந்துள்ளது. டெலிவரி மேனுக்கும் சேர்த்து தற்போது ரூ.1150 ஆக உயர்ந்துள்ளது. இது என்னை போன்ற பெண்களுக்கு பெரும் சுமையையும், பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காசுக்காக ஒவ்வொரு மாதமும் ஒரு தொகையை ஒதுக்க வேண்டியுள்ளது. அன்றாட கூலியான எங்களுக்கு இது பெரிய தொகை. சலுகைகள் தருகிறோம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்த ஒன்றிய அரசு காஸ், பெட்ரோல், டீசல் என இப்படி அத்தியாவசிய பொருட்களை உயர்த்தி ஏழை மக்களை சிரமப்படுத்தி வருகிறது. போதிய வருவாய் இல்லாதால் குடும்பத்தை சமாளிக்க சிரமப்படுகிறோம். காஸ் மூலம் டீ, சுடுதண்ணீர் போட கூட யோசிக்கும் நிலை ஏற்பட்டு விட்டது. மின் அடுப்புகளை பயன்படுத்தினால் மின் கட்டணம் ஏறும்.  இப்படியே போனால் விறகு அடுப்பு மீண்டும் திரும்பும் நிலைக்கு தள்ளப்படுவோம். எனவே ஒன்றிய  அரசு சிலிண்டர் விலையை உடனடியாக குறைக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர். …

The post காஸ் விலை அதிரடி உயர்வு இனி விறகு அடுப்பு தான்; புலம்பும் இல்லத்தரசிகள்… appeared first on Dinakaran.

Tags :
× RELATED வலுக்கும் எதிர்ப்பு!: இ-பாஸ் முறையை...